வெருளி நோய்கள் 699-703: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 694-698: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 699-703
699. கழித்தல் வெருளி – Subtractionphobia
கழித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் கழித்தல் வெருளி.
கணக்கு வெருளி உள்ளவர்களுக்குக் கழித்தல் வெருளியும் வருகிறது. கடன்வாங்கிக் கழித்தல் முதலான கணக்கு புரியாமல் கழித்தல் கண்டு அஞ்சுகின்றனர். எனவே, கழித்தல் என்றாலே தேவையற்ற காரணமற்ற அளவுகடந்த அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
700. கழிவறை வெருளி – Toualetaphobia
கழிவறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கழிவறை வெருளி.
தூய்மையின்மை, நாற்றம், நோய்த்தொற்று குறித்த கவலை போன்றவற்றால் கழிவறைபற்றிய அளவுகடந்த தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
Toualet என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கழிவறை.
காண்க: பொதுக்கழிப்பிட வெருளி(Koinoloutrophobia/Forlatriphobi)
00
701. கழிவுத்தாள் வெருளி –Finchartaphobia
கழிவறைக்குச் சென்றதும் கழி துடைத் தாள் தீரும் நிலையில் இருப்பது குறித்து வரம்பற்ற பேரச்சம் கொள்வது கழிவுத்தாள் வெருளி.
கழிவறையைப் பயன்படுத்தும் பொழுது துடை தாள் தீர்ந்தது என்றால் எப்படித் தூய்மை செளய்து வெளியேறுவது என்று பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
இத்தாலிய மொழியில் finire என்றால் முடிவு என்றும் CHARTAE-தாள் ஏடுகள் என்றும் பொருள்.
00
702. கழுகு வெருளி – Aetophobia
கழுகு மீதான அளவுகடந்த பேரச்சம் கழுகு வெருளி.
கழுகுகள் கோழிக்குஞ்சு முதலிய பறவைகளைத் தூக்கிச் செல்வதைப் பார்த்த சிறுவர்கள் தங்களையும் தூக்கிச் சென்று விடும் என்று அச்சம் கொள்கிறார்கள். இதுவே பேரச்சமாக வளருகிறது. சில நாட்டு உழவர்கள், வெண்வால் கழுகுகள் ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிச் சென்று விடும் என்று அஞ்சுகிறார்கள். எனவே, கழுகுகள் குறித்த காரணமற்ற மிகையான பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
பறவை வெருளி(Ornithophobia) உள்ளவர்களுக்குக் கழுகு வெருளி வர வாய்ப்புள்ளது.
00
703. கழுது வெருளி-Demonophobia/Daemonophobia
பேய் இருப்பதாக எண்ணித் தேவையற்ற அச்சங்களைக் கொள்வது கழுது வெருளி.
கழுது என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பேய், காவல், பரண், வண்டு எனப்பொருள்கள் உள்ளன.
நாம் கழுது என்னும் சொல்லைப் பேயைக் குறிக்க இங்கே பயன்படுத்துகிறோம்.
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக்காஞ்சி 633)
கழுதுபுகவு அயர (ஐங்குறுநூறு : 314)
எனப் பேயின் வகையாகக் கழுது என்று சொல்லப்பட்டுள்ளது.
கழுது வெருளி முதலில் 13 ஆம் நூற்றாண்டில் விளக்கப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி / நரக வெருளி(Hadephobia/Stygiophobia/Stigiophobia), சூன்று வெருளி (Wiccaphobia), பேய் வெருளி(Phasmophobia/Spectrophobia), அலகை வெருளி(சாத்தான் வெருளி– Satanophobia), பூத வெருளி(Bogyphobia ஆகியவற்றுடன் உடன் தொடர்புடையது.
Demon என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பேய்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply