(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி)

கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி.

கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி.

உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு வந்தது எனில் அதைப்பற்றியே எண்ணி அஞ்சுவதும் கனவு குறித்த அச்சத்தை விளைவிக்கிறது.

கனவு நிலை உரைத்தல் எனத் திருவள்ளுவர் திருக்குறளில் ஒர் அதிகாரம்(122) வைத்துள்ளார். தலைவனைப் பிரிந்துள்ள தலைவி கனவில் தலைவனைக் கண்டு இன்புறுதலை இது கூறும். இது நல்ல கனவே ஆகும்.

oneiro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கனவு.

வீர பாண்டிய கட்ட பொம்மனில் கு.மா.பாலசுப்பிரமணியன் பாடல் “போகாதே போகாதே என் கனவா” என வரும் பாட்டாகும்.  வெள்ளையத்தேவன் போருக்குச் செல்லும் பொழுது அவன் மனைவி பாடுவதாக அமையும். தீக்கனவால் பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டு அவர் பாடுவார். இத்தகைய அச்சமும் கவலையும் பேரளவாக மாறும் பொழுது கனவு வெருளியாகிறது.

போகாதே போகாதே என் கணவா

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்

கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன்

கொண்டையில் பூவும் கருக்கக் கண்டேன்

ஆந்தை இருந்து அலறக் கண்டேன்

யானையும் மண்மேலே சாயக் கண்டேன்

பட்டத்து யானையும் மண்மேலே சாயக் கண்டேன்.

மேலும் இவைபோல் பாடல் வரிகள் தீயகனவுகளைக் குறிப்பிடும்.

கனவில் நல்ல காட்சிகள் வரும்பொழுது மகிழ்வதும் துயரக் காட்சிகள் அல்லது தீக்குறிகள்(சகுனங்கள்) வரும் பொழுது கவலைப்படுவதும் மக்கள் இயற்கை.

சிவகங்கைச் சீமை படத்தில் 

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்”

எனக் கண்ணதாசனின் இன்பியல் பாடலும் துன்பியல் பாடலும் இடம் பெறுகிறது.

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்

நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்

மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன்

அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்
வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்

பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன்

பளிங்கு மணவறைக்கு  நடந்து வந்தேன்

நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்

என்பன நற்கனவுப்பாடல் வரிகளில் ஒரு பகுதி.

கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் – உன்னைக்

காலம் அழைத்ததுபோல் கனவு கண்டேன்

வாழைமரங்கள் விழக் கனவு கண்டேன் – அங்கு

வைத்த விளக்குகளும் அணையக் கனவு கண்டேன்.

மாலை உதிர்ந்து விழக் கனவு கண்டேன் – என்

மஞ்சளும் குங்குமமும் கலையக் கனவு கண்டேன்

என்பனபோல் தீக்கனவுக்காட்சிகள் குறிக்கப்பெறும்.

இரத்தத்திலகம் திரைப்படத்தில் நகைச்சுவை நாடகத்தில் இதுபோல் பாடல் வரும்.

பூனை எல்லாம் நான் உன்னைத்

துரத்தக் கண்டேன் துரத்தக் கண்டேன்

புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் ஒரு

புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன்

என்பனவாகக் கண்ணதாசனின் பாடல் வரிகள் அமைந்திருக்கும்.

             கனவுகளின் பலன்கள் குறித்த மக்களிடம் உள்ள நம்பிக்கையே தீக்கனவுகளால் கனவு வெருளி அமையக் காரணமாக உள்ளது.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் திரும்பிவந்து தன்னை அழைத்துக்கொண்டு நகர் ஒன்றிற்குச் சென்றதாகவும் அங்கேபழி நேர்ந்ததாகவும் அது கண்டு தான் வழக்குரைத்ததாகவும் பின்னர் காவலனுக்கும் நகருக்கும் தீங்கு நேர்ந்ததாகவும் கூறினாள். இதுவே பின்னர் நிகழ்ந்தது. எனினும் கனவினால் கண்ணகி அச்சமுற்றாள். இத்தகைய அச்சம் வளர்கின்றபொழுது கனவு வெருளியாகிறது.

சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன என அறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பறவைகள், விலங்குகள் கண்ட கனவுக்காட்சிகளும் அடங்கும்.

தீய கனவுகள் சிலவற்றைப் புறநானூறு கூறுகிறது. 

திசையிரு நான்கு முற்க முற்கவும்

பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்

வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்

அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்

எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்

களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்

வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்

அஃதாவது,

எட்டுத்திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றுவது, இலைகள் உதிர்ந்த வற்றல் மரம் தீப்பற்றி எரிதல், சூரியன் நெருப்பாக எரிவது, பறவைகள் அச்சத்துடன் குரல் எழுப்பவுவது, பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது, பன்றி சிங்கத்தைப் புணர்வது, ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பது, படைக்கலன்கள் அவை அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு கவிழ்ந்து வீழ்ந்தமை முதலானவை தீக்கனவுகளாகச் சொல்லப்படுகின்றன. இத்தகைய கனவு காண்போர்க்குக் கனவு வெருளியை உண்டாக்குகிறது.

oneiro என்பதன் மூலக்கிரேக்கச் சொல்லின் பொருள் கனவு.

00

(தொடரும்)