வெருளி நோய்கள் 742-745: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 741: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 742-745
- காப்புறை வெருளி – Condo phobia
கருத்தடை உறை குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் காப்புறை வெருளி.
காண்டம்(condom) என்னும் சொல் மதிப்பு என்னும் பொருளுடைய காண்டசு(condus) என்பதிலிருந்து வந்தது என்பர் சிலர். சார்லசு இரண்டாம் அரசர் மன்றத்தில் பணியாற்றிய, இதனைக்கண்டு பிடித்த திரு.காண்டம் என்பவரின் பெயரையே சூட்டியுள்ளதாகச் சிலர் கூறுவர்.
உறை என்பதே காப்பிற்குத்தானே. எனவே, கருத்தடைக்கான காப்பு உறை என்பதையே சுருக்கமாக உறை எனக் குறிப்பிட்டு உறை வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். உறை வெருளி என்பது மடலுறை வெருளி(Fakelophobia) என்னும் பொருளையும் தருவதால் இதனைக் காப்புறை எனமாற்றியுள்ளேன்.
00
- காய் கனி வெருளி-Lachanophobia / Holusophobia
காய்கனி, கீரைகள் முதலானவை மீதான தேவையற்ற இயல்புக்கு மீறிய பேரச்சமே காய்கனி வெருளி.
உருளைக்கிழங்கு, வாழைக்காய் முதலியன் வாயு, கொத்தவரங்காய் பித்தம் என்பன போன்று காய்கனிகளின் நன்மைகளை ஆராயாமல் குறைகளை எண்ணி உண்ணாது இருப்பவர்கள் உள்ளனர். “அளவறிந்து உண்க” என்கிறார் திருவள்ளுவர். அளவுடன் உண்டால் எல்லாம் நல்லவையே!
பெரும்பாலும் சிறு பருவத்தில் ஏதேனும் காய்கனியை உண்பதில் ஏற்படும் வெறுப்பே நாளடைவில் வளர்ந்து காய்கனி வெருளியாகிறது.
lachno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காய்கனி.
00
- காய் நறுக்கி வெருளி. – Shwnphobia
காய்கனிகளை நறுக்கவும் வெட்டவும் உதவும் மின் பொறி-காய் நறுக்கி வெருளி.
காய்நறுக்கியின் விரைவான இயக்கம் அல்லது கவனக்குறைவு போன்றவற்றால் தீங்க நேரலாம் என அஞ்சி அதன் காரணமாகக் காய்நறுக்கி வெருளி வருகிறது.
00
- காய்ச்சல் வெருளி- Febriphobia/Fibriphobia/ Fibriophobia/ Pyrexiophobia/ Pyrexeophobia/Hypophobia காய்ச்சல் / சுரம் குறித்த இயல்புமீறிய தேவையற்ற பேரச்சம் கொள்வது காய்ச்சல் வெருளி.
காய்ச்சல் வந்தால் மிகவும் உடல் சீர் கேடடையப்போவதுபோலும் மரணம் நெருங்குவது போலும் காய்ச்சலால் வேலை செய்ய முடியாமல் வேலை இழப்பிற்கு ஆளாகப்போவதாகவும் பிறருக்குக் காய்ச்சல் வந்தால் ஒட்டிக்கொண்டு இவைபோன்ற துயரங்கள் நிகழும் என்றும் அஞ்சுவது சிலர் வழக்கம். சிறு நலக்குறைவு ஏற்பட்டாலும் பெருங்காய்ச்சலாகவும் பெரிய உடல்நலக்கேடாகவும் அஞ்சுவோரும் உள்ளனர்.
febri என்னும் இலத்தீன்சொல்லின் பொருள் காய்ச்சல். pyrex என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும காய்ச்சல்தான்.
00 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன் வெருளி அறிவியல் 2/5







Leave a Reply