(வெருளி நோய்கள் 841-845: தொடர்ச்சி)

  1. குருதி அழுத்தமானி வெருளி – Sphygmomanophobia
    குருதி அழுத்தமானி பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் குருதி அழுத்தமானி வெருளி.
    Sphyg என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நாடித்துடிப்பு.
    Sphygmomano என்பது குருதி அழுத்த மானியைக் குறிக்கிறது.
    குருதி அழுத்தம் வரம்பு அளவைவிடக் குறைவாகவோ கூடுதலாகவோ இருந்தால் ஏற்படும் தீமைகளையும் இடர்களையும் எண்ணி அஞ்சி அதை அளவிட்டுக் காட்டும் குருதி அழுத்த மானி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
  2. குருதி ஊசி காய வெருளி-Blood injection injury phobia

குருதி ஊசி காயம் தொடர்பான மிகையான பேரச்சம் குருதி ஊசி காய வெருளி.
குருதியைக் கண்டும் ஊசி போடுவதாலும் ஊசி போடப்படுவதைப் பார்த்தாலும் காயம் வந்தாலும் பிறர் காயங்களைப் பார்த்தாலும் ஏற்படக்கூடிய அளவுகடந்த பேரச்சங்களை இது குறிக்கிறது.
இதனைத் தனி ஒரு வெருளியாகக் குறிப்பிடாமல் குருதி வெருளி, ஊசி வெருளி(நுதி வெருளி/மருந்தூசி வெருளி), உடற்காய வெருளிவகைகளைக் குறிப்பிடும் பொதுச்சொல்லாகத்தான் கையாளுகின்றனர்.
00

  1. குருதி வெருளி – Haemophobia/ Hemaphobia/Hematophobia

குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் குருதி வெருளி
குருதி என்பது தமிழ்ச்சொல்லல்ல என எண்ணிக் கொண்டு சிலர் அரத்தம், இரத்தம் என்றெல்லாம் பயன்படுத்துவர். குருதி தமிழ்ச்சொல்லே. குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். எனவே, இரத்தம் அல்லது அரத்தம் என்று குறிப்பதைவிடக் குருதி என்ற சொல்லையே நாம் பயன்படுததலாம்.
சிறு பருவத்தில் அல்லது இளம் பருவத்தில் கை கால்களில் அடிபட்டு இரத்தம் வருவதால் ஏற்படும் அச்சம் நிலைத்து விடுகிறது. நேர்ச்சிகளில்(விபத்துகளில்) இரத்தம் சிந்துவதைப் பார்த்து ஏற்படும் அச்சமும் வளர்ந்து குருதி வெருளியாகிறது. (இரத்தம், அரத்தம், குருதி எல்லாம் ஒன்றுதான்.)
குருதி என்னும் பொருள் தரும் haima என்னும் கிரேக்கச் சொல் Haemo என மருவியுள்ளது.
00

  1. குரோக்கி வெருளி – Grokephobia
    புனைவுரு பாத்திரமான குரோக்கி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குரோக்கி வெருளி.
    குரோக்கி (Groke) என்பது பின்லாந்து-சுவீடன் எழுத்தாளரான ஓவியர் தோவு சான்சன் (Tove Jansson) உருவாக்கிய சிறார் ஓவிய நூல்களில் இடம் பெறும் மூமின்(Moomin) தொடரில் இடம் பெறும் கற்பனைப் பாத்திரம்.
    00