வெருளி நோய்கள் 896-900: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 891-895: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 896-900
- கூன் வெருளி – Kyphophobia
குனிவு, வளைவு, கூன் முதலானவை பற்றிய இயல்பு கடந்த பேரச்சம் கூன் வெருளி.
குனிவு வெருளி என முன்பு குறித்திருந்தேன். இப்பொழுது கூன் வெருளி என மாற்றியுள்ளேன்.
இராமாயணத்தில் இராமனைக் காட்டிற்கு அனுப்பக் காரணமாக இருந்த மந்தரை என்னும் பெண்மணி கூனியாக இருந்தமையால், கூனி என்றாலே சூழ்ச்சிக்காரர் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் (இராமாயணம்,அயோத்தியா காண்டம்,2.46/4)
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள்(இராமாயணம்,அயோத்தியா காண்டம், 2.55/2)
என மந்தரையாகிய கூனியைக் கொடுமன கூனி என்றும் தீவினை கூனி என்றும் கம்பர் கூறுகின்றார். இதனால் கூன் முதுகு உடைய முதியோர் மீது பரிவு வராமல் அச்சம் கொள்பவர்கள் உள்ளனர்.
அரசியல்வாதிகள் தங்கள் தலைவர்களுக்கு முன்னால் குனிந்து கூனிட்டு வளைந்து அடிபணிவது பார்க்கும் பொழுது பிறருக்கு வெறுப்பு வருகிறது. இந்த உணர்வு வளர்ந்தால் அது கூன்வெருளியாகும்.
திரைப்படங்களில் கூன் முதுகு உடையோரைக் கேலியாக / நகைச்சுவையாகக் காண்பிப்பதும் தவறு. தங்கமலை இரகசியம், அடிமைப்பெண், பேரழகன் முதலான சில படங்களில் பகுதிக்காட்சிகளில் கூன் வேடமிட்டு நாயகர்கள் நடித்தாலும் கேலிவேடத்தில் நடிக்கவில்லை. எனினும் சில திரைப்படங்களில் ‘கேடு செய்யும் கூனிக்கிழவி’ என்று பாத்திரப்படைப்புகள் உள்ளமையால் கூன் அச்சம் இதைப் பார்ப்பவர்க்கு வருவது இயற்கையே.
kypho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் கூன்/குனிவு/வளைவு.
00
- கூரறிவு வெருளி – Keyaiphobia
கூரறிவு தொடர்பான அளவற்ற பேரச்சம் கூரறிவு வெருளி.
keyai என்பது கூர்த்த மதியைக் குறிக்கும் யாவானர்(Jawa) மொழிச்சொல்.
00 - கூரைச் சாளர வெருளி – Tr✈️gmophobia
மேல் தளச் சாளரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கூரைச் சாளர வெருளி.
கூரைவழியாகச் சூரிய ஒளி முதலான வான் வெளி ஒளி கட்டடத்திற்குள் வரும் வகையில் அமைக்கப்படும் கட்டடங்களில் வான் ஒளியால் வரும் பேரச்சமே இவ் வெருளியாகும். அதனால் கூரை ஒளி வெருளி என்றும் சொல்லலாம்.
Tr✈️gmo என்றால் மேல்தளச் சாரளரம் கூரைச் சாளரம் கூரைத் திறப்பு எனப் பொருள்கள்.
00
- கூள அஞ்சல் வெருளி – Quisquiliaphobia
குப்பைக்கூளமான அஞ்சல்கள் குறித்த அளவுகடந்த பேரச்சம் கூள அஞ்சல் வெருளி.
நமக்குத் தேவையும் தொடர்புமற்ற அஞ்சல்கள் அவ்வப்பொழுது வந்து தொந்தரவு செய்கின்றன. மின்னஞ்சல் வந்தபின்னர் நாளும் மின்னஞ்சல் வழியாக இத்தகைய செய்திகள் அல்லது மடல்கள் வருகின்றன.
உங்களுக்கு இத்தனை கோடிப் பணம் அல்லது இவ்வளவு பெரிய தொகை கிடைக்க உள்ளது, உங்களுக்கு முதல் பரிசு வந்துள்ளது, எனக்குப் பின் யாரும் உறவினர் இன்மையால், நான் நல்லவர் என அறிந்து கொண்ட உங்களுக்கு என் சொத்து முழுவதையும் எழுதிவைக்கப் போகிறேன், உங்கள் பெயரில் நாங்கள் வங்கிக் கணக்கு தொடங்கியுள்ளோம், உங்களுக்கு வட்டியில்லாக் கடன் ஒப்பளிப்பு செய்துள்ளோம், உங்கள் தகுதிக்கேற்ற வேலை வழங்குகிறோம் என்பனபோன்ற எண்ணற்ற மின்னஞ்சல்கள் வருகின்றன. குப்பைக் கூளத்தில் சேர்க்க வேண்டிய இவற்றைப் பொருட்படுத்தி அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
quisquiliae என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தகுதியற்ற/ கவைக்குதவாத/குப்பைக் கூளம் எனப் பொருள்கள்.
காண்க: மின்னஞ்சல் வெருளி(aperepiphobia)
00
- கெடுதி வெருளி – Pamperphobia
நம் செயல்களால் பிறர் கேடுறுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கெடுதி வெருளி.
குழந்தைகளுக்குச் செல்லம் கொடுப்பதால் கேடுறுதல் போன்று கேடுறும் வாய்ப்புகள் குறித்த பேரச்சம் இதற்குக் காரணமாகின்றது.
Pamper என்னும் கிரேக்கச் சொல்லிற்கு இடங்கொடுத்துக் கெடுத்தல் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5







Leave a Reply