(வெருளி நோய்கள் 956-960: தொடர்ச்சி)

சங்கடம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கட வெருளி.
சங்கடங்கள் (Embarrassment) மனஅளவிலும் குமுக அளவிலும் பல தீமைகளை ஏற்படுத்தும். அவை மனச்சோர்வு, பதற்றம், அவமானம், தன்மதிப்புக் குறைவு, மற்றவர்களைப் பற்றிய பயம்,தோல்வி பயம் போன்ற உணர்வுகளைத் தூண்டும். மேலும் சில சமயங்களில், குமுகத் தொடர்புகளைத் தவிர்ப்பதற்கும், செயல்திறன் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து, தனிப்பட்ட/கல்வி/தொழில்முறை வாழ்க்கையைப் பாதிக்கும். எனவே, சங்கடங்கள் நேரும்பொழுதோ சங்கடங்கள் வரும் என எதிர்நோக்கும் பொழுதோ வெருளிக்கு ஆளாகின்றனர்.

இறையன்பர்கள் சங்கடங்களால் வரும் தீமைகளைத் தடுக்கும் அல்லது தவிர்க்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நான்காவது நாளில் விநாயகரை வணங்குகின்றனர். இந்நாளைச் சங்கடஃகர சதுர்த்தி என்கின்றனர். ஃகர என்றால் நீக்குதல் எனப்பொருள். எனவே சங்கடங்களை/துன்பங்களை நீக்கும் நாள் என்கின்றனர். சங்கட வெருளி வருவதால்தான் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
00

சங்கிலி இரம்பம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கிலி இரம்ப வெருளி.
குடியிருப்பு தீங்கு 4 மெய்நிகர் உண்மை (Resident Evil 4 VR) என்பது போன்ற திகில் காணாட்டங்களில் இடம் பெறும் தீங்கு விளைவிக்கும் சங்கிலி இரம்பங்களால் சங்கிலி இரம்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
kanayaphobia என்பதைச் சிலர் சாவு வெருளி என்கின்றனர். சாவு வெருளி எனத் தனியாக உள்ளதால் kanayaphobia என்பதைச் சங்கிலி இரம்ப வெருளி என்றே வரையறுக்கலாம்.
00

திருமணச் சடங்கு, இறுதிச் சடங்கு முதலான பொறுப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் சடங்கு பொறுப்பு வெருளி.

மங்கலச்சடங்காக இருந்தாலும் அமங்கலச் சடங்காக இருந்தாலும் அவற்றைச் சரியாக முடிக்க வேண்டும் என்ற பொறுப்புமீதுான  பேரச்சமே இது. சடங்குகளைச் செய்வதில் உள்ள தயக்கம், அச்சம்,  அவற்றைச் சரியாகச் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றிய கவலையைக் குறிக்கும். இது குமுக அழுத்தம், மரபு சார்ந்த நம்பிக்கைகள், தவறான புரிதல்கள் போன்றவற்றாலும் சடங்குகள்மீது பேரச்சம் வருகிறது. சடங்குகளுக்காகும் செலவுகள், அவற்றைச் சமாளிப்பதில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றாலும் சடங்குகள் மீது வெருளி வருகிறது.

சடங்கு வெருளி உள்ளவர்களுக்குச் சடங்கு பொறுப்பு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. சடங்குளைச் சரியாகச் செய்ய வேண்டும், உற்றார் உறவினர் குறை சொல்லக்கூடாது, யாரும் அழைக்கப்படாமல் விடுபட்டிருக்கக் கூடாது, சடங்கு முடிந்த பின்னர், அதனால் ஏற்பட்ட கடன்களைத் தீர்ப்பது குறித்த கவலை, சடங்குகளுக்கான செலவுகளுக்கு யார் யார் பொறுப்பேற்பது போன்ற எண்ணங்களாலும் கவலைகளாலும் சடங்கு பொறுப்பு மீது வெருளி வருகிறது.
00

சடங்குகள் குறித்த அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சடங்கு வெருளி.
இறை மறுப்பாளர்கள் மட்டுமல்லர், சமயப்பற்று உள்ளவர்களும், கால நேரத்தை வீணாக்குகின்றது, பொருட் செலவை ஏற்படுத்துகின்றது, பகுத்தறிவிற்கு முரணாக உள்ளது எனப் பல காரணங்களால் சமயச்சடங்குகளை வெறுப்பவர்களாக உள்ளனர். சடங்குகள் மூலம் அச்சுறுத்தப்படுவதாக எண்ணியும் இவற்றை வெறுப்பவர் உள்ளனர்.
இறை நம்பிக்கை உள்ள சித்தர்கள் பலரும் சடங்குகளுக்கு எதிராகப் பாடியுள்ளனர்.
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் (சிவவாக்கியர்214),
மனு எரிக்க நாளு நாளு நாடுவீர் (சிவவாக்கியர் 462)
என ஆரியச் சடங்குகளுக்கு எதிராக மனுவை எதிர்த்துப் பாடல்கள்பாடி உள்ளனர்.
சாதியாவது ஏதடா
சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே (சிவ.47)
எனச் சிவவாக்கியர் சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கம்இட் டிருக்குதோ (சிவ.40)
என்னும் பாடலில் சிவவாக்கியர் உடல் எலும்பில் சாதியின் இலக்கம் இடப்பட்டிருக்கிறதா எனச் சாதிக்கு எதிராகப் புரட்சிக் குரல் எழுப்பியுள்ளார்.
இவ்வாறு சித்தர் பாடல்களில் சாதி, சடங்குகளுக்கு எதிராகப் பல பாடல்கள் உள்ளன. சாதி,சடங்குகள் மூலமாக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவே அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
tel என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நிறைவேற்றல். இங்கே இது மதச்சடங்குகளை நிறைவேற்றலைக் குறிக்கிறது.
00

  1. சடைநாய் வெருளி-Poodlephobia

சடைநாய் குறித்த அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் சடைநாய் வெருளி.
00