(வெருளி நோய்கள் 971-975: தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 976-980

சமையல் மேசை(kitchen table) குறித்த வரம்பற்ற பேரச்சம் சமையல் மேசை வெருளி.
சமையல் வெருளி உள்ளவர்களுக்குச் சமையல் மேசை வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

சமைப்பது மீதான அளவுகடந்த வெறுப்பும் தேவையற்ற பேரச்சமும் சமையல் வெருளி.
சமையல் வெருளியையும் உணவு வெருளி(cibophobia)யுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
சில வகை உணவுமீது வெறுப்பு வரும்பொழுது அவற்றைச் சமைப்பதிலும் வெறுப்பும் பேரச்சமும் வருகிறது. சிலர் சமைக்கத் தொடங்கிய புதிதில் காய்கனி நறுக்குகையில் கையில் காயம்பட்டிருப்பர். இதனால ஏற்பட்ட அச்சம் ஆழமாகப் பதிந்து சமையல் மீதுபேரச்சத்தை ஏற்படுத்துகிறது.
உணவு செய்யும் முறை சரி வர அறியாமை, தேவைப்படும் பொருள்பட்டியல் உணராமை, சமையற்குறிப்பு தெரியாமை, பதமாகும் முன்னரே சமையலை முடிப்பது, நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு மிதமிஞ்சிச் சமைப்பது, பிறர் எதிர்பார்க்கும் அளவிற்குச் சமைக்க முடியாமை போன்ற காரணங்களால் சமையல் மீது பேரச்சம் ஏற்படுகின்றது.
சிலருக்குப் பிறர் சமைத்த உணவு மீது பேரச்சம் வரும். தாங்கள் சமைத்த உணவுமீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
Mageiros என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் சமைப்பவன். இங்கு சமைப்பதைக் குறிக்கிறது.
00

சம்மட்டி(hammer) குறித்த வரம்பற்ற பேரச்சம் சம்மட்டி வெருளி.
சம்மட்டி அல்லது சுத்தியலைக் கையாள்வதில் கவனக் குறைவால் இடர் ஏற்படலாம் என்ற பேரச்சம், சிலருக்குச் சம்மட்டி அல்லது சுத்தியலைப் படத்தில் அல்லது திரைப்படத்தில் பார்த்தாலே அதனால் தாக்கப்படுவோமோ என்ற தேவையற்ற பேரச்சம் தோன்றி வெருளியை ஏற்படுத்துகிறது.
00

சரடு அல்லது கயிறு/இழை(string) தொடர்பான தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சரடு வெருளி.
கயிற்றில் தூக்குபோட்டு இறந்தவர் படத்தைப் பார்த்ததால் அல்லது அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதால் கயிறு என்றாலே அச்சம் கொள்வோர் உள்ளனர்.
கடத்தப்படுவதற்கும் மிரட்டுவதற்கும் கயிற்றால் கட்டிப்போடுவதைக் கேள்விப்பட்டு அல்லது அவ்வாறு கட்டப்பட்டு அதனால் கயிற்றின் மீது பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். கயிற்றைப் பாதுகாப்புப் பிணைப்பாகக் கருதி தேவைப்படும் உரிய நேரத்தில் கயிறு கிடைக்காமல் போகுமோ என அஞ்சுவோரும் உள்ளனர்.
பாம்பு என்று இரவில் சொன்னால் குழந்தைகள் அல்லது சிறுவர் சிறுமியர் பயப்படுவர் என அதனைக் கயிறு என்று கூறும் பழக்கம் உண்டு. நாளடைவில் கயிறு என்றாலே பாம்பாகக் கருதி சிறு பருவத்தில் அஞ்சி அந்த அச்சம் மாறாமல் இருப்பவர்களும் உள்ளனர்.
lino என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சரடு என்று பொருள்.
00

சருக்கரை, சருக்கரை கலந்த உணவு,சருக்கரை கலந்த பானங்கள் முதலியன தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சருக்கரை வெருளி.

சருக்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய் வந்தால் பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, கண்பார்வை இழப்பு (retinopathy), நரம்பு சேதம் (neuropathy), பாதச் சிக்கல்கள் (amputation வரை), செரிமானக் கோளாறுகள், பல் ஈறுகள் சிக்கல்கள், பாலியல் சிக்கல்கள்,மன நலப் பாதிப்புகள் போன்ற கடுமையான சிக்கல்ககள் ஏற்படும் என்ற கவலையால் சருக்கரை வெருளி வருகிறது.

saccharum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சருக்கரை.