வெருளி நோய் 504-508 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 499-503 : தொடர்ச்சி)
வெருளி நோய் 504-508
- எரிமீன் வெருளி-Meteorophobia
எரி கற்களால் துன்பம் ஏற்படும் எனத் தேவையற்ற சூழலில் அஞ்சுவது எரிமீன் வெருளி ஆகும்.
கீழே வீழ்வதால் வீழ்மீன் என்றும் உல் என்றால் எரிதல்; எரிகின்ற சிறுபகுதி என்னும் பொருளில் உற்கை என்றும், உற்கம் என்றால் தீத்திரள்; அதனடிப்படையிலும் உற்கை என்றும் விண்ணிலுள்ள கல் என்ற பொருளில் விண்கல் என்றும் எரிகின்ற கல் என்ற பொருளில் எரிகல் என்றும் விண்ணில் இருந்து வரும் நெருப்பு என்ற பொருளில் விண்கொள்ளி என்றும் எரி மீனைக் குறிக்கின்றனர். நாம் எரிமீன் என்ற எளிய சொல்லையே பயன்படுத்தலாம்.
meteoro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விண் பொருள் என்பதே. பின்னர் விண்ணிலிருந்து பூமியைத் தாக்கும் விண்கற்களைக் குறித்தது. எனவே இப்போதைய பொருள் விண்வீழ் கொள்ளி எனப்படும் எரிமீன் ஆகும்
00
- எரிவளி மானி வெருளி – Gasgaugephobia
எரிவளி மானி(Gasgauge) குறித்த வரம்பற்ற பேரச்சம் எரிவளி மானி வெருளி.
ஊர்தி ஓட்டிக்கொண்டிருக்கும்போது எரிபொருள் தீர்ந்து விடுமோ என்ற பேரச்சம் எழுவதை இது குறிக்கிறது.
எரிவளி நிலைய வெருளியுடன்(aerostatiophobia) தொடர்புடையது.
00
- எரிவாயு குழாய் வெருளி – Zapsaulphobia
எரிவாயு குழாய் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எரிவாயு குழாய் வெருளி.
காற்று எங்கும் பரந்து விரிந்து வாய்த்திருத்தலால் வாய்வு எனப்பட்டது. இதுவே சமக்கிருதத்தில் எங்கும் பரந்து இருப்பதைக் குறிக்க வியாபி என்றானது. வாய்வு, பின்னர் வாயு என்றும் அழைக்கப்பெற்றது. தமிழ் வாயு-வையும் சமக்கிருத வழிச்சொல்லாகத் தவறாகக் கருதுகிறோம்.
00
- எருது வெருளி – Vodiphobia/ Taurophobia எருது குறித்த வரம்பற்ற பேரச்சம் எருது வெருளி.
எருது அஞ்சத்தக்க விலங்கு. முட்டிக் கீழே சாய்த்து விடும், குடலைக் கிழித்துவிடும்,அல்லது கீழே தள்ளி மிதித்துக் கொன்று விடும் என்ற தேவையற்ற அளவுகடந்த அச்சங்களுக்கு ஆளாவோர் உள்ளனர். எருது அஞ்சத்தக்க விலங்கு என்பதால் அதனை அடக்குவோரைத் தமிழ்ப்பெண்கள் திருமணம் செய்தனர்.
காளையின் கொம்பு கண்டு அஞ்சுபவனை ஆயர்மகள் அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டார்களாம். இக்கருத்தைக்
“கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
என்கிறது கலித்தொகை (103:63-64).
கொல்லேறு என்றால் கொல்லுகின்ற ஏறு; கோடு என்பது கொம்பினைக் குறிக்கும்; புல்லுதல் என்றால் கணவனாக ஏற்றுத்தழுவுதல்; மறுமையும் என்றால் அடுத்த பிறவியிலும்; ஆயமகள் என்பது முல்லை நிலப் பெண்.
மஞ்சு விரட்டு/ஏறுதழுவுதல்/சல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரில் அல்லது திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் பார்த்து அஞ்சுவோரும் உள்ளனர்.
Tauro என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளை.
00
- எலிவெருளி-Musophobia/Murophobia/Suriphobia/Muriphobia
எலி அல்லது எலி வகைகள் குறித்த அச்சமே எலி வெருளி.
எலியினால் வரும் தொல்லைகள் குறித்தும் எலிக்காய்ச்சல் குறித்தும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் எலி இல்லாவிட்டாலும்கூட எலிவந்து தொல்லை தரும் என அஞ்சுவோரும் உள்ளனர். சுண்டெலி வெருளி என்றும் சொல்லலாம்.
Muso என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் சுண்டெலி.
souris என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் எலி.
எலி என்னும் பொருள் கொண்ட mur- என்னும் இலத்தீன் சொல்லை வேராகக் கொண்ட murine என்னும் சொல் எலி சார்ந்த அல்லது எலிக் குடும்பம் என்னும் பொருளில் கையாளப்படுகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
Leave a Reply