அறிவியல்இலக்குவனார் திருவள்ளுவன்கட்டுரைதிருக்குறள்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 19 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்

19

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்

(திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்இறைமாட்சி, குறள் எண்: 386)

அணுகுவதற்கு எளியவனாகவும் கடுஞ்சொல்லற்றவனாகவும் உள்ளவனை உலகம் உயர்த்திப் போற்றும் என்கிறார் திருவள்ளுவர்.

மீக்கூறுதல் என்பதற்குப் பரிமேலழகர், “ ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று’ என்றல்” என விளக்குகிறார்.

மன்னனின் நிலத்தைப் பாராட்டும் உலகு என்பது நேரிடையாகச் சொல்லப்படவில்லை. பொருள் அடிப்படையில் உணர முடிகிறது.

காட்சிக்கு எளியன் என்றால் எளிய தோற்றம் என்று பொருளல்ல. எனினும் அதுவும் தேவைதான். ஆடம்பரமாகவும் பகட்டாகவும் உடுத்தித் தோற்றமளிப்பது மக்களிடம் இருந்து விலக்கி வைக்கும். எளிய தோற்றம் நம்மில் ஒருவர் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கும். குறைகளைத் தெரிவிக்கவும் முறையிடவும் மக்கள் வரும்பொழுது  தட்டிக்கழிக்காமலும் காலங்கடத்தாமலும் எளிதில் அவர்கள் அணுகும் நிலையில் இருத்தல் வேண்டும். இதுவே அவர்களின் பாதி குறையைத் தீர்த்ததுபோன்ற மனநிறைவைத் தரும்.

மக்கள் குறைகளைத் தெரிவிக்கிறார்கள் என்றால் அது செவிகளுக்கு இனிமை பயக்கும் பாராட்டுரையாக இருக்காது. ஆட்சி மீதான குறையாகக்கூட இருக்கும். எனவே, கடுகடுத்த முகத்துடன் இருந்து வேண்டா வெறுப்பாகக் கேட்டுக் கடுமையாக மறுமொழி அளிக்கக் கூடாது. இன்சொல் தேவை. அவ்வாறு இனியதாகக் கூறாவிட்டாலும் கடுஞ்சொல்லின்றி இருத்தலே மக்கள் மனங்களில் மன நிறைவை உண்டாக்கும்.

அதிகாரிகளுக்கும் இது பொருந்தும். பல அதிகாரிகள் வாரத்தில் 1 மணி நேரம் மட்டும் மக்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர். அந்தப் பொழுதிலும் அலுவலக ஊழியர்களுடன் கோப்புகள் குறித்து உரையாடுகின்றனர். உடனடியாகக் குறைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும்  அதற்கான நடவடிக்கையை உடனடியாகத் தொடங்குவது அவர்கள் மீதான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும்.

 ஆலைகள், நிறுவனங்கள், அமைப்புகள் என எல்லா இடங்களிலும் பொறுப்பாளர்கள் காணுதற்கு எளிதாகவும் கடுஞ்சொல்லற்றும்  பொறுப்புடன் நடந்து கொண்டால் மக்களால் போற்றப்படுவர்.

பெற்றோர்-பிள்ளைகள், ஆசிரியர்-மாணாக்கர், வீட்டுத்தலைவி – பணியாள் என எல்லா நேர்வுகளிலும் பின்பற்ற வேண்டிய குறள் இது.

ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் குறையைப் போக்கும் இடத்தில் இருப்பதால்,  பிறர்  உடனடியாகக் குறைகளை வெளிப்படுத்த வாய்ப்பு நல்கிக் கடுமையான சொற்களைத் தவிர்த்து உலகம் புகழ நாம் வாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 13.08.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *