(வெருளி நோய்கள் 739-740: தொடர்ச்சி)

741. காத்திருப்பு வெருளி-Macrophobia

நீண்ட காலக் காத்திருப்பின் மீதான இயல்பு மீறிய தேவையில்லாப் பேரச்சமே காத்திருப்பு வெருளி.

பால் வாங்குவதற்கு, உணவுப்பொருள் வாங்குவதற்கு, பணம் எடுப்பதற்கு, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு, பேருந்திற்கு, தொடரிக்கு எனப் பல நேரங்கள் நாம் வாழ்வில் நம் முறை வருவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது;  மருத்துவரை அல்லது வழக்குரைஞரை அல்லது பிறரைச் சந்திக்கச் செல்லும் பொழுது நம் வரிசை வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காத்திருப்பு மனக்கவலையையும் பேரச்சத்தையும் உருவாக்குகிறது.

காக்க வேண்டிய நேரத்தை முன் கூட்டியே அறியும் நேர்வுகளில் நாம் அதனைப் பயனுள்ள வகையில் செலவழித்தால் வெருளி வராது. நான் சிறைத்துறை நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது கைப்பையில், தாள், மைபடி(carbon) தாள், முத்திரை, உறை, அஞ்சல் தலை, கோந்து முதலியன வைத்திருப்பேன். சில பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் அதற்கு முந்தைய உசாவல்(விசாரணை) அறிக்கையை எழுதி முடித்து அஞ்சலில் சேர்த்து விடுவேன். நேரம் வீணாகாததுடன் உடனுக்குடன் பணிகளும் முடிந்து விடும். 

காத்திருப்பதும் பிறரைக் காக்க வைப்பதும் எனக்குப் பிடிக்காது. எனவே, யாரையும் காணச்சென்றால் கையில் புத்தகத்துடன் செல்வேன். காத்திருக்கும் நேரம் பயனுள்ள வழியில் கழியுமல்லவா? எனக்கு இதன் தொடர்பிலான கடும் எரிச்சல் 3 முறை நிகழ்ந்துள்ளது. அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராக இருந்த பொழுது விருதுநகர் முதலான அண்டை மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணிப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தேன். ஒரு செவ்வாயன்று வெள்ளிக்கிழமையே விருதுநகரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடத்தவேண்டிய அவசர வேலை வந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றேன். அவர், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் என்றாலும் தன் ஒப்புதல் பெற்றே உட்புக வேண்டும் என்று கண்டிப்பாகப் பின்பற்றி வருபவர். காலங்கடந்தும் சந்திக்க இயலாமல் அவரது தலைமை ஏவலர், “நீங்கள் உள்ளே செல்லுங்கள். ஒன்றும் சொல்ல மாட்டார்” என்றார். நான், அனுப்பியுள்ள துண்டுச்சீட்டைப் பார்த்து அவர் அழைக்காமல் செல்ல விரும்பவில்லை என்றேன். நேரம் இரவு 8.00 ஐக் கடந்து விட்டது. அவருக்கு அந்த வளாகத்திலேயே மாளிகை உள்ளது. வெளியே செல்ல வேண்டுமென்றாலும் ஊர்தி உள்ளது. நான் மதுரைக்குச் சென்று அழைப்பிதழ் அடித்தல் முதலான பணிகளைப் பார்க்க வேண்டும். என் செய்வது? உடனே ஒரு துண்டுத்தாளில் “காத்திருப்பது என் பணியல்ல. எனக்கும் பல பணிகள் காத்திருக்கின்றன” என எழுதித் தலைமை ஏவலரிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர் ஒன்றும் சொல்லாமல் ஆட்சியரிடம் சென்று கொடுத்தார். உடன் அவர் என்னை அழைத்தார். வரும் வெள்ளி ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்துவது குறித்துக் கலந்து பேசித் திரும்பினேன். உடன் அவர் என்னை அழைத்து “நீங்கள் என்னிடம் முன் ஒப்புதல் பெற்று வந்திருந்தால் காத்திருக்க வேண்டி நேர்ந்திருக்காதே! பிற அலுவலர்களையும் அழைத்துச் சிறப்பாகத் திட்டமிட்டிருக்கலாமே”  என்றார். 

நான், உடனே அவரிடம் உங்களுக்குத் தொலையச்சு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பே வந்தேன். (நாடு முழுவதும் எங்கள் துறையில் தொலையச்சை நான் ஒருவன்தான் பயன்படுத்தி வந்தேன்.) உடன் அவர் அவரின் அணுக்க உதவியாளரை அழைத்தார்.  அவரிடம் நான் ஒப்புதல் கேட்டிருந்தேனா என்றார். அவர், ஆமாம், “நீங்கள் தலைமையிடத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதால் வரச் சொன்னேன்” என்றார். “இனி அவர் வருவது குறித்துத் தெரிவித்தால் உடன் என் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்றார் ஆட்சியர்.

“நான் வேறு சில மாவட்டப்பணிகளையும் பார்க்கின்றேன். மதுரையில் இருந்து நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளைப் பார்க்க வேண்டி உள்ளது. காத்திருப்பதில் நேரம் வீணானால் பிற பணிகளைப் பாரக்க நேரமிருக்காது. எனவேதான் அவ்வாறு எழுதிக்கொடுத்தேன்” என்றேன். “நீங்கள் சொல்வது சரிதான். என் அலுவலகத்தில்தான் தவறு செய்துள்ளனர்” என்றார்.

நான் மதுரை சென்றதும் அச்சகத்திற்குச் சென்று அழைப்பிதழ் அடித்து முடித்துவிட்டுத்தான் வீடடிற்குச் சென்றேன். நான் எழுத்தச்சைப் பயன்படுத்தாமல் கணியச்சைப் பயன்படுத்துவதால் உடன் பணி எளிதில் முடிந்தது. மறுநாள் காலை 8.00 மணியளவில் ஆட்சியர் முகாம் அலுவலகம்(வீடு) சென்று அவருக்குரிய அழைப்பிதழைக் கொடுத்தேன். “நீங்கள் மதுரை செல்ல 10.00 மணியாவது ஆகியிருக்கும். எப்படி அச்சடித்துக் காலையிலேயே வந்து விட்டீர்கள். அப்படியானால் காத்திருப்பது உங்கள் பணியல்ல என நீங்கள் எழுதியது மிகவும் சரிதான்” என்று ஆட்சியர் உடனடிச் செயல்பாட்டிற்கு வெகுவாகப் பாராட்டினார்.

இதுபோன்ற காத்திருப்பு தொடரும்பொழுதும் தொடர் கவலை ஏற்படும் பொழுதும் அது வெருளியாக வளரந்து விடுகிறது.

macro என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கால நீட்டிப்பு / நெடுங்காலம் எனப் பொருள். கலைச்சொல்லாக அமையும் பொழுது நீண்ட நேரக் காத்திருப்பைக் குறிக்கிறது. 

00

(தொடரும்)