தூய்மையே செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்

தூய்மையே செல்வம்
மழலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் சில பாடல்களின் மெட்டுகளில் சில பாடல்களைப் பார்ப்போம். பொதுவாக ஆங்கில மழலைப் பாடல்கள் பல ஒலிக் குறிப்புகளை அறியவே கற்பிக்கப்படுகின்றன. சில மட்டுமே பொருள் உள்ள பாடல்களாக உள்ளன. ஆனால் தமிழிலுள்ள குழந்தைப் பாடல்கள் யாவும் அறிவுரையாகவோ அறவுரையாகவோ அறிவியலுரையாகவோ அமைந்துள்ளன. இருப்பினும் தெரிந்த மெட்டின் அடிப்படையில் பாடல்களை அறிவது குழந்தைகளை ஈர்க்கும் என்பதால் பின்வரும் பாடல்கள் குறிக்கப் படுகின்றன.
வாழ்க்கைக்கு அடிப்படை தூய்மை. மனத்தூய்மை வாய்மையால் அமையும் என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். சுற்றுப்புறத் தூய்மைக்கு அடிப்படை குப்பைக் கூளங்களைச் சுற்றிலும் பரப்பாமல் குப்பைக் கூடைகளைப் பயன்படுத்தல் ஆகும். அந்த வகையில் தூய்மையைப் பற்றியும் குப்பைத்தாள்களை அகற்றுவதும் குறித்தும் பின் வரும் பாடல்களைப் பாடி மகிழலாம்.
“Baa, Baa, Black Sheep” என்னும் பாடல் 1731இல் இருந்து ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே மெட்டில் பின்வரும் பாடலைப் பாடி மகிழுங்கள்.
தூய்மை தூய்மை தூய்மையே செல்வம்
தூய்மை இன்றேல் நோய்தான் ஆளும்
நோயில் வீழ்ந்து நலிவது நன்றா?
தூய்மையாய் வாழ்ந்து பொலிவது நன்றா?
சொல்வீர் சொல்வீர் நல்லதைச் சொல்வீர்!
தூய்மையே நன்றெனத் தெளிவீர் இன்றே!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா? நலமான வாழ்விற்குத் தூய்மையே அடிப்படை என்பதை வளரும் குழந்தைகளுக்கு உணர்த்துவோம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply