எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 12 : ‘என’, ‘இனி’ அடுத்து வல்லினம் மிகும் : தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது, இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது
“ஒரு ஊழியரேனும்’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது தவறு
ஆங்கிலத்தில் உயிரெழுத்துக்களுக்கு முன் என்ன குறிப்பிட வேண்டும் என நன்கு அறிவோம்.
கேள்வி: ‘an’ என உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னால் சேர்ப்போம். இவ்வாறு தமிழிலும் உள்ளதா?
விடை: ஆம். அதைக் குறிப்பிடத்தான் இவ்வாறு ‘ஒரு’ என உயிர் எழுத்துகளின் முன் குறிப்பிடுவது தவறு என நினைவூட்டுகிறேன்.
ஆங்கிலத்தில் a, e, I ,o, u ஆகிய உயிர் எழுத்துகளுக்கு முன்பு மட்டுமின்றி, உயிரெழுத்து ஒலிப்புடன் தொடங்கும் சொற்களுக்கு முன்பும் an hour என்பதுபோல், ‘an’ பயன்படுத்துவோம். இல்லையேல் பெருங்குற்றமாகக் கருதுவோம். ஆனால் நாம், நம் தாய்மொழியில் தவறாகக் குறிப்பிடுவதையே பெருமையாகக் கருதுவதால், இவை பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. இனியேனும் செம்மையாகப் பேசுவோம்! செம்மையாக எழுதுவோம்!
“ஒன்று’ என்பது உயிர் எழுத்துகளின் முன் ‘ஓர்’ எனவும், பிற இடங்களில் ஒரு எனவும் வரும் என்பதை நினைவில் கொள்வோம்.
ஓர் ஊழியரேனும் – ஓர் உலகம்
ஓர் ஆட்சியர் – ஓர் இதழ்
ஓர் ஆணை – ஓர் ஈகையாளர்
ஓர் இணையர் – ஓர் இயக்கம்
ஒரு பதிவேடு – ஒரு மருந்தகம்
ஒரு வங்கி – ஒரு திட்டம்
இவை போல் உயிரெழுத்துக்களின் முன் ஒவ்வொரு எனச் சொல்லாமல் ‘ஒவ்வோர்’ எனல் வேண்டும்.
ஒவ்வோர் ஆண்டு – ஒவ்வோர் அலுவலர்
ஒவ்வோர் இடம் – ஒவ்வோர் இனம்
ஒவ்வோர் அலுவலகம் – ஒவ்வோர் இல்லம்
ஒவ்வொரு முறை – ஒவ்வொரு பகல்
ஒவ்வொரு திட்டம் – ஒவ்வொரு பள்ளி
ஒவ்வொரு கல்லூரி – ஒவ்வொரு சுற்று
எனினும் உயிரெழுத்து இல்லாத இடத்திலும் “ஓர்’ எனப் பயன்படுத்தினால் தவறல்ல; மேலும் “ஒப்பற்ற’ என்று பொருள்படும் என்பர் சிலர். எனவே ஓர் கல்லூரி, ஓர் பள்ளி எனக் கூறினாலும் எக்காரணங்கொண்டும் உயிரெழுத்து முன் “ஒரு’ பயன்படுத்தக் கூடாது.
இவைபோல் “இரண்டு’ என்பதும் உயிரெழுத்துகளின் முன் ‘ஈர்’ எனவும் பிற இடங்களில் ‘இரு’ எனவும் மாறும்.
ஈர் அலுவலங்கள் – இரு பதிவேடுகள்
ஈர் ஆண்டு / ஈராண்டு இருவணிக மனை
ஈரைவர் – இரு மருந்தகம்
ஈரேழு – இரு தவறு
இவைபோல் தற்பொழுது பெரும் வழக்கில் மறைந்து போயுள்ள மற்றொன்றையும் நினைவூட்ட விரும்புகிறேன்.
அது இது, எது என்பனவும் உயிரெழுத்துகளின் முன் முறையே அஃது இஃது எஃது என மாறும்.
அஃது அவருடையதா?
இஃது எங்கிருந்தது?
எஃது உன்னுடையது?
அஃது உலகளாவிய திட்டம்
என்றுதான் குறிக்க வேண்டும்.
அது, இது, எது, யாது ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
அது பலகை – அது சரி
இது தட்டு – இது தவறு
எது தேவை? – எது செவ்வைப்படி?
யாது செய்வேன்
அவை இவை, எவை ஆகியவற்றின் பின்னும் வல்லினம் மிகாது.
அவை பெரிய அணைகட்டுகள்
இவை சிறிய திட்டங்கள் – எவை சிறப்பானவை?
* ஒவ்வொரு என்பது பற்றிப் பார்த்தோம் அல்லவா? ஒவ்வொரு என்பதன் பின் வல்லினம் மிகாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொருத் திட்டம், ஒவ்வொருத்தடவை, ஒவ்வொருப் பேரூராட்சி, ஒவ்வொருத் துறை என வல்லின எழுத்தைச் சேர்த்து எழுதுவதும் தவறு ஆகும்.
ஒவ்வொரு தொழிற்பேட்டை
ஒவ்வொரு பதிவேட்டிலும்
ஒவ்வொரு துறையிலும்
ஒவ்வொரு பிரிவிலும்
ஒவ்வொரு கடிதமும்
என வரும்.
* இக்கோப்பில் “ஒவ்வொரு பிரிவுகளிலும்” என உள்ளது. ஒவ்வொரு என்பது ஒருமையில்தான் முடிய வேண்டும். அனைத்துப் பிரிவுகள் அல்லது எல்லாப் பிரிவுகள் எனப் பன்மையில் சொல்லலாம். (ஒவ்வொரு பூக்களுமே’ என்பது தவறு. ஒவ்வொரு பூவும் அல்லது எல்லாப் பூக்களும் எனக் கூற வேண்டும்.)
* குற்றவாளிகள் அன்று என உள்ளது.
அஃறிணை ஒருமைக்குத்தான் ‘அன்று’ பயன்படுத்தப் பெற வேண்டும். சான்று:
முறையான கோப்பு அன்று
உரியமடல் அன்று
அஃறிணைப் பன்மையாயின் ‘அல்ல’ பயன்படுத்தப் பெற வேண்டும்.
தூய்மையான அலுவலகங்கள் அல்ல.
செவ்வைப்படிகள் அல்ல.
சரியானவை அல்ல.
* உயர்திணை ஒருமைக்கு அல்லன்/ அல்லள்
என்றும் உயர்திணைப்பன்மைக்கு ‘அல்லர்’ என்றும் பயன்படுத்த வேண்டும்.
குற்றவாளிகள் அல்லர்.
சுறுசுறுப்பாகப் பணியாற்றுபவன் அல்லன்
விரைவாகத் தட்டச்சிடுபவன் அல்லன்
நேர்மையான அலுவலர் அல்லர்
என்பன போல் வரவேண்டும். ஆனால் உயர்திணையில் அல்ல என்றே பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை வினைமுற்று ஆகும். எனவே, இவ்வினைமுற்று ஒன்றன் பால் ஆயின் “அன்று’ என்றும் பலவின் பால் ஆயின் அல்ல என்றும் ஆண்பால் ஆயின் அல்லன் என்றும் பெண்பாவின் அல்லன் என்றும் பலர்பால் ஆயின் அல்லர் என்றும் வரும்.
கேள்வி: “அல்ல’ என்று சொல்லாமல் இல்லை என்று சொன்னால் என்ன?
விடை: கண்டிப்பாகக் கூறக் கூடாது. பொருளே மாறுபடும்.
இவை கோப்புகள் இல்லை.
என்று சொன்னால் இவை கோப்புகள் இல்லை, வேறு எவையோ எனப்பொருள்படும்.
இவை நிதிக் கோப்புகள் அல்ல என்றால் இவை நிதி தொடர்பான கோப்புகள் அல்ல; வேறு பொருள் தொடர்பான கோப்பு எனப் பொருள்படும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply