(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி)

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

உணவு கூட்டுறவு அமைச்சர்

உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

* கால்நடைப் பேணுகை மீன்வளத்துறை

கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கைத்தறி, கைத்திறன், சவுளி, கைந்நூல் துறை

சவுளி என்பது தமிழ்ச்சொல்லே. (ஞ்)சவுளி என்ற உச்சரிப்பு பெற்றதும் நாம் பிற சொல்லாகக்கருதும் நிலை ஏற்பட்டது. கைந்நூல் என்பதைக் காதி அல்லது கதர் என்றே பெரும்பாலும் கூறுகின்றனர்.
பரம்பரையாக ஒரு குழித்தறியில் கையால் நெய்யப்பட்டுக் கையால் நூற்கப்பட்டு காதி நெய்யப்படுகிறது. காதி என்பது குழி என்னும் பொருள் கொண்ட இந்திச்சொல் khad என்பதில் இருந்து பிறந்தது. இந்தியில் கதர்(Khaddar) என்றும் அழைக்கப்படுகிறது.

“காதியின் ஒரே அளவுகோல் அது கையால் நூற்கப்பட்டு கையால் நெய்யப்பட்டிருப்பதுதான்” எனக் காந்தி யடிகளே கூறியுள்ளார். (மகாத்மா காந்தியின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 28, 1925) ஆனால் ஓர் இசுலாமிய அம்மையார் காந்தியடிகளுக்குக் கையால் நூற்ற துணியை அன்பளிப்பாகத் தந்த பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு மதிப்பு மிக்கது என்ற பொருளில் குறிப்பிட்டார். நெசவுத் தொழில் தமிழ்நாட்டின்மிகப்பழமையான சிறப்பான தொழில். எனவே, காதி என்றோ கதர் என்றோ குறிப்பிடாமல் கைந்நூல் என்றே சொல்லுவோம்.

* சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை

சுற்றுப்புறம் வனத்துறை

சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத் துறை

செய்தி சுற்றுலாத் துறை

தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (௲௨௱௬௰௧ – 1261)

என்னும் குறளில் திருவள்ளுவர் தலைவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின எனக் குறிப்பிடுகிறார். விரலே கணக்கிற்கு அடிப்படையாக உள்ளது.விரல், விரற்கடை என்பன கணக்கில் இடம் பெறும் அளவீடுகளாகவும் உள்ளன. என்பதும் விரலைத்தான் குறிப்பிடுகிறது. digital என்பதும் இலக்கம், இலக்கமுறை; சொடுக்கெண்;எண்மம்; எண்மமுறை; என்னும் பொருள்களில் பயன்படுகிறது. எனவே நாம் , Information Technology and Digital Services Department என்பதைத் தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை எனச் சொல்ல வேண்டும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வணிகத் துறை

தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை

நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை

நிர்வாகம் என்பது தவறு என்பதால் நிருவாகம் எனக் குறிப்பிடுகிறேன்.

நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை

* பணியாளர் பணியாட்சிச் சீர்திருத்தத் துறை

இத்துறையின் பெயரை இப்போது மனிதவள மேலாண்மைத் துறை (Human resource management department) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் நலத்துறை

மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

வணிகவரி பதிவுத்துறை

வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை

பொருளியல் புள்ளியல் இயக்கம்

பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

மதிப்பீடு செயல்முறை ஆராய்ச்சித்துறை

மருத்துவம் ஊரகநலப்பணிகள் துறை

மருத்துவ மனைகள் மருத்துவக் கல்லூரிகள்

மிகப்பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை

கலை பண்பாட்டுத் துறை

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரியம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மலைப்பயிர் துறை

கட்டுமான வடிவமைப்பு ஆராய்ச்சி

கட்டுமானம் பேணுகை

கட்டடப் பேணுகை கட்டுமான வட்டம்

என்பன போல்தான் குறிப்பிட வேண்டும்.

பராமரிப்பு எனக் குறிக்கப்படுவனவற்றைத்தான் நான் பேணுகை எனக் குறிப்பிடுகிறேன்.

மற்றும் எனக் குறிக்காமல் சுருக்கமாக (ம) என்றும் குறிக்கின்றனர். அதுவும் தவறு.

? “மற்றும்’ என்பது தமிழ்ச்சொல்தானே? பயன்படுத்தினால் என்ன தவறு?

விடை: “மற்றும்’ என்பது மேலும், மீண்டும் ஆகிய பொருள்களைத் தரும்

தமிழ்ச்சொல்.  இதனை “உம்’ (and) என்பற்கு மற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும்.

மற்ற.  பிற.

மற்றது.  ஏனையது.

மற்றநாள்.  மறுநாள், நாளை, மறுநாள்

மற்றபடி.  வேறுவகையில்.

மற்றவர்.  பிறர், ஏனையோர்

மற்று.  மறுபடியும், ஓர் அசைநிலை

மற்றையது.  குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று

மற்றொன்று.  பிறிதொன்று.

என்பன போல் பொருள் உள்ளனவே தவிர “உம்’ பொருள்பட எச்சொல்லும் இல்லை. மேலும் “உம்’ வரக்கூடிய இடங்களில் சான்றாக அலுவலரும் ஆசிரியரும் என்பது போல் குறிக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர் அலுவலர் என “உம்’ பயன்படுத்தாமல் குறிப்பதே மரபு. இது போன்ற இடங்களில் “உம்’ தொக்கி (வெளிப்படாது மறைந்து) நிற்பதால் உம்மைத் தொகை என்கிறோம். நாம் இரவு பகல், ஆடு மாடு, இயல் இசை  நாடகம், சேர சோழ பாண்டியர் என்று கூறுவோமே தவிர இரவு மற்றும் பகல் ஆடு மற்றும் மாடு, இயல் மற்றும் இசை மற்றும் நாடகம், சேரர் மற்றும் சோழர் மற்றும் பாண்டியன் எனக் கூறுவதில்லை.

அல்லது

இரவும் பகலும்

ஆடும் மாடும்

இயலும் இசையும் நாடகமும்

சேரரும் சோழரும் பாண்டியரும்

எனலாம்.

இவ்வாறு சேர சோழ பாண்டியர், இரவு பகல் என உம்மைத்தொகை வரும் பொழுது வல்லினம் மிகாது.

உம்மைத் தொகை தவிர, போன்ற, முதலிய ஆகிய என்னும் சொற்களையும் பலரும் சரியாகக் கையாள்வதில்லை.

கேள்வி: இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது? ஒன்று போல்தானே பயன்படுத்துகிறோம்?

விடை: பொருள் வேறுபாடின்றி அவ்வாறு பயன்படுத்துவது தவறு.

ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறி அதனை அல்லது அவரைப் போல என விளக்கும் இடங்களில் “போன்ற’ எனக் குறிப்பிட வேண்டும்.

சான்றாக,

மதுரை போன்ற ஆற்றுப்பாசன ஊர்களில் எனக் குறிப்பிடின், ஆறுகள் பாய்ந்து நீர்ப்பாசனத்திற்கு உதவும் பல ஊர்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு, இதுபோன்ற பல ஊர்கள் உள்ளமையை உணர்த்துகிறோம்.

“முதலிய’ என்பது மேலும் தொடர்ச்சியாக வேறு உள்ளனவற்றையும் குறிப்பிடுகின்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை கலை பண்பாட்டுத்துறை முதலிய துறைகளில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் சிறப்பாக உள்ளது என்றால் இவ்வாறு இருக்கக் கூடிய துறைகளில் இரண்டு துறைகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பொருள்.

அதே நேரம் “ஆகிய’ என்பது முற்றாக அமைந்து விடுகிறது.

மதுரை, சேலம், சென்னை ஆகிய நகரங்கள் என்றால் இம்மூன்று ஊர்களை மட்டும்தான் குறிக்கின்றோம். இவற்றைப் போன்று (இந் நேர்வில்) மேலும் ஊர்கள் உள்ளனவாகப் பொருள் இல்லை. தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றோம்.

அல்லது சேர, சோழர், பாண்டியர் ஆகியோர் எனக்குறிக்க வேண்டும்.

உயர்திணையாய் இருப்பின் பாவலர் முதலியோர் என்பது போல் முதலியோர் எனக் குறிக்க வேண்டும்.

எனவே “மற்றும்’ என்ற சொல்லைத் தவிர்த்து இடத்திற்கேற்ற போல்

உம்மைத் தொகை

உம்மை விரி

போன்ற, போன்றன, போன்றவை, போன்றோர்

முதலிய, முதலியன, முதலியவை, முதலியோர்

ஆகிய, ஆகியன, ஆகியவை, ஆகியோர்

என இடத்திற்கேற்ற இணைப்புச் சொற்களைக் கையாள வேண்டும். இவற்றிற்கு முரணாக “மதுரை ஆகிய மாவட்டங்களில்’ “இயல் இசை நாடகம் முதலிய 3 துறைகளில்’ “சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர்கள்’ எனக் குறிப்பிடுவது தவறாகும்.