எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail,receipt
? case என்றால் என்ன பொருள்?
நீங்கள் எந்தத் துறை?
? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?
‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.
case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.
மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.
? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply