எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 19. திசைப்பெயர்கள் : தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு
இக்கோப்பில் ‘ஆபிசர் குவார்ட்டர்சு’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. அலுவலர் குடியிருப்பு என்று தமிழில் குறி்த்திருக்க வேண்டும்.
???? ‘குவார்ட்டர்’ என்றால் கால் என்று பொருளில்லையா?
ஆம். அவ்வாறும் பொருள் உள்ளது. அவ்வாறு பார்த்தால் காலாண்டுகள் என வர வேண்டும். ஆனால், இடத்திற்குத்தகுந்த பொருளைக் குறிக்க வேண்டுமல்லவா
Quarters என்றால்,
உறையுள், உறைவிடம், குடியிருப்பு, படைத்தங்கல் இடம்,குடியிருப்பில்லம்; குடியிருப்புகள்;தங்குமிடம்
எனப் பல பொருள்கள். இருப்பினும் நாம் குடியிருப்பு என்ற சொல்லையே பொதுவாகக் கையாள்கிறோம். எனவே, அலுவலர் குடியிருப்பு என்று குறித்தலே நன்று.
???? Furnished quarters என்று சொல்கிறார்களே!.
வீட்டிற்கு வேண்டிய நாற்காலி, மேசை முதலியனவும், தண்கலன், சலைவப்பொறி முதலிய தேவையான துணைப்பொருள்களும் அமைந்த குடியிருப்பு அவ்வாறு Furnished quarters என அழைக்கப்பெறும். அறைகலன்களுடன் அமைந்த குடியிருப்பு என்று சுருக்கமாகக் குறிக்கப்பெறுகிறது.
இன்னும் சுருக்கமாக நாம் அனைத்தும் நிறைந்த குடியிருப்பு என்னும் பொருளில் நிறை குடியிருப்பு எனலாம். அதே நேரம்
Furnished house என்னும் பொழுது நிறைமனை எனலாம்.
quarters என்பதற்குச் சேரி, பாடி, வாசத்தலம், விடுதி, வேளம்
எனவும் பொருள்கள் உண்டு.
????? வாசத்தலம் தமிழ்ச்சொல்லா?
வசி (> வசிப்பிடம்) என்னும் சொல்லில் இருந்து வாசம் உருவானது. தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என்றனர். எனவே தலமும் தமிழ்ச்சொல்லே.
??? Quarters – கால்கள் என்றே குறிப்பிட்டால் என்ன?
நேர் பொருளாகப் பார்த்துக் குறிக்கக் கூடாது. தமிழில் சிந்தித்து உரிய சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
தமிழில் கால் என்றால்
நாலில் ஒன்று ; தமிழில் நாலிலொன்றைக் குறிக்கும் ‘வ’ என்னும் பின்ன எண்குறி ; பாதம் ; பூவின் தாள் ; அடிப்பாகம் ; எழுத்தின் கால் ; தேருருள் ; வண்டி ; கோல் ; குறுந்தறி ; நெசவுத்தறியின் மிதி ; கைப்பிடி ; தூண் ; பற்றுக்கோடு ; முளை ; மரக்கன்று ; மகன் ; இனமுறை(வம்சம்) ; பிறப்பிடம் ; வாய்க்கால் ; பிரிவு ; வழி ; நடை ; இடம் ; வனம் ; முனை ; மரக்கால் ; அளவு ; கதிர் ; மழைக்கால் ; காற்று ; வாதநோய் ; ஐம்பூதம் ; பொழுது ; செவ்வி ; தடவை ; காலன் ; கருநிறம் ; ஏழனுருபுள் ஒன்று ; ஒரு வினையெச்ச விகுதி ; ஒரு முன்னொட்டு
எனப் பொருள்கள் உள்ளன. இவற்றில் எதுவும் வீடுகள் அமைந்தபகுதியைக் குறிக்காது அல்லவா?
எனவே, கால் என்னும் பொருளில் வராமல் தங்குமிடங்களைக் குறிக்கும் Quarters என்பதைக் குடியிருப்பு என்று சொல்வதே சரியாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்


Leave a Reply