(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 7: தொடர்ச்சி)

இக்கோப்பில்,

“கை குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து கொடுக்கப்படும்’ என உள்ளது.

“கை’ என்பது  ஓரெழுத்து ஒரு மொழி எனப்படும். ஓரெழுத்துச் சொல்லிற்குப் பின்பும் வல்லினம் மிக வேண்டும்.

கைக்குழந்தை

தீத்தடுப்புப் பயிற்சி

தைத்திங்கள்

ஈத்தொல்லை

கேள்வி: ஓரெழுத்து ஒரு மொழி’ சிலவாகத்தானே இருக்கும்.

பதில் : இல்லவேயில்லை.

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாய் அமையும் சிறப்பு தமிழில் தான் மிகுதியாக உள்ளது. நன்னூலார், நெடில் எழுத்துக்களில் உயிர், 6 மகர வரிசை 6 குறில் எழுத்துகளில் நொ, து ஆகிய சேர்ந்து 42 என்கிறார்.

 கு.கௌ, பி, வே எனச் சிறப்பில்லாதன 4 உள்ளன என்றும் குறிப்பிடுகின்றார்.

உயிர் நெடிலில்

 ஆ- பசு, ஈ- உயிரினம்; கொடுத்தல், ஊ-இறைச்சி, ஏ- அம்பு, ஐ -அழகு; தலைவன், ஓ-மதகு நீர் தாங்கும் பலகை எனப் பொருள். ஒள என்றால் “கடிதல்’ என்றும் “பூமி’ என்றும் பொருள் உள்ளனவாதலின் இதுவும் “ஒரெழுத்து ஒரு சொல்லே.

க, ச, வ வரிசைகளில்

நன்னான்கு

கா-சோலை

கூ-கூவு

கை – உடலின் உறுப்பு:

கோ- அரசன்

சா- இறப்பு

சீ- இகழ்ச்சி வெறுப்புகளின் குறிப்பு, சீழ்

சே-எருது

சோ-மதில்

வா – வரச்சொல்லுதல்

வி -விசும்பு, காற்று

வீ-வீழும்பூ,

வை- வைத்தல், கூர்மை,

வெள-கவருதல்

(ஐந்தாவதாக வி சேர்க்கப்பட்டுள்ளது.)

த, ந, ப வரிசைகளில்

ஐந்தைந்து

தா-தரச் சொல்லுதல்:

தீ -நெருப்பு:

து-உப்பு:

தூ-ஊன்:

தே-தெய்வம்;

தை-தைத்திங்கள்:, தைத்தல்:

நா-நாக்கு:

நீ -முன்னிலைச்சுட்டு;

நே-அன்பு;

நை-நொந்துபோதல்;

நொ-துன்பப்படுதல்;

நோ-நோய்;

பா-பாட்டு,

பூ-மலர்,

பே-நுரை,

பை-நிறம்; அழகு; பொருள்வைப்பதற்குரிய பை

போ-போதல்

மா-மாமரம்; பெரிய,

மீ-மேல்,

மூ-முதுமை

மே-அன்பு,

மை-கண்மை; அச்சு மை;

மோ-முகருதல்)

யா வரிசையில் 1

யா-யாவை, மர வகை, கரி மரம்

குறில் எழுத்துகளில், அ, இ, உ மூன்றும் அப்பக்கம், இப்பக்கம், உட்பக்கம் எúச் சுட்டுப் பொருள் தருவன.

 “உ’கரச் சுட்டு இப்பொழுது பயன்பாட்டில் இல்லை எனினும், “ஊழையும் உப்பக்கம் காண் பர்’ எனும் குறள்அடிபோன்று “ஒ’ என்றால் “ஒற்றுமையாயிரு’ “தகுதியாயிரு’ எனப் பொருள்கள் உள்ளன. எனவே 12 உயிர் எழுத்துமே ஓரெழுத்து ஒரு சொல் ஆகும்.

பின்னர் வந்தவர்கள் மேலும் சில ஓரெழுத்தொரு மொழிகளைக் குறித்துள்ளனர்.

இவ்வாறு வேறு எந்த மொழியிலும் ஓரெழுத்து ஒரு மொழிகள் மிகுதியாக இல்லை என்பதும் தமிழுக்குரிய சிறப்புகளில் ஒன்றாகும்.

கேள்வி: தைத்திங்கள் என்பது போன்று பிற மாதங்களுக்கு அடுத்து வல்லினம் மிகாதா?

பதில்: தைத்திங்கள் என்பது இருபெயரிட்டு பண்புத் தொகையாகும். மாரிக்காலம், முல்லைப்பூ போன்றவையும் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

அனைத்து மாதங்களின் பெயர்களும் திங்கள் என்பதுடன் சேருகையில் “இருபெயரெட்டுப் பண்புத் தொகையாய்’ விளங்கி வல்லெழுத்து மிகும்.

தைத்திங்கள் மாசித்திங்கள், “பங்குனித் திங்கள், சித்திரைத் திங்கள், வைகாசித் திங்கள், ஆனித் திங்கள், ஆடித் திங்கள், ஆவணித் திங்கள், புரட்டாசித் திங்கள், ஐப்பசித் திங்கள், கார்த்திகைத் திங்கள், மார்கழித் திங்கள் என வரும்

கேள்வி: கிழமைகளில் இவ்வாறு வல்லின எழுத்து மிகுதியாய் வருமா?

பதில்: ஞாயிறு என்பதுடன் “கிழமை’ சேரும்பொழுது, ஞாயிற்றுக் கிழமை என வரும்.

செவ்வாய்க் கிழமை

வெள்ளிக் கிழமை

சனிக்கிழமை அல்லது காரிக்கிழமை

எனப் பிற கிழமைகளில் வல்லின எழுத்து இடையில் வரும்.

மேலும்

மழைக்காலம்

கோடைக்காலம்

பிச்சிப் பூ

மல்லிகைப்பூ

தாமரைப்பூ

அல்லிப்பூ

எனபன போல், பிற இடங்களிலும் வரும்.

மாதம் தமிழ்ச் சொல்லா?

வானியல் அறிவியல் மிகச்சிறந்த நிலையில் தமிழர்கள் இருந்துள்ளனர். நிலா பூமியைச் சுற்றும் கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட கால அளவைக் கொண்டு ஒரு காலப்பகுப்பை வகுத்துள்ளனர். திங்களை அடிப்படையாகக் கொண்ட அளவு என்பதால் “திங்கள்’ எனப் பெயரிட்டனர். நிலவின் மற்றொரு பெயர் மதி. மதியை அடிப்படையாகக் கொண்டு “மதியம்’ “மாதம்’ என உருவாகியுள்ளது. “மதியம்’ என்றால் நண்பகலன்று.

மாதம் மாசம் ஆனது இருப்பினும்

திங்கள் என்பது சிறப்பான சொல்லாகும்.

கேள்வி: ஆங்கில மாதங்களில் பெயர்களுக்குப் பின்னும் வல்லினம் மிகுமா?

மார்ச்சு, ஏப்பிரல், சூன், ஆகசுட்டு ஆகிய 4 மாதங்கள் நீங்கலாகப் பிற மாதங்களில்

சனவரித் திங்கள், பிப்ரவரித் திங்கள், மேத் திங்கள், சூலைத் திங்கள், செப்டம்பர்த் திங்கள், அக்டோபர்த் திங்கள், நவம்பர்த் திங்கள், திசம்பர்த் திங்கள் என வல்லின எழுத்து மிகுதியாய் வரும்.