(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி)

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே

கெடுக்குந் தகைமை யவர்.   

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  எண்: ௪௱௪௰௭ – 447)

கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?

பதவுரை

இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்;  துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை = கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து ஆட்கொள்வோரை; யாரே=யார்; கெடுக்கும் = தீங்கு செய்து கெடுக்கும்; தகைமை யவர்=தன்மை யாளர்; யாருமிலர்.

மணக்குடவர் ஆள்வார் என்றதற்குத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லார் எனப் பொருள் கொண்டார். இதைத் தழுவிப் பரிமேலழகர் ‘இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசர்’ எனப் பொருளுரைத்தார்.”

ஆட்சியாளராக இருப்பின் ஆட்சியில் தவறு செய்ய முற்படுகையில் கண்டித்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணிவும் தகைமையும் உடையவர் துணை இருப்பின் அவருக்குத் தீங்கு செய்யும் வலிமையுடையவர் யாருமிலர்.

வேறு நிலையில் இருப்பவராக இருப்பின், தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பின், அதிலிருந்து திசைதிருப்பி நற்பாதை கட்டும் வல்லைமையுடைய பெரியவர் துணை இருப்பின் அவரைத் தடுத்தாட்கொள்ளும் தீங்கினர் யாருமிலர்.

ஒரு துறையில் ஈடுபடும்போது, தவறு செய்ய விடாமல் உரிய பாதையில் இயங்கச் செய்யும் அத் துறை வல்லுநராக உள்ள அறிவில் பெரியோரை உறுதுணையாகக் கொண்டால் யாரும் அவருக்குத் தீங்கு செய்ய இயலாது. எனவே, எத்தகையவராக இருப்பினும் தக்க பெரியவரைத் துணையாகக் கொண்டால் தீங்கு செய்யும் வல்லமையுடையவர் யாரும் இலர்.

அதிகாரத்தில் உள்ளவர் அல்லது உயர் நிலையில் உள்ளவர் அருகில் ஆதாயம் அடைவோர் இருப்பது இயல்பு. அவர்கள் அறிவுரை கூறும் துணிவு உடையவராக இருக்க மாட்டார். அறிவுரை கூறுவதால் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சாமல் தீமையில் இருந்து காப்பாற்றுவதையே இலக்காகக் கொண்டு அறிவுரை கூறுவோரைத் துணையாகக் கொண்டால் எவ்வழியிலும் தீங்கு செய்வோர் நெருங்க இயலாது. இதையே திருவள்ளுவர் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே,

தீமை செய்யும் வல்லமையுடையவரிடம் இருந்து தீங்கு நேராமல் காத்துக் கொள்ள பெரியாரைத் துணையாகக் கொள்க.