குறட் கடலிற் சில துளிகள் 36 : நல்லார் தொடர்பைக் கைவிடாதே! -இலக்குவனார்திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 35 : துணையில்லாதவர்க்கு நிலைபேறு இல்லை-தொடர்ச்சி)
நல்லார் தொடர்பைக் கைவிடாதே!
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
(திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰ – 450)
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பல பத்து மடங்கு தீமை ஆகும்.
பதவுரை
பல்லார் – பலர்; பகை – எதிர்ப்பு;பகைத்தல்; கொளலின் – கொள்வதைவிட ; பத்து – ஓர்எண்; அடுத்த – மேன்மேல்வருதல்; தீமைத்தே – தீமையே; நல்லார் – நற்பண்புடைய பெரியோர்; தொடர் – தொடர்பை; கைவிடல் – கைவிடுதல் – கைவிட்டுவிடுதல்;
பத்தடுத்த என்பது பதின்மடங்கு என்பதைக் குறிக்கிறது. அடுக்கி வரும் பத்தின் எண்ணிக்கை எனக் கொள்ள வேண்டும்.
நல்லவர் தொடர்பைக் கைவிடக்கூடாது என்பதால் பல்லார் என்பதில் நல்லவர் அடக்கம் இல்லை எனலாம்.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (திருக்குறள், ௮௱௭௰௩ – 873)
எனத் திருவள்ளுவர் பலரின் பகை கொள்பவன் பித்துப்பிடித்தவரை விட அறிவிழந்தவன் என்கிறார்.
அத்தகைய பல்லார் தீமையை விட நல்லோர் தொடர்பைக் கைவிடலைப் பதின்மடங்கு தீமை என்கிறார்.
பகை என்பது ஒருவரின் வளர்ச்சிக்கு ஆக்கத்திற்கு ஊக்கத்திற்குத் தடையாய் அமையும்; தீங்கு விளைவிக்கும்; முன்னேற்றத்தைத் தடைப்படுத்தும். முயற்சி மேற்கொண்டு பகையை வெல்லலாம்; வாகை சூடலாம். என்றாலும் அதற்கு முன்னதாகப் பகையால் விளையும் தீமை தீமைதானே. அவ்வாறான தீமைகளை விடப் பன்மடங்கு தீமைகள் நல்லோர் தொடர்பைக் கைவிடுவதால் விளையும் என்கிறார் திருவள்ளுவர். நல்லோர் தொடர்பு ஒருவருக்குத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாக விளங்கும். அத்தகைய காப்பு கருவியைப் புறக்கணித்தால் பெருந்தீங்குகள் அல்லவா விளையும்? எனவேதான் நல்லார் தொடர்பைக் கைவிடுதலைப் பெருந்தீங்காகத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
முனைவர் சாலமன் பாப்பையா, அதிகாரம் முழுவதிலும் பெரியார் என்பதைத் துறைப் பெரியவர் என்றே குறிப்பிடுகிறார். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அந்தந்தத் துறைப் பெரியவர் நட்பும் உறவும் தொடர்பும் தேவை என்கிறார். பெரியார் என்பதற்கு அறிவிலும் பட்டறிவிலும் பண்பிலும் பெரியார் எனப் பிறர் கூறுகையில் இவர் மாறுபடக் கூறுவதும் சரியே. என்றாலும் துறைப்பெரியவராய் இருப்பினும் பண்பிற் சிறந்தவராயும் இருத்தல் வேண்டும்.
கடுவெளிச்சித்தர்
வல்லவர் கூட்டத்திற் கூடு
என்றும்
நல்லவர் தம்மைத்தள் ளாதே
என்றும் கூறுகிறார்.
இதனையேதான் திருவள்ளுவர் நல்லார் தொடர்பைக் கைவிடுவதன் தீமையைக் கூறுவதன் மூலம் நல்லார் தொடர்புடன் இருக்க வலியுறுத்துகிறார்.
எனவே, நல்லார் தொடர்பைப் பற்றிக் கொண்டு
நல்லன அடைந்து சிறப்போம்
– இலக்குவனார் திருவள்ளுவன்




Leave a Reply