(குறைகள் இருந்தாலும் பெரியார் ‘பெரியார்’தான்! 2. இந்து மதத்தை மட்டும்தான் பெரியார் எதிர்த்தாரா? – தொடர்ச்சி)

பெற்றோர் தம் குழந்தையிடம் “வெளியே போனால் காலை உடைத்து விடுவேன்” என்று சொன்னால் வெறுப்பில் சொல்லும் சொற்களா இவை. அவர்கள் தம் பிள்ளையிடம் முட்டாளே என்று சொன்னால் உண்மையிலேயே அவ்வாறு கருதுகிறீர்கள் என்ற பொருளா? உண்மையிலேயே முட்டாளாக இருந்தாலும் அறிவாளியாக எண்ணுவதுதானே பெற்றோர் இயல்பு. அதுபோல்தான் சில நேரங்களில் பெரியார் தமிழைப்பற்றியும் தமிழர்களைப்பற்றியும் சொன்னவையும். எனினும் சில நேரம் அவர் சொன்ன சுடுசாெற்களுக்கு அவர மீது பற்றுள்ள தமிழன்பர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும்  உண்மையிலேயே அவர் சொன்னவை தமிழுக்கு எதிரான பழிப்புச் சொற்களே. எனினும்  தமிழ்ப்பற்றுமிக்க அவர், தமிழ் மேலும் மேன்மையடைய வேண்டும் என்றும் தமிழர்கள் விடிவைக் காண வேண்டும் என்றும் பெருவிழைவு கொண்டவர். அவற்றிற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். எனவே, அவரிடம் காணும் செயற்பாடுகளில் மிக்கன கொண்டு, தக்கன போற்றி, அல்லனவற்றைப் புறந்தள்ளி அவரைப் போற்ற வேண்டும்.

பெரியார் தம் வாழ்நாளில் பயணம் மேற்கொண்ட தெ்ாலைவு 13,12,00 புதுக்கல்.இது பூமியின் சுற்றளவை விட 33 மடங்கு மிகுதி; இப்பயணத்தில் அவர் ஏறத்தாழ 10,700 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார்; திருமணங்களில், கல்விக்கூடங்களில் என அவர் ஆற்றிய அரங்கு உரைகளைச் சேர்த்தால் இது மிகுதியாக இருக்கும்; எண்ணாயிரத்திற்கு மேற்பட்ட நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்; 21,400 மணி நேரம் உரையாற்றியுள்ளார்; 39 முறை வெளிநாடுகளுக்குச்சென்று பரப்புரை ஆற்றியுள்ளார். இவை  யாவும்  மக்கள் நலனுக்காக அவர் வாழ்வை ஒப்படைத்ததை மெய்ப்பிப்பனவே.

ஆனால், சிலர் தமிழ்த்தேசியப் போர்வையில் திராவிடத்தை ஏசுவதாகக் கருதி, ஆரியத்திற்குத் துணை நின்று பெரியாரை ஏசுகிறார்கள். பெரியாரின் தவறான கொள்கைகளையோ அவற்றின் அடிப்படையிலான செயற்பாடுகளையோ சுட்டிக்காட்டினால் தவறல்ல. அவ்வாறு எச்செயல் எத்தன்மையத்தாயினும் அச்செயலையும் செயலின் விளைவுகளையும் ஆராய்ந்து நடுநிலையுடன் பேசுவதும் எழுதுவதும் தவறல்ல. பெரியார் பெரியார்தான் என்பதை உணர்ந்து அவரின் பெருமைகளையும் போற்ற வேண்டும்.

இவைபோன்ற கருத்துகளைப் பெரியார் தம் குடியரசு இதழிலும் பகுத்தறிவு இதழிலும் வெளியிட்டுத தமிழுக்கு நலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

தமிழறிஞர்கள் தமிழ்த்தூய்மையை வலியுறுத்தினர். பெரியாரும் , தமிழ்ப் புத்தகங்கள் தூய தமிழில் எழுதப்பட வேண்டும் என்றும் சமற்கிருதச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழுக்குப் பெருமை குறைந்து போகாது என்பது தவறு என்றும், அப்படிக் கலப்பதுதான் மொழியின் முன்னேற்றம் என்று கூறுவதும் தவறு என்றும்   வலியுறுத்தியுள்ளார். தமிழின்மீதுள்ள பெரியாரின் பற்றுக்கு இவைபோன்ற கருத்துகளே சான்றாகும்.

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும் எனப் பெரியார் வலியுறுத்துவன யாவும் அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவனவே. தமிழுக்காக என்ன செய்ய வேண்டும் எனப் பிறர் கூறுனவற்றைத் தம் இதழில் வெளியிட்டு அவற்றை மக்களிடையே பரப்பினார். சான்றுக்குப் பின்வருவனவற்றைப் பார்ப்போம்.

1. தமிழர் தமிழ்ப் பெயர் இட வேண்டும்.

2. தமிழ்நாட்டுப் பிரிவு, ஊர், தெரு, வீடு பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும்.

3. வீட்டிலும் கடைத்தெருவிலும், அலுவலகங்களிலும், வழிப் போக்கிலும் ஆங்கிலச் சொல்லும், சமஸ்கிருதமும் தமிழில் கலப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. தமிழில் இல்லாதவற்றிற்கு ஆங்கிலச் சொல்லைக் கலக்கலாம்.

5. தமிழில் இல்லாதவற்றிற்குப் புதிய சொல் உருவாக்க வேண்டும். அறிஞர்கள் உருவாக்கும் புதுச் சொல்லைப் பொது மக்கள் பயன்படுத்த வேண்டும்.

6. கோயில்களிலும், விழாக்களிலும் தமிழே ஒலிக்க வேண்டும்.

7. தமிழைப் பிழைபட வழங்குபவரைத் திருத்த வேண்டும்.

ஆகிய, சென்னை தமிழறிஞர் கழகத்தின் கோரிக்கைகளை 04.12.1943 குடிஅரசு ஏட்டில் பெரியார் வெளியிட்டு அவற்றிற்கான தம் உடன்பாட்டைத் தெரிவித்தார்.

பெரியாரின் தமிழ்ப்பற்றிற்கான சான்றுகளைப் பார்த்த பின்னர் அவரது தமிழ் மீதான பழிப்புரைகளையும் பார்ப்போம்.

(தொடரும்)