க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?)
ஆ.
தமிழர்
க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள்
பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும். தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது. காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும், உலகம் என்றால் உருண்டு திரண்டு இருப்பது என்றும் பொருளாம்.
ஆயின், நிலவுலகம் உருண்டையானது; சுழல்வது என்பதையும்; சூரியன் நிலையாக இருப்பது என்பதையும் நுணுகியறிந்தே தமிழர் இச்சொற்களை ஆக்கியிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது. இங்ஙனம் பல சொற்கள் உளவேனும், விரிவஞ்சி விடுத்தாம். வானில் இயங்கும் கோள்களைக் கூர்ந்து நோக்கியே நாள்களும், மாதங்களும் வரையறை செய்தனர் என்பதை அவற்றின் பெயர்களைக் கொண்டே அறியலாம். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய பருவகாலங்கள் அமைத்ததும் நுணுகியாய்ந்தே என்பதும் அறியத்தக்கதாம்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே,
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே…
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே!
என்னும் தொல்காப்பிய நூற்பா கொண்டு உலகிலுள்ள உயிர்களையெல்லாம் நுட்பமாக ஆராய்ந்தே, ஓரறிவுயிர் ஈறாக, வகைப்படுத்தினர் என்பது புலனாகின்றது.
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
என இடைக்காடனார் பாட
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்.
என ஒளவையார் பாடியது அறியற்பாற்று.
அணுவையும் துளைக்கலாம் என்ற எண்ணம் ஒளவையாருளத்தில் அன்றே கருக் கொண்டது என்பது போதருகின்றதன்றோ? ஓட்டுநரின்றியும் வானூர்தியிருக்கலாம் என்ற கருத்தைப் புறநானூற்றுப் பாடல் 27 நவில்வதை,
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான வூர்தி
எய்துப வென்பதம் செய்வினை முடித்தென்
என்னும் அடிகளாலறிக.
இன்று நாம் அதனை ஆங்கிலத்தில் PILOTLESS PLANE என்று கூறப் பெருமிதமுறுகிறோம். இக்கருத்து பண்டு முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர் மனத்தில் மலர்ந்ததாகும். ஐம்பெரும்பாவியங்களுள் ஒன்றாகிய சிந்தாமணியில் சச்சந்தன் என்ற அரசன், பகைவர் தனது அரண்மனையை முற்றுகையிட்டமை அறிந்து வயிறு வாய்த்திருந்த தன் மனைவி விசயை என்பாளைக் காப்பாற்றக் கருதி மயில் பொறி ஒன்று உருவாக்கி அவளை அதிலேற்றி அரண்மனையினின்றும் வெளியேற்றிய செய்தி நாம் அறிந்ததே.
மணிமேகலை என்னும் பாவியத்தில் பளிக்கறை புக்க காதையில் மணிமேகலை அரச குமரன் வருவதறிந்து பளிங்கறையுள் சென்று மறைந்து கொண்டாள். அரசகுமரன் அவளைக் கண்ணால் கண்டானேயன்றிக் குரல் ஓசையைக் கேட்க இயலவில்லையாம். இதனால் நாம் அறிவது யாது? இன்றைய அறிவியல் கண்ட ஒலி வெளிக்கேளாக் கட்டட அமைப்பு முறையைப் பாவியப் புலவர் அறிந்திருந்தாரெனத் தெரிகின்றதன்றோ?
இங்ஙனம் பற்பல அறிவியல் நுட்பங்களைத் தமிழ் நூல்களில் காணலாம். நுண்மாண் நுழைபுலமிக்க அறிஞர் தமிழிலக்கியச் சோலையுள் புகுந்து காண்க. அன்றியும், பண்டைத் தமிழர் மருத்துவ முறைகளை நன்கு அறிந்திருந்தனர் என்பதற்கும், மருத்துவகுலம் (பண்டுவர் குலம்) என்று ஒன்று இன்றும் இருப்பதே சான்றாகும்.
நச்சுப்பூச்சிக் கடிகட்கும், நாய், பாம்பு கடிகட்கும், ஈளை இருமல் (குட்டம்) தொழுநோய், புற்றுநோய்கட்கும், கால், கை முறிவு, புண்கள் முதலியவற்றிற்கும் மருந்திட்டுக் குணப்படுத்தும் பண்டுவர் பலர் இருந்தனர்; இன்றும் சிலர் இருக்கின்றனர். விலங்கு, பறவைகள் நோய் தீர்க்கும் மருத்துவ முறைகளும் அறிவித்தவர் அன்றும் இருந்தனர்; இன்றும் உளர்.
நம் நாட்டு மருத்துவமுறைகளை மீண்டும் மலரச் செய்ய இன்றைய தமிழக அரசு பாளையங்கோட்டையிலும், சென்னையிலும் நாட்டு மருத்துவக் கல்லூரிகள் நடத்துகின்றது. சித்த மருத்துவப்பிரிவு ஒவ்வொரு மருத்துவமனையிலும் நிறுவியுளது.
தமிழ்நாட்டில் பதினெண்சித்தர்கள் வாழ்ந்திருந்த வரலாறு நாம் அறிந்ததே. அவர்கள் மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து கொண்டு அங்குக் காணப்பட்ட பச்சிலைகள், மூலிகைகளால் பல நோய்களைப் போக்கியதுடன் நீண்டகாலம் வாழ்ந்தனர். போகர், அகத்தியர், தன்வந்திரி போன்றவர் யாத்த மருத்துவ நூல்கள் இவற்றிற்குச் சான்று பகர்கின்றன. விலங்குகள், பறவைகள் நோய் போக்க வாகடங்கள் என்ற ஓலைச்சுவடிகள் சில தமிழரிடம் உள. சிற்றூர்களில் விலங்கு மருத்துவர்கள் இன்றும் இருக்கின்றனர். அயல்நாட்டார் ஆட்சி, குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்ட பின்னர், நம் நாட்டு மருத்துவ முறைகள் கைவிடப்பட்டன். மேலைநாட்டு மருத்துவ முறைகளில் மக்கட்கு மோகம் பிறந்தது. கற்றவர் கண்ட அறிவியல் கருத்துகள் பற்றி ஓரளவு அறிந்தோம்.
இனிக் கல்லா மக்கள் கையாண்ட அறிவியல் முறைகள் பற்றியும் சிறிது காண்போம்.
முன்காலத்தில் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளக் கருவேலங்காயிலிருந்து மை செய்தனர். பச்சரிசியைக் கருக்கி, நீர் விட்டுக் காய்ச்சி மை செய்வதும் உண்டு. கடுக்காய், அன்னப்பேதி, கருவேலம்பிசின் ஆகியவற்றை நீர் கலந்து காய்ச்சி எழுதும் மை உண்டாக்கினர்.
நெற்றியில் பொட்டும், கோடும் அழியாமல் நிலையாக இருக்கப் பச்சைக் குத்திக் கொள்வதும் உண்டு. மகளிர் கை, கால்களில் பச்சைக் குத்திக் கொண்டனர். பச்சைக் குத்தும் தொழில் மேற்கொண்ட பெண்கள் பண்டு இருந்தனர். ஆண்கள் கூடத் தம் உடம்பில் வீரர் உருவங்களையும், தம் பெயர்களையும் குத்திக் கொண்டனர். அ.இ.அ.தி.மு.க.வினர் அண்ணாவின் உருவத்தைக் கைகளில் பச்சைக் குத்திக் கொண்டமை பற்றி நமக்குத் தெரியும். பச்சைக் குத்தப் பயன்படுத்திய பொருள் ஒரு கலவையே. குத்திய பிறகு அது பச்சை நிறமாகிறது.
மருதோன்றி இலையை அரைத்து கை, கால்களில் அப்பி வைப்பர். காய்ந்தவுடன் பெயர்த்தால் அப்பிய இடமெல்லாம் சிவப்பாகத் தெரியும். பண்டு மகளிர் பாதங்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பூட்டிய செய்தியும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மாட்டுப் பொங்கலன்று மஞ்சளை அரைத்துச் சுண்ணாம்புடன் கலந்து மாடுகளின் கொம்புகளிலும், உடல்களிலும் பூசினர்; பூசுகின்றனர். அஃது செந்நிறமாகத் தோன்றும். நெட்டி மாலைகட்கும் அதனால் நிறமூட்டுவர். ஓவியங்கட்கும், பாவைகட்கும் வண்ணந்தீட்டவும், ஆடைகள் நெய்யும் நூலுக்குச் சாயம் ஏற்றவும் தெரிந்திருந்தனர். பல வண்ணக் கலவைகள் கூட்டப் பண்டைத் தமிழர் வல்லவர் என்பதற்குச் சித்தன்னவாசல் குகையிலுள்ள வண்ண ஓவியங்களே சான்றாகும்.
பாலைக் காய்ச்சி உறைமோர் ஊற்றித் தயிராக்கி, அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து, அதைச் சூடு காட்டி உருக்கி நெய்யாக்கினர். இச் செயல் இப்பொழுதும் தொடர்கிறது. எள், தேங்காய், கொப்பரை, கடலைப்பருப்பு முதலியவற்றை மரச்செக்கிலிட்டு ஆட்டி நெய் எடுத்தனர். குறைவாக இருப்பின் பால்பிழிந்தோ, அரைத்தோ சட்டியிலிட்டுக் காய்ச்சியெடுப்பதும் உண்டு.
புழுங்கலரிசியையும், உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து, ஆட்டுரலில் போட்டு அரைத்துப் புளிக்க வைத்து இட்டலி, தோசை செய்தனர். அறுசுவை உண்டிகள் செய்யவும் பண்ணியங்கள் செய்யவும் தெரிந்திருந்தனர். இன்றும் அம்முறைகள் நடைமுறையில் உள்ளன. சமையல்கலை பற்றிய நூல்கள் அக்காலத்திலும் இருந்தன.
கல்லா மாந்தர் கண்ட மேற்குறிப்பிட்டவையெல்லாம் இற்றைஞான்றுள்ள வேதியியல் மாற்றத்தின் (Chemical Change)பாற்பட்டனவே. இங்ஙனம், அறிவியல் அறியாத அக்காலத்திலேயே அறிவியல் நுணுக்கஞ் சார்ந்த செயல்களைத் தமிழர் இயல்பாகவே செய்து வந்தனர் என ஒருவாறு கண்டோம். ஆனால் இன்று நாம் பயன்படுத்தும் அறிவியல் கண்ட அரும் பொருள்களில் எதுவும் நம் தமிழர் கண்டுபிடித்ததாயில்லையே! ஏன்?
இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட குமுகச் சூழல்களும், பிறவும் தமிழர்களைத் தந்நம்பிக்கை அற்றவராக, மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கியவராக ஆக்கி விட்டமையால், அறிவியல் நுட்பங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பிலாது போயிற்று என அறிக. வருங்காலத் தலைமுறையினராகிய இன்றைய இளைஞர்கள் தந்நம்பிக்கையும், தற்படைப்புத்திறனும் மிக்கவராக விளங்கிப் புதுவது புனையும் அறிவியல் அறிஞர்களாகத் திகழ வேண்டும் என நனியும் விழைகின்றோம். வாழ்க தமிழ்! வளர்க தமிழர்தம் அறிவு!!
(23.3.1978 -இல் திருச்சி வானொலியில் பேசியது)
(நன்றி : வளரும் தமிழ் உலகம்)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை







Leave a Reply