(சட்டச் சொற்கள் விளக்கம் 996-1000 : தொடர்ச்சி)

 1001. Authorised officer      /  Authorized officer           அதிகாரம்‌ பெற்ற அலுவலர்‌
 
அதிகாரம்‌ பெற்ற அலுவலர் என்பவர் தனியொருவர், ஓர் அமைப்பு அல்லது அரசு நிறுவனத்தின் சார்பாகச் செயற்பட, குறிப்பிட்ட கடமைகளைச் செய்ய, ஆவணங்களைச் செயற்படுத்த அல்லது சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்தும் முடிவுகளை எடுக்க அதிகாரம் அல்லது அதிகாரப்பூர்வமாக அதிகாரம் வழங்கப்பட்டவர்.

இந்த ஏற்பு/ அங்கீகாரம் இயக்குநர்கள் குழு அல்லது அரசுத் துறை அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் மூலம் வரலாம், மேலும் அதிகாரியின் அதிகாரங்கள் பொதுவாக ஓர் ஒப்பந்தம், சான்றிதழ் அல்லது சட்டத்தில் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
 1002. Authorised representation   / Authorized representation            அதிகாரமளிக்கப்பட்ட சார்பாற்றுநர்‌

அதிகாரமளிக்கப்பெற்ற சார்பாளர்/சார்பர்/சாரர்
அதிகாரமுள்ளவரால் அவர் சார்பில் செயற்பட அதிகாரமளிக்கப்பட்ட எந்த ஓர் அலுவலர், முகவர்,எந்தத் தரப்பாராலும் அமர்த்தப்பட்ட அல்லது தக்க வைக்கப்பட்ட தற்சார்பு ஒப்பந்தர்,  சார்பாளர்/சார்பர்/சாரர் ஆவார்.
1003. Authorised to forbid   /Authorized to forbid              தடைசெய்ய அதிகாரமளிக்கப்பட்ட

தடைசெய்ய அதிகாரமளிக்கப்பட்டவர் என்பவர் எதையும் தடுப்பதற்கு அல்லது அனுமதி மறுப்பதற்கு அல்லது ஏற்காமைக்கு அலுவல் முறை இசைவையோ சட்டவழியிலான அதிகாரத்தையோ பெற்றவர்.
 1004. Authorised translation/Authorized translation          அதிகாரம்பெற்ற மொழிபெயர்ப்பு

அதிகாரம்பெற்ற மொழிபெயர்ப்பு என்பது பாதுகாக்கப்பட்ட தொழில்முறை பட்டத்தை வைத்திருக்கும் ஏற்கப்பெற்ற மொழிபெயர்ப்பாளர்களால் தரப்படும் சட்டபூர்வமான மொழிபெயர்ப்பாகும்.
1005.Authoritative text           அதிகார உறுதிபெற்ற உரை

(S. 6 OLA,1963) அலுவல் மொழிச் சட்டம் 1963  பிரிவு 6 இல் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள (இந்தி தவிர) எந்த மொழியிலும்  மேற்கொள்ளும் மொழிபெயர்ப்பு, அதிகாரப்பூர்வப் பதிவிதழில் குடியரசுத்தலைரின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்படுவது. 
அரசமைப்புச் சட்டம் அல்லது ஒன்றிய மாநில அரசுகளின் சட்டங்கள், சட்ட விதிகள் ஆகியவற்றின் மொழி பெயர்ப்பு எதுவாக இருந்தாலும் அது சட்டமன்ற அவைகளாலோ நாடாளுமன்ற அவைகளாலோ அரசின் சட்டத் துறை அல்லது சட்ட ஆணையம் அல்லது சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பால் ஏற்கப்படுவதே அதிகார உறுதிபெற்ற உரை.