(சட்டச் சொற்கள் விளக்கம் 1036-1040 : தொடர்ச்சி)

1041. Awareness  விழிப்புணர்வு

சட்ட விழிப்புணர்வு . தனி விழிப்புணர்வு, குமுக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, உணர்வு விழிப்புணர்வு, அமைப்பு விழிப்புணர்வு, உறவு விழிப்புணர்வு, குடிமை விழிப்புணர்வு, தொழில்நுட்ப விழிப்புணர்வு, நலவாழ்வு விழிப்புணர்வு, மனநல விழிப்புணர்வு மன்பதை விழிப்புணர்வு, ஊடக விழிப்புணர்வு, சுற்றுப்புற விழிப்புணர்வு, வரலாற்று விழிப்புணர்வு, முதலீட்டு விழிப்புணர்வு, சேமிப்பு விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு முதலியவாறாகப் பலவகைப்படும்.

தொடர்பான சிக்கல்கள் வழக்குகளில் இடம் பெறும்பொழுது தொடர்புடைய சொற்கள் சட்டச் சொற்கள் ஆகின்றன.

சட்ட விழிப்புணர்வு (Legal awarness) என்பது பொது மக்களுக்கான சட்டக் கல்வி அல்லது சட்ட நூலறிவு என்றும் அழைக்கப்படுகிறது; சில நேரங்களில் குடிமக்களின் கல்வி எனவும் குறிக்கப் பெறுகிறது.

இது தனியர்களைச் சட்ட அமைப்பில் வலுப்படுத்தும் வகையில் சட்டங்கள், உரிமைகள், சட்ட செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதைக் குறிக்கிறது.

சட்டம், நீதிமன்ற அமைப்புகளுக்குத்  தொடர்புடைய பொதுப் பலன்களையும் திறன்களையும் மேம்படுத்துவதற்காக நோக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளை இது கொண்டுள்ளது. மேலும் அந்தச் செயல்பாடுகளுடன் தொடர்புடைய நடைமுறை, படிப்புத்துறைகளையும், சட்டம் பற்றிய அறிவை  மக்களுக்கு வழங்குவதில் குமுகாய- தொழில்முறை இயக்கத்தையும் குறிக்கிறது.

அமெரிக்கர்சட்ட உரைஞர் சங்கம்(American Bar Association) சட்ட விழிப்புணர்வுஎன்றால் . குறையாய்வுத் தீர்ப்புகள் குறித்த சட்டப் பொருண்மைகள், சட்ட வழிமுறை, வாய்ப்புள்ள சட்ட வளங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தவும் மேம்படுத்தவும் உள்ள வழிகளையும் உத்திகளையும் வெளிப்படுத்தவும் வழிகாட்டுவது என்கிறது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், (PHRA) 1993 பொது மக்களுக்கு மனித உரிமைகள் குறித்தும் தொடர்பான சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவை என்பதற்காக இயற்றப்பட்டது.
1042. Axe to grindமறைமுக நோக்கம்   

கூறியதையே திரும்பத் திரும்பக்கூறுதல் என்பது நேர் பொருள். சட்டத் துறையில் மறைநோக்கத்தை – அஃதாவது மறைமுக நோக்கத்தைக் குறிப்பது. மறை நோக்கம் என்றால் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் மறைமுக நோக்கம் எனக் குறிக்கப்பெற்றுள்ளது. எனினும் நாளடைவில் மறை நோக்கம் என்றே பயன்படுத்தலாம்.

இத் தொடர் ஒருவர், தூய பொதுநலத்தின் அடிப்படையில் செயல்படாமல், மாறாக ஒரு குறிப்பிட்ட ஆதாயத்தைப் பெறுவதற்காக அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார் என்பதை உணர்த்துகிறது.

தனியரின் நோக்கங்கள் வெளிப்படையானவை அல்ல என்றும், அவை தனிப்பட்ட மனக்குறைகள் அல்லது மறைமுக நலன்களால் உந்தப்பட்டிருக்கலாம் என்றும் இத்தொடர் சுட்டிக்காட்டுகிறது.