சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 861-870 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 871-875
| 871. alternative dispute resolution | பிணக்குத் தீர்வு மாற்று வழி பிணக்கு ஏற்படும் பொழுது நீதிமன்றம் செல்லாமல் வேறு வழிகளில் பிணக்கைத் தீர்த்துக் கொள்ளும் வழி. நடுநிலை இணக்குவிப்பு, சேர்ந்து முடிவெடுக்கும் குடும்பச்சட்டம் முதலியன மாற்று வழிகளாம். |
| 872. alternative | இரண்டில் ஒன்றான, மாற்றுவழி, ஒன்றுவிட்டு ஒன்று இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாத்தியக்கூறுகளில் ஒன்றுக்கு மாற்றாக அமையும் வாய்ப்பு. |
| 873. Alternative plea | மாற்று முறையீடு மாற்று வாதுரை மாற்று வாதம் வழக்கில் ஒரு தரப்பினர் பல சாத்தியக் கூறுகளை வாதிட அனுமதிக்கும் ஒரு சட்ட முறைப்படியான செயலாகும். இது வாதுரைகளில் புனைந்துரையான அல்லது மாற்றான உரிமைக் கோரல்களை அல்லது காப்புரைகளை முன் வைப்பதன் மூலம் செய்யப்படுகிறது. கோரிக்கைகள் அல்லது காப்புரைகளில் ஒன்று செல்லுபடியாகவில்லை என்றால், மற்ற கோரிக்கைகள் அல்லது காப்புரைகளுக்கு இன்னும் விடையிறுக்க வேண்டும் என்பது கருத்தாகும். |
| 874. Alternative relief | மாற்றுத் தீர்வு மாற்றுத் தீர்வு என்பது சட்டமுறைச் சொல்லாகும். சட்ட முன்மொழிவு அல்லது அழைப்பாணை அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவிலிருந்து வேறுபட்ட ஓர் உத்தரவைக் குறிக்கிறது. மனுக்கள் அல்லது எதிர்வாதுரைப் பத்திரங்களில் தெளிவாக ஆணை குறிப்பிடப்பட்டால் இதனை வழங்கலாம். நீதிமன்ற மாற்றுத் தீர்வு என்பது நீதிமன்றத்தில் யாராவது கேட்கும் ஒரு வகைத் தீர்வு. அவர்கள் கேட்கக்கூடிய மற்ற வகையான தீர்வுகளிலிருந்து இது வேறுபட்டது, மேலும் அவர்கள் ஒரு வகையான தீர்வை மட்டுமே பெற முடியும். சான்றாக, பணத்தை வழங்கச் செய்யுமாறு கேட்கலாம் அல்லது குறிப்பிட்ட ஒன்றை மாற்றாகச் செய்யுமாறு கேட்கலாம், ஆனால் அவர்களால் இரண்டையும் கோரவோ பெறவோ முடியாது. பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு அரசு வழங்கும் பணம் போன்ற தேவைப்படும் உதவி என்றும் பொருள்படும். |
| 875. Alternative remedy | மாற்றுத் தீர்வழி நீதிப்பேராணைகளைக் கருதிப்பார்ப்பதற்காக உரிய அதிகார வரம்பிற்கு மாற்றான தன் விதிப்பான(self-imposed) வழிகாட்டுதலாகும். இது சட்டச் சிக்கலல்ல. மாறாக, இது கொள்கை, நடைமுறை, தீர்ப்பு தொடர்பானதாகும். எனவே, மாற்று வழிக்கு வாய்ப்பு இருந்தாலும், இயல்பு மீறிய சூழல்களில், நீதிப்பேராணை வழங்கலாம். remedy என்றால் மருந்து என்று மட்டும் பொருளல்ல. தீர்வு, கழுவாய், பரிகாரம், ஈடுசெய்தல், சட்டவாயிலான இழப்பீடு, (நாணயத்தின் எடையில் ஏற்கத்தக்க) மாறுபாட்டளவு, (வினை) குணப்படுத்து, திருத்து, சீர்ப்படுத்து, பரிகரி, ஈடுசெய். எனப் பல பாெருள்கள் உள்ளன. நீதித்துறையில் முதலில் கோரப்படும் தீர்விற்கு மாற்றான மறு தீர்வைக் குறிப்பதாகும். காண்க: Alternative relief |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply