செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010): இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பொழுது (சூன் 2010) செம்மொழிச் செயலாக்கம் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இப்போதும் பொருந்துபவையே. எனவே, அவற்றை இப்போது வெளியிடுகிறேன்.
செம்மொழிச் செயலாக்கம் குறித்து ஒரு செவ்வி-1(2010)
? ஐயா, வணக்கம். உங்களிடம் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது தொடர்பாகச் சில வினாக்களைத் தொடுத்து விடை கண்டறிந்து வாசகர்களுக்கு அளிக்கலாம் எனக் கருதுகிறோம்.
# வணக்கம். உங்கள் வாசகர்களுடன் செவ்வி வழித் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு நல்கியமைக்கு நன்றி. பலரும் செம்மொழித் தகுதி தமிழுக்கு இப்பொழுதுதான் கிடைத்துள்ளது போல் தவறாக எழுதியும் பேசியும் வருகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய முதல் மொழியான தமிழ் அறிவியல் முறையில் அமைந்து செம்மையான மொழியாகவே தோன்றியுள்ளது. செம்மொழித் தன்மை மிக்க தமிழுக்கு அதற்கான அறிந்தேற்பு அல்லது தகுதியேற்பு அல்லது அங்கீகாரம் என்பதுதான் இப்பொழுது இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
? அப்படியானால் செம்மொழி என்று தமிழ் எப்பொழுது குறிக்கப்பட்டது.
# செம்மையான மொழி என்னும் பொருளில் செம்மைத் தமிழ் செந்தமிழ் என அழைக்கப்பட்டுள்ளது. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள தொன்மையான நூல் தொல்காப்பியம். உலக மொழிகளிலும் கிடைத்துள்ள நூல்களில் இதுவே தொன்மையான நூல் ஆகும். தொல்காப்பிய நூற்பா 881 இல் செந்தமிழ் நிலத்து என்றும் நூற்பா 882 இல் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் என்றும் தொல்காப்பியர் செந்தமிழ் மொழி வழங்கிய நிலம் என நம் நாட்டைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்திற்கு முன்னுரை போல் பாயிரம் எழுதிய பனம்பாரனார் “செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்” என்கிறார். தொல்காப்பியர் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச சேர்ந்தவர் என அறிஞர்கள் கூறுகின்றனர். செம்மொழித் தமிழ் மத்திய ஆய்வு நிறுவனத்தின் சார்பில் கூடிய தமிழறிஞர்கள் தொல்காப்பியர் காலம் கி.மு.711 என வரையறுத்துள்ளனர். எனவே, அப்பொழுதே செந்தமிழாக விளங்கிய தமிழின் நிலை குறிக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பல ஆயிரம் இலக்கியங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவதே இலக்கணம் என்பதால் தொல்காப்பியருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செந்தமிழாக நம் அருமைத் தமிழ் மொழி விளங்கியதைப் புரிந்து கொள்ளலாம். தொல்காப்பியருக்குப் பின்னரும், குற்றமில் செந்தமிழ், சீரின்மலி செந்தமிழ், பண்பட்ட செந்தமிழ், பழுத்த செந்தமிழ், என்றெல்லாம் காலம் தோறும் தமிழின் செம்மொழித் தன்மை குறிக்கப்பட்டுள்ளமையால் அன்னைத் தமிழின் செம் மொழித் தன்மை காலம் தோறும் உணரப்பட்டுப் போற்றப்பட்டதை உணரலாம்.
? பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் செம்மொழியாக உள்ளதெனில் ஏன் அது குறித்து இப்பொழுது வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்தது?
# நல்ல கேள்வி. ஆரியத்தின் தவறான செல்வாக்கால் தமிழின் தாய்மை, தொன்மை, முதன்மை, தூய்மை, முதலான பல சிறப்புகளும் மறைக்கப்பட்டன. சமற்கிருதம் தமிழுக்கு மிகவும் பிந்தைய கால மொழியாய் இருப்பினும் தமிழ்ச் சொற்கள் பலவற்றை அம்மொழி உள்வாங்கியிருப்பினும் தமிழ் எழுத்து அமைப்பைப் பார்த்தே அம் மொழி தனக்குரிய எழுத்து வடிவத்தை அமைத்திருப்பினும் அதைத் தேவ மொழி என்றும் பிற மொழிகளுக்குக் கடன் கொடுக்குமே அன்றிக் கடன் வாங்காது என்றும் தவறாகப் பரப்புரை மேற்கொண்டனர். எனவே, காலந்தோறும் தமிழ் அறிஞர்களும் நடுவுநிலைமையுடன் தமிழின் சிறப்பை வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
? அண்மைக்காலங்களில் தமிழின் செம்மொழித் தன்மையை வலியுறுத்தவர்கள் என யார், யாரைக் கூறலாம்?
# சீகன்பால்கு என்னும் ஐரோப்பிய அறிஞர் செருமானிய மன்னரிடம் தமிழ்தான் உலகில் மிக உயர்ந்த நிலையிலுள்ள மொழி என்றும் செம்மொழி என்றும் விளக்கித் தமிழின் அருமையை மன்னர் அவையில் விளக்கியுள்ளார். வள்ளலார் இராமலிங்க அடிகள் அவர் காலத்தில் இருந்த சங்கராச்சாரியாரிடம் தமிழின் செம்மொழித் தன்மையை விளக்கி இந்திய நிலப்பகுதியில் உள்ள மொழிகளுக் கெல்லாம் தந்தையாகத் தமிழ் விளங்கியது என விளக்கியுள்ளார். தமிழ் மொழி தனித்து இயங்கக் கூடிய உயர்தனிச் செம்மொழி என அறிஞர் காலுடுவெல் அவர்கள் தம்முடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (Comparative Studies of Dravidian Languages) என்னும் நூலில் (1856) நன்கு ஆய்ந்து விளக்கியுள்ளார். சூரிய நாராயண சாத்திரியார் என்னும் தம் பெயரை மாற்றி வைத்துக் கொண்ட அறிஞர் பரிதிமாற்கலைஞர் அவர்கள், தமிழ் வியாசங்கள் என்னும் தம் நூலில் (1897) எவ்வகையாக ஆராய்ச்சி செய்தாலும் தமிழே உயர்தனிச் செம்மொழி என உறுதிபட ஆராய்ந்து தெளிவுபடுத்தியுள்ளார். சங்கப் பாடல்கள் செம்மொழி இலக்கியங்கள் என அறிஞர் (இ)ரெனால், அறிஞர் மெட்டில் ஆகியோர் உலகிற்கு உணர்த்தியுள்ளனர். தமிழ் மிக மிக முற்பட்ட காலத்திலேயே இத்தகைய வளர்ச்சியைப் பெற்றதாக அறிஞர் பி.டி.சீனிவாச ஐயங்கார் விளக்கியுள்ளார். இவர்கள் போன்ற அறிஞர்களை நாம் என்றென்றும் போற்றிச் சிறப்பிக்க வேண்டும்.
? தமிழ் மட்டும்தான் செம்மொழியா?
# உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருப்பினும் இலக்கிய இலக்கணச் சிறப்பு மிக்கவை 600 மொழிகள் மட்டும்தான். இவற்றுள்ளும் 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வரலாறு உடையன தமிழ், சீனம், இலத்தீன், ஈபுரு, கிரேக்கம், அராமிக்கு ஆகிய 6 மொழிகள்தாம். இவையும் இவற்றிற்கு அடுத்த நிலையில் உள்ள சமற்கிருதம், பெருசியன், அரபி ஆகிய 3 மொழிகளும் செம்மொழிகள் எனப்படுகின்றன.
? செம்மொழிக்கான அறிந்தேற்பு அல்லது அங்கீகாரம் என்பது ஏன் தேவைப்பட்டது?
# இந்த நிலப்பரப்பின் மண்ணின் மொழியாகத் திகழும் தமிழ் மொழிச் செம்மொழியாகத் திகழ்ந்தாலும் வந்தேறி மொழிகளான சமற்கிருதம், அரபி, பெருசியன் ஆகிய மொழிகளுக்குச் செம்மொழி என்னும் தகுதியின் அடிப்படையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டமையால், மக்கள் மொழியாகிய தமிழுக்கும் அத்தகுதிக்கான அறிந்தேற்பு வேண்டும் எனத் தமிழறிஞர்களும் தமிழ் அமைப்புகளும் வேண்டின. தமிழ் ஈழம் தனிக் குடியரசாகத் திகழ்ந்த போதும் பிற நாடுகளின் அறிந்தேற்பு அதற்குக் கிடைக்காமையால்தானே இனப்படுகொலை நடந்த பொழுது தட்டிக் கேட்க யாரும் வரவில்லை. தமிழ் மொழிக்குச் செம்மொழிக்கான அறிந்தேற்பு இல்லாமல் போனால் தாழ்த்தப்பட்டு அழிக்கப்படலாம் அல்லவா? அவ்வாறில்லாமல் அறிந்தேற்பு கிடைப்பின் உலகெங்கும் பரப்ப வாய்ப்பு கிட்டும் அல்லவா?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply