பெண்கள் மாலைக் காலத்திலே இரும்பாலான விளக்கை ஏற்றி வைப்பார்கள்; நெல்லையும் மலரையும் தூவி அவ்விளக்கொளியை வணங்குவார்கள் என்கிறார். இவ்வாறு அன்றாடம் விளக்கு வழிபாடு நடந்துள்ளது. இதுவே, பின்னர்க் கார்த்திகை நாளில் கார்த்திகை மீன் நாளன்று சிறப்பாக வழிபடும் விழாவாக மாறியது. கார்த்திகை விழாவைப் பெருவிழாவாக நாடெங்கும் கொண்டாடினர். அந்நாள் புது மணமக்களுக்குத் தலை கார்த்திகையாக விளங்கியது. இதுவே, கார்த்திகை தீபாவளியாக மாறிய பின்னர்த் தலை தீபாவளியாக மாறியது.


கார்த்திகைத் திருநாள் குறித்த மேலும் சில பாடல்களைப் பார்ப்போம்.


தனித்தனியாகக் கொண்டாடிய கார்த்திகைத் திருநாள் குமுகாய விழாவாக மாறிப் பல குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.
வானம் ஊர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்டு
இலையில மலர்ந்த முகையில் இலவம்
கலிகொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அருஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத் தோன்றி”

(அகநானூறு: 11: 1-5) என ஒளவையார் கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
வானத்தில் ஒளிவட்டமான சூரியன் ஊர்ந்து செல்கிறது. அப்போது நெருப்பாகச் சிவந்து வெப்பத்தைக் கக்குகிறது. கடும் வெப்பத்தால் அழகிய காடு காய்ந்தது. அதனால் இலையே இல்லாமல் இலவமரத்தில் ஒரு மொட்டும் விடாமல் எல்லா மொட்டும் மலர்ந்திருந்தன. அதனைக் கண்டார் ஒளவையார்.அவருக்குப் பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து ஏற்றிய அழகிய விளக்குகளின் சுடர் கொடியாகப் படர்ந்து வரிசையாய் நீண்டு செல்வது போல் தோன்றியுள்ளது.
தீபாவளி என்றால் என்ன? தீபம்=விளக்கு; ஆவளி=வரிசை. விளக்கு வரிசையைத்தானே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒளவையார் குறிப்பிடுகிறார்.
கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல்நாள் பரணி நட்சத்திரம். கார்த்திகையை வரவேற்க முதல்நாளே விளக்கேற்றி வைப்பார்கள். அதனையே புலவர் கண்ணங் கூத்தனார் தலைநாள்விளக்கு என்கிறார்.
“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெலாம் பூத்தன தோன்றி”

கார்நாற்பது: 26: 1 – 3
நலம்தரும் கார்த்திகைத் திருநாளின் தலைநாளில் நாட்டுமக்கள் ஏற்றி வைத்த விளக்கு வரிசையைப் போல் எல்லா இடங்களிலும் வரிசையாகத் தோன்றிப்பூக்கள் பூத்தனவாம். பொதுவாகப் புலவர்களுக்குச் செந்நிறப் பூக்கள் யாவும் கார்த்திகை விளக்கொளிபோலவே காட்சியளித்துள்ளன.
போர்க்களத்தில் குருதி ஓடுவதைப்பார்க்கும் புலவர் பொய்கையாருக்கு அது கார்த்திகை விளக்குகளின் செஞ்சுடரைத்தான் நினைவூட்டுகி்றது.
“ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண்குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே
போர்க் கொடித் தானை பொருபுனல் நீர்நாடன்
ஆர்து அமர்அட்ட களத்து”

  • பொய்கையார் , களவழி நாற்பது: 17
    ஆர்ப்பு=ஆரவாரம்; ஞாட்பு=போர்க்களம்; சாறு= விழா. கார்த்திகைச் சாற்றில்= கார்த்திகை விழாவில்; கழி விளக்கு=பெரு எண்ணிக்கையிலான விளக்குகள். கார்த்திகைத் திருவிழாவில் எண்ணமுடியாத அளவிற்கு ஏற்றப்படும் கார்த்திகை விளக்கின் தீச்சுடர் அசைந்தாடி தொடர்ந்து செல்வது போலப் போர் வீரர்களின் உடல்களில் இருந்து குருதி ஓடியதாம்.
    அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
    செல் சுடர் நெடுங் கொடி போல,
    பல் பூங் கோங்கம் அணிந்த காடே.
  • நற்றிணை 202, 8-10
    இப்பாடலில் தலைவின் தந்தையுடைய காட்டைப்பற்றிப் புலவர் கூறும்பொழுது கார்த்திகைத்திருநாளைக் குறிப்பிடுகிறார்.
    அறம் செய்து வாழ வேண்டும் என்பது தமிழர் நெறி. நன்னாள் வந்ததெனில் அறச்செயல்களில் தவறாமல் ஈடுபட வேண்டும். அவ்வாறு அறம் செய்வதற்குரிய கார்த்திகைத் திங்களில் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ள நெடுவரிசைபோல், கோங்கம் வரிசையாகப் பூத்துக் கிடக்கிறது என்கிறார் புலவரும் மன்னருமான பாலைபாடிய பெருங்கடுங்கோ.
    பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
    வேனில் அத்தத்து ஆங்கண் வான்உலந்து
    அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்,
    பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
    இலைஇல மலர்ந்த இலவமொடு
    நிலையுயர் பிறங்கல் மலைஇறந்தோரே”
  • அகநானூறு: 185: 8 – 13
    மலை பசுமையே இல்லாது காய்ந்து கல்லாய் இருக்கிறது. அதன் உச்சியிலுள்ள வெம்மையான அந்த வழியிலே, வானம் வறண்டு மழை அற்றுப்போனதால் அருவிகள் வற்றிப்போன, இலவமரங்கள் இலையே இல்லாது பூக்களாகவே மலர்ந்திருப்பது, கார்த்திகைப் பெருவிழா விளக்குகள் இருப்பது போலத் தெரியும் அந்த உயர்ந்த மலைத்தொடர்களைக் கடந்து சென்றார். இப்படி காதலனைப் பிரிந்த காதலியின் வேதனையைச் சொல்லும் பொழுதும் கார்த்திகை விளக்கீட்டை மலை உச்சியில் பெருவிழாவாகக் கொண்டாடினர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பாலைபாடிய பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார். அக்காலத்தில் ‘பெருவிழா’ என்றாலே கார்த்திகைத் தீபவிழாதான் என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.
    அகநானூறு பாடல் 141 இல் புலவர் நக்கீரர் கார்த்திகை நாள் சிறப்பு குறித்துக் கூறுகிறார்.
    பொருள்தேட வெளியூர் சென்ற கணவன் ஊர் மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடும் கார்த்திகை விளக்கு பெருவிழாவின்போது வந்துவிடுவான் எனத் தலைவி மகிழ்ந்து தோழியிடத்துக் கூறுகிறாள்.
    மணமனையில்- திருமண வீட்டில்- புது மணமக்கள் உண்பதற்காக இனிப்புப்பொருள் செய்யும் வேலையில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்கிறார்.
    அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள்
    மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி
    பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
    விழவுடன் அயர வருகதில்! அம்ம,
    புதுமண மகடூஉ அயினிய கடிநகர்ப்
    பல்கோட்டு அடுப்பில் பால்உலை இறீஇ
    கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர்
    பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து
    பாசவல் இடிக்கும்.
    என்னும் பாடல்வரிகளில் இதை வெளிப்படுத்துகிறார்.
    கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. எனவேதான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர். தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அவர், திருமயிலைத் திருப்பதிகத்தில்,
    “வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மருகில்
    துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள்
    தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும்
    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
    என்று குறிப்பிடுகிறார்.
    (வளை-வளையல்; மறுகு-தெரு;வண்மை-தெருவினர் கொடை வளம்; துளக்கு-அசைவு; தளர்வு- வருத்தம்)
    “பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இள நகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?” என்கிறார்.
    ”குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே தீபாவளியாயிற்று. வடக்கே வேறு வகை மாத முறையைப் பின்பற்றியதால் வடக்கே நடைமுறையில் உள்ள கார்த்திகை மாதத்தில் – நமது ஐப்பசியில் – இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.”
    மதுரையை ஆண்ட நாயக்கர் காலத்தில் தீபாவளி இங்கே காலூன்றப்பட்டது. மராட்டியர் காலத்தில் முத்திரை பதித்து அமர்ந்து விட்டது. தலை கார்த்திகை மறந்துபோய் தலைதீபாவளி அனைவர் இல்லங்களிலும் புகுந்து விட்டது.
    தமிழ்நாட்டில் தீபாவளி மட்டும் புகவில்லை. அதைப்பற்றிய பல்வேறு பகுத்தறிவிற்குப் பொருந்தாத கதைகளும் மக்கள் உள்ளங்களிலும் குடிபுகுந்து விட்டன. அறிவிற் சிறந்த தமிழர்கள் இறைநம்பிக்கையை ஏற்கும் பொழுது மூடநம்பிக்கைகளையும் ஏற்கின்றனர்.

  • தமிழ்நாட்டில் இப்பொழுதும் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அதன் சிறப்பு மங்கி, அதனினும் சிறப்பாக ஆரியமயமாகிய தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஒளி விழா ஏன் இரண்டு வேண்டும். வழி்வழியாகக் கார்த்திகையில் கொண்டாடப்படும் ஒளி விழா மீண்டும் ஐப்பசியில் தீபாவளியாக ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்திப்பதில்லை.
    பூக்களின் வரிசையைப் பார்த்தாலே கார்த்திகை விளக்கு வரிசைதான் புலவர்களுக்கு நினைவிற்கு வருகிறது. தத்தம் பாடல்கள் மூலம் புலவர்கள் கார்த்திகை விளக்கீட்டின் சிறப்பை வெளிப்படுத்தி யுள்ளனர். வடநாட்டில் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்பட்ட விளக்கு வரிசை விழா, அதே காலக்கட்டத்தில் ஐப்பசி நிகழும் தமிழ்நாட்டில் மீண்டும் கொண்டாடப்பட்டு, தீபாவளியாக மாறிவிட்டது. மூட நம்பிக்கைகளைப் புகுத்த எண்ணிய ஆரிய தாசர்கள் ஆரியக் கதைகளுடன் தீபாவளியைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டனர்; ஈடுபட்டு வருகின்றனர். நாம்,

  • நம் கார்த்திகை ஒளிவிழா உரிமை விழா
    தீபாவளி விழா அடிமை விழா
    என்பதை உணர்வோம்!