(நாலடி நல்கும் நன்னெறி 13:  நிலைபுகழ் பெற நல்வினைகள் புரிவோம்! – தொடர்ச்சி)

நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

(நாலடியார் பாடல் எண் 124)

பதவுரை: அழல் – நெருப்பு, தீக்கொழுந்து, வெப்பம்; நெய்போல்வ தூஉம் – நெய்போன்ற தன்மை கொண்ட பொருளும்; உயர்வு சிறப்பும்மை நெய்யின் தன்மையையும், புண்களை யாற்றும் இயல்பையும் காட்டுகிறது. போல்வது ஒப்பில் போலி ; எரிப்ப சுட்டு- உடம்பு வேகும்படி சுட்டு;  எவ்வ நோய்-துன்பந் தரும் நோய்; பரப்பக் கொடுவினைய ராகுவர்-மிகக் கொடிய தீ வினைகளைச் செய்பவராவர்; கோடாரும்- நடுவு நிலைமையுடையவரும்;  கோடி தவறி

  கடுவினைய ராகியார்ச் சார்ந்து – பாவச்செயல்களை யுடையவரைச் சேர்வராயின்; கோடிக் கடுவினைய- மிகப் பலவாகிய பாவச்செயல்களை யுடையவர் என்றும் பொருள் கொள்வர்.

பொருள்:

நெய் சுவையானது; ஊட்டம் தருவது; வலிமை தருவது. ஆனால் நெருப்பிலிட்டுக் காய்ச்சும் பொழுது நெய் தெறித்து உடலில் பட்டால் என்னாகும்? பெருந்துன்பம் உண்டாக்கும். அல்லது துன்பம் தரும் நோயை உண்டாக்கும். ஊட்டம் தரும் நெய்போன்ற எப்பொருளும் தீயின்பாற்பட்டால் துன்பமே விளைவிக்கும். அதுபோல் நெறிதவறாத நல்லோரும் தீவினையோர் பக்கம் சேர்ந்தால் தாமும் தீயராய் மாறிப் பிறருக்குத் துன்பம் விளைவிப்பர். ஆதலின் தீவினை புரிய – தீ வினையோர் உடன் சேர – அஞ்ச வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.   (௨௱௨ – 202) என்னும் குறள் மூலம்

தீயவை அவற்றைச் செய்யபவருக்கும் அதனால் பா்திப்புறும் பிறருக்கும் தீமைகளையே விளைவித்தலால் தீயவற்றைத் தீயினும் கொடியனவாக அஞ்சி விலக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

.நாலடியாருக்கு முன்னதாகவே திருவள்ளுவர் திருக்குறளில் தீ வினை யச்சம் குறித்துத் தனியதிகாரமமே வைத்துள்ளார். தீ நட்பு, கூடா நட்பு,கூடா ஒழுக்கம், பிறன் மனை விழையாமை முதலிய பலவும் தீ வினை அச்சத்தை வலியுறுத்துவனவே.

நல்லவர்களும் தீயோரின் பக்கம் சேர்ந்தால் தீவினைக்குத் துணைபுரிவோர் ஆவர். தீய செயல்கள் குறித்து அஞ்சி விலக எண்ணுபவர்கள் தீயோர் பக்கமும் சேரக்கூடாது.

எனவேதான் இடைக்கால ஒளவையாரும்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு

இணங்கி இருப்பதுவும் தீது.

என்றார்.

நாம் தீயோர் பக்கம் சேராமல்

தீயன விளைவிக்காமல் இருப்போம்!