பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சம்! – இலக்குவனார் திருவள்ளுவன், தாய் மின்னிதழ்

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 27
******
பிறர் நலத்திற்காக வாழ்க!
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நற்றிணை 186 : 8-9
பிறருக்காக வாழும் பேரருள் நெஞ்சத்துடன் பொருளாசையைப் போக்கிய தலைவன்.
முழுப் பாடல்:
கல்லூற்று ஈண்டல கயன்அற வாங்கி
இரும்பிணர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு
பெருங்கை யானை பிடியெதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம்கூர் கடத்திடை
வேனில்ஓதி நிறம்பெயர் முதுபோத்துப் 5
பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்
நெடுநிலை யாஅம் ஏறும் தொழில்
பிறர்க்கென முயலும் பேரருள் செஞ்சமொடு
காமர் பொருட்பிணிப் போகிய
நாம்வெங் காதலர் சென்ற ஆறே! 10
நற்றிணை: 186
இயற்றிய புலவர் : பெயர் தெரியவில்லை
திணை : பாலை
துறை : பிரிவிடை மெலிந்த தோழிக்குத் தலைவி சொல்லியது
சொற்பொருள் :
கல் ஊற்று=கல்லின் இடையே உள்ள ஊற்று; ஈண்டல நீர்=அவ்வூற்றில் சேர்ந்து நிரம்பும் நீர்; கயன்=ஊற்றுநிலை; அற வாங்கி=அவ்விடத்து நீர் முற்றிலும் இல்லாது போகுமாறு; இரும்பிணர்த் தடக்கை=பெரிய மடிப்புப் பிடிப்புகள் கொண்ட வளைந்த கை;
நீட்டி=அந்நீண்ட துதிக்கையை நீட்டி; நொண்டு=மொண்டு; பெருங்கை யானை=பெரிய கையையுடைய யானை; பிடி எதிர் ஓடும் – தன் பெண்யானையினெதிரே ஓடும்; கானம்=காடு; வெம்பிய=வெப்பமடைந்த; வறம்=வறட்சி; கூர்=மிகுந்த; கடத்து இடை=காட்டிடையே;
வேனில்=வேனிற்காலம்; ஓதி=ஓந்தி; நிறம் பெயர்= மாறி மாறித் தன்னிறத்தை மாற்றிக் கொள்கிற; முது போத்து=முதிய போத்து; பாண்=பாணர்; யாழ் கடைய வாங்கி=யாழ் வாசிப்ப; பாங்கர்=பக்கத்தில்; நெடுநிலை=உயர்ந்து நிற்கும்; யாஅம்=யாமரத்தின் மீது;
ஏறும் தொழில்=ஏறுந்தொழிலையுடைய; பேர் அருள் நெஞ்சமொடு=பெரிய அருள் மிக்க நெஞ்சுடனே; காமர்=அழகிய; பொருட்பிணி போகிய=பொருளாசையைப் போக்கிய; நாம்வெங் காதலர்=நாம் விரும்பும் காதலன்; சென்ற ஆறே=சென்ற வழி.
பிணர் என்றால் சருச்சரை என்றே குறிப்பிடுகின்றனர். இது சரிதான் என்றாலும் இக்காலத்தில் இச்சொல் புரியா நிலையில் உள்ளதால், சொர சொரப்பான எனக் குறித்துள்ளேன்.
நிறம் மாற்றிக் கொள்ளும் ஓந்தி என்பதால் பச்சோந்தி எனப் புரிந்து கொள்ளலாம்.
எளிய சுனையில் நீர் எடுக்காமல் கல்லூற்றிலிருந்து நீர் எடுப்பதால், அந்த அளவிற்கு சுனையில் நீர் இல்லாமல் வறட்சி மிகுந்த காலம் எனப் புரிந்து கொள்ளலாம்.
யா மரம் வறண்ட பாலை நிலங்களில் வளரும். எனவே, வறட்சியான பாலை நிலத்தில் தலைவன் செல்வதைப் புரிந்து கொள்ளலாம்.
பிடி என்றால் பெண் யானை. எனவே இதில் குறிப்பிடும் யானை ஆண் யானை. களிறு என்றால் ஆண்யானை.
ஆனால், ஆண் பன்றியையும் களிறு என்றே குறிப்பிடுகின்றனர். ஆதலின் வேறுபடுத்த களிற்று யானை என விளக்குகின்றனர்.
பொருளாசையும் நோய் போன்றதே. எனவேதான் பொருட் பிணி எனப் புலவர் குறித்துள்ளார்.
பாடற் பொருள்:
கல்லின் இடைய உள்ள ஊற்றில் நீர் சுரக்கிறது. ஊற்றில் நீர் நிரம்பாத வகையில் யானை தன் சொரசொரப்பான துதிக்கையை நீட்டி, நீரை முகந்து கொண்டு பெண் யானைக்குக் கொடுக்க ஓடும். அது வேனிற்காலம்.
ஆண் பச்சோந்தி தன் முதுகை யாழ்போல் வளைத்துக் கொண்டு உயர்ந்த யா மரத்தில் ஏறுகிறது.
அந்த வழியில்தான் காதலராகிய தலைவன் நீர் வறட்சியுடைய அத்தகைய காட்டில் தன் வாணாளும் ஈட்டும் பொருளும் பிற எல்லாமும் பிறருக்காகத்தான் என்ற முடிவுடன் முயற்சி மேற்கொண்டு சென்று கொண்டுள்ளார்.
புறநானூற்றுப் பாடல் ஒன்றில், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி,
“உண்டால் அம்ம இவ்வுலகம்” எனத் தொடங்கும் பாடலில் அதற்கான காரணத்தைத்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே
என முடிக்கிறார்.
“தமக்காக வாழாமல், பிறருக்கென முயலும் பேருள்ளம் கொண்டவர்கள் உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் நிலைபெற்று இயங்குகிறது” என்கிறார் அவர்.
“ஈதல் இசைபடவாழ்தல்” (திருக்குறள் ௨௱௩௰௧ – 231) எனத் திருவள்ளுவர் கூறுவதே பிறருக்குக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்காகவே.
தன்னலமின்றிப் பிறர் நலம் பேணி வாழ வேண்டுமெனெவே சான்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழர் நெறியும் நாம் உழைக்க வேண்டியது நமக்காக அல்ல. பிறருக்காக என்பதே. பல சங்கப் பாடல்களும் இதனை வலியுறுத்துகின்றன. அதையேதான் இப்பாடல் மூலம் நாம் உணரலாம்.
எனவே, நாம்,
பிறர் நலத்திற்காக வாழ்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய் மின்னிதழ் – 09.12.2025







Leave a Reply