வெருளி நோய்கள் 1191-1195 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1186-1190 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1191-1195
- தவறான புரிதல் வெருளி – Ambiguphobia
தவறான புரிதல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறான புரிதல் வெருளி.
இத்தகையோர் விதிமுறைகள், வரையறைகள் முதலியவற்றில் தவறான புரிதல் ஏற்பட்டால் கெடுவிளைவு ஏற்படும் என்ற பேரச்சத்திற்கும் ஆளாகின்றனர்.
00
- தவறான வரிசை வெருளி – Agmenophobia
தவறான வரிசையில் நின்றுவிட்டோமோ எனப் பேரச்சம் கொள்வது தவறான வரிசை வெருளி.
வரிசையில் நின்றபின், தான் நிற்கும் வரிசை மெதுவாக நகர்வதாகவும் தவறான வரிசையில் நின்றுவிட்டோம், மாடம் அருகில் செல்வதற்கு முன்னர் பயணச்சீட்டு, திரைச்சீட்டு முதலியவை விற்று விடும், என்பனபோன்று அச்சம் கொள்வர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்கான பல வரிசைகள் இருக்கும் பொழுது, வரிசை தவறானதாக இருந்து மீண்டும் வேறு வரிசையில் நின்று நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் அஞ்சுவர். இத்தகையோருக்குச் சரியான வரிசையில் நிற்கும் பொழுதும் இத்தகைய எண்ணம் வந்து மனப்பதற்றம் வரும்.
agmeno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் படைவரிசை. இங்கு பொதுவான வரிசையைக் குறிக்கிறது.
00
- தவறான விடை வெருளி – Errophobia / Erratophobia
தவறான விடைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தவறான விடை வெருளி.
Erratophobia(தவறிழைப்பு வெருளி)யும் இதுவும் ஒன்றே எனப் பலர் விளக்கங்கள் உள்ளன.
எனினும் தவறான விடை வெருளி(Errophobia) என்பதை அதன் பகுதியாகவும் அதே நேரம் தனியாகவும் குறிப்பிடலாம். தவறான விடையைத் தெரிவு செய்துவிட்டு அல்லது செய்துவிட்டதாக எண்ணி அளவு கடந்த பேரச்சம் கொள்வர் இத்தகையோர். தவறான விடை என்னும் பொழுது தேர்வுத்தாளில் வினாவிற்கான விடை என்று மட்டுமல்ல. சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கும் தவறான ஒன்றைத் தெரிவு செய்வதையும் குறிப்பிடலாம்.
Erro என்றால் இசுபானிய மொழியில் தவறு என்றும் போர்த்துக்கீ சிய மொழியில் பிழை என்று் பொருள்கள்.
00
- தவறிழைப்பு வெருளி – Erratophobia
தவறிழைப்பு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தவறிழைப்பு வெருளி.
ஒரு செயலில் இறங்கும் பொழுது தவறு நேரிடும் என்று காரணமற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்ளல். இதற்கு முன்பு நேர்ந்த தவற்றினை நினைத்து இவ்வாறு கவலையும் அச்சமும் கொள்வர். அறிவியலறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பல தவறுகள் மூலம்தான் முன்னேற்றம் கண்டு வெற்றி அடைந்தனர். எனவே, தன்னம்பிக்கையுடன் இருந்தால் தவறிழைப்பு வெருளி வராது.
காண்க: தவறான விடை வெருளி(Errophobia).
Errato என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தவறு.
00
- தவறுகள் வெருளி – Lathophobia / Falsuphobia
தவறுகள்பற்றிய அளவுகடந்த பேரச்சம் தவறுகள் வெருளி.
அறிந்தும் அறியாமலும் நாம் செய்யும் தவறுகளால் பேரிடர், தோல்வி, இழப்பு வருவது குறித்துத் தேவையற்று மிகையான பேரச்சம் கொள்வர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
வெருளி நோய்கள்






Leave a Reply