(வெருளி நோய்கள் 479-483 தொடர்ச்சி)

உமிழ்நீர் அல்லது எச்சில் துப்புவது குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் எச்சில் வெருளி.
தங்கள் மீது பிறர் எச்சில் படுவதால் மட்டுமல்ல, தங்கள் எச்சில் வடிந்து தங்கள்மேல் பட்டாலும் அளவுகடந்த பேரச்சம் கொள்வர்.
வாயிலிருக்கும் உமிழ்நீர் தானாக வெளியேறும் பொழுது எச்சில் வடிதலாகவும் நாமாக வெளியேற்றும் பொழுது எச்சில் துப்புவதாகவும் அமைந்து விடுகிறது.
பயணங்களில் அடுத்தவர் மீது விழும் வகையில் எச்சில் வடியத் தூங்குபவர் உள்ளனர். எனவே, அடுத்து இருப்பவர் பேரச்சத்திற்கு ஆளாகிறார். எனினும் இது துயில்எச்சில் வெருளி(aquadormophobia) எனத் தனியாகக் குறிக்கப் பெறுகிறது.

காற்றின்மூலம் தொற்றக்கூடிய நோய்களையுடையவர்களின் எச்சில் சூழ்நிலைக்குக் கேடுதரும். எனவே, இது குறித்த அச்சம் வருகிறது. பொதுவிடங்களில் எச்சில் துப்புவது பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் விளையாட்டுத்திடலில் எச்சில் துப்பும் பழக்கத்தைக் கொண்டுள்ளமைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருந்தும் எச்சில் துப்புவதைப் பிறரை இழிவுபடுத்துவதற்காக அல்லது பிறருக்கு வழங்கும் தண்டனையாகச் சிலர் கொண்டுள்ளனர். இதனாலும் எச்சில் துப்பப்படுபவர்கள் பெரும் வெருளிக்கு ஆளாகின்றனர்.
00

எடை இழப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எடை இழப்பு வெருளி.
ஒல்லி வெருளி என்று சொல்லப்படுவதும் இதுதான்.
00

எடை கூடுதல்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் எடை வெருளி.
தங்களின் எடை கூடுதலை ஏற்றுக் கொள்ளாமல் அதே நேரம் உடல் எடை குறித்த அளவுகடந்த பேரச்சத்தில் இவர்கள் செயல்படுவர்.
உணவு மறுப்பும்(anorexia) பேரூண் வேட்கையும்(bulimia-மிகை உணவு நாட்டம்) இதற்குக் காரணமாகலாம். எடை கூடுவதால் அழகு குறையும் எனக் கருதி உணவு மறுத்து உடலைப் பாழ்படுத்துவோர் உள்ளனர். இதனால் உணவு வெருளிக்கும் ஆளாகின்றனர்.
மிகுதியான எடையால் திருமணம் செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், பொதுவிடங்களில் கேலிக்கு ஆளாக நேரிடும், பயணம் மேற்கொள்வது, தங்குவது போன்றவற்றில் இன்னல் ஏற்படும் என்ற பெருங்கவலையே மக்களைச் சந்திப்பதற்குப் பேரச்சத்தை உருவாக்குகிறது.
obeso என்னும் கிரேக்கச்சொல்லுக்குக் கொழுப்பு/பருமன் என்று பொருள். கொழுப்பு மிகுதியாகி எடை கூடுவதை இது குறிக்கிறது.
சிலர் Lancophobia என்பதனை Phobia of Lance என்று ஈட்டி வெருளி என்கின்றனர். ஈட்டி வெருளி(Dartophobia) தனியாக உள்ளதால் இதனை எடை வெருளியாக மட்டும் வரையறுப்போம்.

காண்க: எடை அளவி வெருளி(lanxophobia)
00

எடைஇயந்திரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் எடை அளவி வெருளி.
எடை அளவி நன்னிலையில் இல்லை என அது காட்டும் எடை அளவினை மறுப்பர்.
கொள்வதூஉம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கொடாது

நடுநிலைமையுடன் பழந்தமிழ் வணிகர்கள் நடந்து கொண்டதைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில்(அடிகள் 210-211) கூறுகிறார். ஆனால், இப்பொழுது எடை அளவியில் தில்லுமுல்லு செய்து ஏமாற்றுவோர் பெருகிவிட்டனர். குறைவான எடையைச் சரியாகக் காட்டுவதற்கென்றே பல்வேறு தந்திரங்களைக் கையாளுகின்றனர். எனவே எல்லாவகை எடை அளவி குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
தங்களின் உடல் எடைையைப் பார்க்கும் பொழுதும் எடை சரியாகக் காட்டினாலும் எடைஅளவிமீதுதான் ஐயப்படுவர்.
lanx என்னும் கிரேக்கச் சொல்லுக்கு மதிப்பிடுநர்/மதிப்பிடுதல் எனப்பொருள். எடையை மதிப்பிடும் அளவியை இங்கே குறிக்கிறது.
காண்க: எடை வெருளி(Obesophobia/Pocrescophobia/Lancophobia)

00

எட்டாம் நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் எட்டாம் நிலை வெருளி.
எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டாம் நிலை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00