103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 101-102 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 103
103 ? தொல்காப்பியர் சனாதனத்தை ஏற்றதாகத்தானே பொருள் என்கிறார்களே!
? சனாதன நூலான நாட்டிய சாத்திரத்தைப் பார்த்துத்தான் தொல்காப்பியர் எழுதினார். அப்படி என்றால் அவரே சனாதனத்தை ஏற்றுக் கொண்டதாகத்தானே பொருள் என்கிறார்களே!
- மிகத் தவறான கருத்து.
“தொல்காப்பியத்தால் பெண்கள் மேம்பாடு அடைந்தார்கள். நாட்டிய சாத்திரத்தால் தேவதாசி முறையும், பெண்ணடிமைத்தனமும், பரத்தமையும் (விபச்சாரமும்) வளர்ந்தன.” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “தொல்காப்பியம் தமிழ் கற்பவர்களுக்கு எழுதப் பட்டது. நாட்டிய சாத்திரம் இந்தியாவில் உள்ள மக்கள் உல்லாசமாக இருக்க தெய்வங்கள் அளித்த அருட்கொடை.” என்கிறார் ஒருவர். அப்படியானால் நாட்டிய சாத்திரம் தேவதாசி முறையைப் பரப்பியது என்பது உண்மைதானே.
நாட்டிய சாத்திரத்தில் அகம், புறம், முல்லை, நெய்தல், மருதம், பாலைத் திணைகள் குறித்த செய்திகள் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையில்தான் தொல்காப்பியம் உருவானதாகவும் நாகசாமி என்பார் கூறுவதும் சரியல்ல. நாட்டிய சாத்திரத்தில காணப்படும் அகம், புறம் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் இருந்தே பெறப்பட்டன.
நாட்டிய சாத்திரம் பரத முனிவரால் எழுதப்பட்டது என்றாலும் நான்கு பரதர்கள் உள்ளனர். அவர்களில் எழுதியது யார் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கேட்கின்றனர். நாட்டிய சாத்திரம் பலரால் பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பெற்றது என வேறு சில ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
காலத்தால் பிந்தைய நாட்டிய சாத்திரத்தைத் தொல்காப்பியத்திற்கு முந்தைய நூலாகக் காட்டும் கயமை உரைகளுக்கு அறிஞர்கள் பலரும் தக்க விடைமொழி அளித்துள்ளனர்.
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “மெய்ப்பாட்டாராய்ச்சி வேறு எம்மொழிகளிலும் இல்லை! வடமொழியில் நடனம் பற்றிய மெய்ப்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவையும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவேயாம்.” எனத் தம்முடைய தொல்காப்பிய ஆராய்ச்சி நூலில் சமற்கிருத நூல்களில் உள்ள நடனச் செய்திகள் யாவும் தமிழ் நூல்களைப் பின்பற்றியனவே என்கிறார். எனவே, நாட்டிய சாத்திரமும் தமிழ் நூல்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது எனலாம்.
ஆய்வுலக விடிவெள்ளி கலைஞர் செம்மொழி விருதாளர் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்களும் தம்முடைய ‘வடமொழி ஒரு செம்மொழியா’ என்னும் நூலில் தம் ஆய்வுரை மூலம் தொல்காப்பியமே நாட்டிய சாத்திரத்தின் மூல நூல் என நிறுவியுள்ளார்.
தொல்காப்பியத்தின் மூலம் நாட்டிய சாத்திரம் அன்று என்பதற்கு அது காலத்தால் பிந்தியது என்பது மட்டுமல்லாமல் வேறு காரணங்களும் உண்டு என அவற்றைத் தொகுத்துத் தருகிறார்.
நாட்டிய சாத்திரத்தின் முதன்மையான முதலில் எழுதப்பெற்ற 6,7 போன்ற அத்தியாயங்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாதென்றும் மற்ற இடைச்செருகல்களெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டாம் நூற்றாண்டுவரை சேர்க்கப்பட்டன வென்றும் கீத்து(Keith) போன்ற மேலை விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நாட்டிய சாத்திரத்தின் தொடக்க அத்தியாயங்களின் முதல் தோற்றமே தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின் நிகழ்ந்த தென்பது தேற்றம். மெய்ப்பாட்டியலின் சிறப்பையும் நாட்டிய சாத்திரத்தின் கட்டுப்பாடற்ற அமைப்பையும் தெளிவற்ற விளக்கத்தையும் ஒப்பிட்டுத் தொல்காப்பியமே மூல முதல் நூல் என விளக்கியுள்ளார்.
சமற்கிருதக் கல்வியியலைப்பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர் கேரளபுரக் கிருட்டிண மூர்த்தி. இவர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் மெய்ப்பாட்டியல் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பரத முனிவர் இரசக்கோட்பாட்டை அமைக்க முயன்றுள்ளமையையும் பின் வந்தவர்கள் தத்தம் விருப்பு வெறுப்பிற்கேற்பப் பல கருத்துகளைப் பொறுப்பில்லாமல் சேர்த்து நாட்டிய சாத்திரத்தை விரிவு படுத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார். எனவே, கடன் வாங்கிய பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்தைத் தொல்காப்பியத்தின் மூலமாகக் காட்டும் வரலாற்றுப் பிழையை இனியும் செய்யக் கூடாது.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.143-145
Leave a Reply