(சனாதனம் – பொய்யும் மெய்யும் 108-109 தொடர்ச்சி)

  1. ஒரே ஒரு மனைவியுடன் வாழ்ந்ததாக ஒற்றை மனைவியன் (ஏக பத்தினி விரதன்) என இராமனைப் போற்றுவதன் காரணம் என்ன? கிருட்டிணன் பல பெண்களுடனும் தகா முறை உறவு முறையிலும் உறவு கொண்டவன். அவனைப் பார்க்க இராமன் பாராட்டுக்குரியவன் எனப் போற்றலாம். ஆனால், இராமனுக்கு நான்கு மனைவியர்;  அவர்கள் 1. சீதை, 2. பிரபாவதி, 3. இரதினிபா, 4. சிரீதாமா என்பவர்கள். எனவே இராமன் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழ்ந்ததாகக் கூறுவது பொய்யன்றி வேறில்லை.
  2. இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப் பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
  3. கைகேயி நாட்டைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டுக் காட்டிற்குச் செல்லுமாறு கூறும் பொழுது இராமன் அவளிடம் பரதனிடம் நாட்டை மட்டுமல்ல, சொன்னால் மனைவி சீதையையும் கொடுப்பேன் என்கிறான். ஒழுக்கமுள்ள கணவன் கூறும் கூற்றல்ல இவை.

பிறன் மனைவியை விரும்புவதையே அறமற்ற செயலாகக் கருதுபவர்கள் தமிழர்கள். மன்னர் அரசியிடமிருந்து விலகி வேறு பெண்ணை நாடிச் சென்ற பொழுது புலவர்கள் மன்னரையே கண்டித்துத் திருத்தியுள்ளார்கள். கணவன் இல்லாத வீட்டில் பேச்சுக் குரல் கேட்பதாக எண்ணிக் கதவைத் தட்டிய அரசன், பின்னர் உடனிருப்பது கணவன்தான் என்பதை உணர்ந்து அவன் மனைவி மீது ஐயப்படக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டுக் கதவுகளையும் தட்டிச்சென்று பின்னர்த் தன் கையையே வெட்டிக்கொண்ட பொற்கைப்பாண்டியன் வாழ்ந்த நாடு இது. எனவே, உண்மையான இராமன் வரலாறு இம்மக்களிடையே எடுபடாது என்பதால் தமிழில் அவனைக் கற்புக்கரசனாகக் காட்டியுள்ளார் கம்பர்.

  • (தொடரும்)