(சனாதனம் – பொய்யும் மெய்யும் 111 தொடர்ச்சி)


  1.  இரிக்கு, யசுர், சாம அதர்வண வேதங்கள் என நான்கு வேதங்கள் உள்ளன. ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளை உடையது. அவை:- சம்ஃகிதை, பிரமாணம், ஆரண்யகம், உபநிடதம் ஆகும்.
     இரிக்கு வேதம் என்று குறிப்பிட்டாலும் இருக்கு வேதம் என்பதே பழைய வழக்கு. இரிக்குவேதம் ஒருவரால் எழுதப்பெற்றது அல்ல. வழி வழியே பலரால் சொல்லப்பட்டுப் பின்னரே தொகுக்கப்பட்டது என்கிறார்கள். 320 ஆண் துறவியரும் 27 பெண் துறவியரும் வழங்கப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இரிக்கு வேதம் என்கின்றனர். இருக்கு வேதத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மூன்று வேதங்களும் இந்து தரும நூல்களும் இயற்றப்பட்டுள்ளன. இருக்கு வேதம் எட்டு அட்டகங்கள், 64 அத்தியாயங்கள், 85 அனுவாகங்கள், 2024 வருக்கங்கள், 10647 மந்திரங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. வேதம் என்றாலே செய்யுள் என்று தான் பொருள். ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு இரிசியின் பெயரை கொண்டது. இருக்குவேதத்தில் 11 உருத்திரர்கள், 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 2 அசுவின்கள் என 33 தெய்வங்களைப் பற்றிய போற்றிப் பாடல்கள் உள்ளன. இவர்களையே 33 பிரம்மாண்டமான தெய்வங்கள் என்கின்றனர்.
    ஆரியத்தின் ஆணிவேரே வருணாசிரமம்தான். வருணாசிரமத்திற்கு வித்திட்டது இரிக்கு வேதம். இது தொடர்பான சில இரிக்கு வேதச் செய்யுள்களைப்பார்ப்போம்.
    இரிக்கு வேதம் தமிழர்களையும் தமிழ்க்குடும்ப இனத்தினரையும் மொத்தம் 85 இடங்களில் தசுயூக்கள் எனக் குறிக்கின்றது.
    நம்மைச் சுற்றி 4 பக்கங்களிலும் தசுயூக்கள் இருக்கிறார்கள். அவர்கள் வேள்விகள் செய்வதில்லை. ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் பழக்க வழக்கங்களே வேறாய் இருக்கின்றன. ஓ! இந்திரனே! அவர்களைக் கொல்லுஎன்பது ஆரியர்களின் வழிபாடாகும். இதனை இரிக்கு வேதம் 10ஆம் அதிகாரம் செய்யுள்22-8 கூறுகிறது. “இந்தியாவில் இருந்த ஆரியர்களிடம் மனிதர்களைக் கொன்று வேள்வி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம் ” என 1909 ஆண்டு வெளிவந்த இம்பீரியல் இந்தியன் அரசிதழில் பக்கம் 405இல் குறிப்பிட்டிருக்கிறது. வேள்விகளுக்கும் மனித உயிர்களையும் பிற உயிர்களையும் வேள்வியில் பலியிடுவதையும் தமிழர்கள் எதிர்த்தனர். எனவே, தமிழர்களை இரிக்கு வேதம் எதிர்க்கிறது. எனவே, உயிர் நேயத்திற்கு மாறான உயிர்ப்பலிகளை ஊக்குவிக்கும் சனாதன இரிக்கு வேதத்தை எங்ஙனம் ஏற்க முடியும்?
    இரிக்கு வேதம் என்பது, தமிழர் நெறிக்கு, அறநெறிக்கு மாறானது எனப் பலரும் கூறியுள்ளனர். ஆரியரல்லாதவர்களை இரிக்கு வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தசுயூக்கள்-அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப்பற்றி இரிக்கு வேதத்தில் பல இடங்களில் காணலாம். “இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்கு காரணமாகும்” என முனைவர் இராதா குமுத்து முக்கர்சீ ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தில் 69ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அறநெறிக்கு மாறான சனாதன இரிக்கு வேதத்தை நாம் ஏற்க இயலும்?
    மேலும் இரிக்கு வேதமே வருணாசிரமத்திற்குத் தோற்றமாக இருந்துள்ளது. பின் வரும் இரிக்கு வேதச்செய்யுள்களைப் பாருங்கள்.
    “புருடன் என்பவன் ஆயிரம் தலைகளும், ஆயிரம் கண்களும், ஆயிரங் கால்களும் உள்ளவன் என்கின்றனர். ஆயிரம்தலைகள் இருந்தால் ஈராயிரம் கண்கள் இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறில்லை. ஈராயிரம் கால்களும் இல்லை.
    “தேவர்கள், புருடனைப் பலிப் பொருளாக்கி வேள்வியை நடத்தியபோது, இளவேனிற்காலம் அதற்கு நெய்யாயிற்று. கோடை அதற்கு விறகாயிற்று. மழைக்காலம்காலம் அதன் அவிப் பொருளாயிற்று.