116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(பகவத்து கீதை தொன்மையான நூலில்லையா? தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 116
- ஆம். ஆரிய நூல் எதுவாயினும் அதன் நோக்கம் சனாதனத்தை நிலை நிறுத்துவதுதான்; வரணாசிரமத்தைக் கட்டிக்காப்பதுதான். முதலில் இதிகாசம் என்பதைத் தமிழில் எவ்வாறு குறிக்கலாம் எனப் பார்ப்போம்.
தமிழில் தொன்மம் என்பது பொருந்தாது. தொன்மக் கதைகள் என்ற பொருளில் இவ்வாறு கூறுகின்றோம். தொன்மக் கதையை இப்பொழுது கூறினால் தொன்மம் என்போமா? வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நூலை நாம் தொன்மம் என்போமா? தொன்மம் என்று சொல்லப்படுவன எழுதப்படும்பொழுது தொன்மைச் செய்திகளை எழுதவில்லையே! மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். ஆனால், மகாபாரதத்தில் வியாசரும் ஒரு கதை மாந்தர்தானே. அப்படியானால் அவர் கால நூல்தானே இது. எனவே, தொன்மம் என்பது பொருந்தாது. காப்பியம், காவியம், பாவியம் என்பனபோன்று இதைக் கதையியம் எனலாம். இங்கே நாம் கதையியமாகிய மகாபாரதம் சிறப்பான கதையியம் இல்லை என்பதைப் பார்ப்போம்.
வியாசர், 226 முதன்மைப் பாத்திரப்படைப்புகளைக் கொண்டு கதைப் பின்னலை உருவாக்கித் திறம்பட எழுதியுள்ளார். ஆனால், இடைச்செருகல் மன்னர்களின் கைவண்ணத்தால் இந்நூல் மேலும் பல செய்திகள் சேர்க்கப்பட்டு மிகப்பெரும் கதையியமாக விளங்குகிறது.
மகாபாரதம் எழுதப்பட்ட பொழுது 8800 பாடல்கள் / சுலோகங்கள் மட்டுமே கொண்டிருந்தது. பின்னர் 24000 பாடல்கள் / சுலோகங்கள் கொண்ட கதையியமாக மாறியது. இதில் மூன்று தொடக்கங்கள் உள்ளன. எனவே மூன்று முறை பல இடைச்செருகல்களால் உருமாறி 1,00,000 பாடல்களாகப் பெருக்கப்பட்டுப் பெருங்கதையியமாக மாறியது.
குரு மரபுவழியைச் சேர்ந்தவர்கள் அற வுணர்வும் நற்பண்புகளும் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். இவர்களைக் கிருட்டிணன் எனப்பெறும் கண்ணனின் தலைமையில் பாண்டுவின் பிள்ளைகள் பல மோசடிகளைச் செய்து அழித்தார்கள் என்பதே மூலக் கதை. இதைத் தலைகீழாக மாற்றிப் பின்வந்த மகாபாரதம் உருவாக்கப்பட்டது என அறிஞர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். இது குறித்து அறிஞர் மக்குடானெல், “பழைய காப்பிய மரபை எவ்வாறு பிராமணச் சாதியின்கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் கதையியமாக மாற்றுவ தென்பதைப் பிராமணர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்” என்று கூறுகிறார்.
பேராசிரியர் ஓல்சுமண்(Prof.Holtzmann) மகாபாரதம் கி.பி.900 ஆண்டுக்குப் பிறகு பிராமணர்களால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது என்றும் அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சி முடிவாகத் தெரிவிக்கிறார். ஆதிசங்கரர் தம் விளக்கவுரையில் வேதங்களையும் வேதாந்தத்தையும் கற்கக்கூடாதென்று தடைசெய்யப்பட்ட சாதியினர் படிப்பதற்காக மகாபாரதம் எழுதப்பட்டது என்கிறார்.
கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு(Dio Chrysostomos) கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம் என்கிறார்.
கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது என்று மகாபாரதம்பற்றி இசுபானிய நூலொன்று குறிக்கிறது. மகாபாரதம் மட்டுமல்லாமல், சமற்கிருத நூல்கள் பலவற்றிலும் கிரேக்க, உரோமானியச் செல்வாக்கு இருப்பதாக அறிஞர்கள் பலர் எழுதியுள்ளனர்.
இவ்வாறு மகாபாரதம்பற்றிய செய்திகளைப் பேரா.ப.ம.நா. ‘வடமொழி ஒரு செம்மொழியா’ என்னும் நூலில் அளித்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக மகாபாரதக் கதை நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அவை அடைந்துள்ள கிரேக்க, உரோமானியத் தாக்கங்களையும் கதைப் பாத்திரங்களின் முறையற்ற செயல்களையும தெரிவிக்கிறார். அறிஞர் ஃபெருனாண்டோ உலுஃபு அலான்சோ(Fernando Wulff Alonso)தமது ‘மகாபாரதமும் கிரேக்கத் தொன்மங்களும்’ (The Mahabharata and Greek Mythology) என்னும் நூலில் நிறைவாகத் தாம் கண்டறிந்த உண்மைகளைக் குறிப்பிடுகிறார். அவை மகாபாரதம் பற்றிய அரிய உண்மைச்செய்திகளாக உள்ளன.
ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அலான்சோவின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மகாபாரதம் வட இந்தியாவிலோ வடமேற்கு இந்தியாவிலோதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. வியாச பாரதம் கூறுவது உண்மையான வரலாற்று நிகழ்ச்சி என்றும் அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாய்மொழிக் காப்பியமாகத் தோன்றிய கதையியமென்றும் (இதிகாசமென்றும்) அது பேரளவு கொண்ட மூல நூலென்றும் சமற்கிருதச் சார்புடையார் சொல்லி வருவன வெல்லாம் பெரும் பொய்கள் என்பதை இந்த ஆழமான தெளிவான மறுக்க முடியாத ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இழிகாமமான (ஆபாசமான) கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றை விட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையையும் பேரா.ப.ம.நா. தெளிவுபடுத்துகிறார்.
இத்தகைய, தழுவலான, பொய்யுரையான, இழிகாமமான, நடுநிலையற்ற காப்பியத்தைத் தரமான இலக்கியமாக ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே சமற்கிருத இலக்கிய வரலாற்றாசிரியரின் முடிவு.
ஆரிய நூல்கள் என்றாலே வருணாசிரமத்தை வலியுறுத்துவதும் பெண்ணடிமையை உணர்த்துவதும்தான்.
புனித நூலென்று திரிக்கப்படுகிற இத் தொகுப்பில் பசுக்கள் பிராமணர்கள் ஆகியோரின் பெருமை எடுத்துச் சொல்லப்படுகிறது.
ஆரிய நூல்களுக்கு இல்லாச் சிறப்புகளை ஏற்றிச் சொல்லப்பட்டாலும் அவையாவும் மனிதநேயமற்ற சனாதனத்தைக் கட்டிக் காப்பனவே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 166-169
Leave a Reply