(116. வருணாசிரமத்தை இதிகாசங்கள் கட்டிக் காக்கின்றனவா? தொடர்ச்சி)

  1. மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மன்னர்களும் செல்வர்களும் உயர் பதவிகளில் உள்ளவர்களும் பிராமணர்களிடம் மண்டியிட்டதாக எழுதி வைத்தனர். இதைப் பார்த்த சிலரும் அவ்வாறு செய்து வருகின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்.

இராச சூய வேள்வியின்பொழுது அரசரின் வேலையாட்கள் பல வகை சுவையுள்ள இனிப்புகளையும் உணவுகளையும் இனிய பானங்களையும் பிராம்மணர்களுக்கு எக்காலமும் அளித்தனர். ஒவ்வொாரு நாளும் பிராமணர்கள் உண்டதற்கு அடையாளமான சங்கு ஊதப்பட்டது. அச்சங்கு அடிக்கடி ஊதப்பட்டதால் மக்கள் வியப்படைந்தனர்.

இராச சூய வேள்வியில் பிராமணர்களுக்குப் பரிமாறியது வேலையாட்கள் அல்லர். இரத்தினமாலைகளைச் சூடித் துலக்கப்பட்ட இரத்தினக் குண்டலங்களை அணிந்து அரசர்கள் ஆயிரக்கணக்கான பிரமாமணர்களுக்குப் பரிமாறினர். பல நாடுகளிலிருந்தும் வந்த பிராமணர்கள் கணக்கற்ற திண்பண்டங்களையும் கனிவகைகளையும் மலர்களையும் தேன்களையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்

அந்த வேள்வியில் பீசுமரும் துரோணரும் துரியோதனன் முதலான கெளரவர்களும் யாதவர்களும் அனைவரும் அடிமைகளாகப் பிராமணர்களுக்கு வேலை செய்தனர்.  தருமர் இந்த வேள்வியில் துணிகளையும் சால்வைகளையும் போர்வைகளையும் பொன் நாணயங்களையும் பொற் பாத்திரங்களையும் நகைகளையும் நிரம்பப் பிராமணர்களுக்குக் கொடுத்தார். அரசர்கள் காணிக்கை யாகத் தந்த மாணிக்கங்கள் முதலானவற்றையும் பிராமணர்களுக்கே கொடுத்தார்.

உயர்நிலை அரசர்கள், சிற்றரசர்கள் என அனைத்து நிலை அரசர்களும் பிராமணர்களுக்கு ஊழியம் செய்வதாகத் தெரிவிப்பதன் மூலம் பிராமணர்கள் யாவருக்கும் மேலானவர்கள் எனப் பாரதம் கூறுகிறது. வருணாசிரமத்தை விதைத்து வேரூன்றச் செய்ய வேண்டும் என்பதுதான் ஆரிய நூல்களின் நோக்கம்.

(அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை: இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதி)

வேதங்கள் வழிச் சனாதனக் கருத்துகள் விதைக்கும் நச்சுக் கருத்துகளில் சில வருமாறு:

பிராமணனைச் சாது என நினைத்து அழிப்பவன் செல்லுமிடங்களில் புவியும்  சோதியும் அவனை வெறுக்கும்.

பிராமணன் இம்சிக்த் தகாதவன். இந்திரன் அவனைத் தீச்சொல்லிலிருந்து காப்பான்.

பிராமணன் இனிமையான உணவை உண்கிறான் என அதன் மீது் மனம் வைக்கும் மதியற்றவன் நூறு முட்களுள்ளதை விழுங்குபவனாவன். அவன்அதைச் சீரணிக்க இயலாது.

பிராமணன் தேவர்களின் இதயத்தோடு அவனை ஏசுபவர்களைத் துவம்சம் செய்கிறான்.

பிராமணர்கள் எதிரியைத் தொலைவிலிருந்தே அழிப்பார்கள்.

அரசர்கள் பிராமணனது பசுவைப் புசித்து பாழானார்கள்.

தேவ பந்துவான பிராமணனை இம்சிப்பவன் முன்னோர்கள் செல்லும் உலகத்துக்குச் செல்வதில்லை.

அக்கினி பிராமணர்களது வழிகாட்டி. சோமன் அவர்களின் உறவினன்.

பிராமணர்களைச் சபிப்பவர்களை அழிப்பவன் இந்திரன்.

பிராமணனை இம்சிக்கும் மக்கள் அடியோடு அழிகிறார்கள்.

பிராமணனது சரம் நாகம் போலும் நஞ்சு தோயும் அம்பைப்போலும் அதிபயங்கரமானது. அதனால், அவர்களைப் பழிப்பவனைத் துவம்சம் செய்கிறான்.

 அவி என்னும் சூரியன் தன் இருவரிசைப் பற்களின் இடையில் வைத்து அங்கிரசனது மகனான பிராமணனை நாசமாக்கும் மக்களை அரைத்துவிடுவான்.

பிராமணன் மீது துப்பும் மக்கள் முடியை உண்டு உதிர நதி நடுவே உட்காருபவர்களாவார்கள்.

பிராமணனுக்கு எதிரான நாடும் அரசும் பாழாகும்.

பிராமணனை அழிக்கும் அரசை 8 பாதங்கள் 4 கண்கள் 4 வாய்கள் 4 மோவாய்கள், 4 காதுகள் 2 காதுகள் உள்ளவள் அலறச் செய்வாள்.

பிராமணனை எந்த அரசில் இம்சை செய்கிறார்களோ  அந்த அரசாங்கம், ஓட்டையுள்ள படகில் நீர் பாய்ந்து அதனை மூழ்கச் செய்வதுபோல் துன்பம் பாய்ந்து அழிந்து விடும்.

பிராமணனை இம்சிப்பவன் இருக்குமிடத்தில் மழை பொழிவதில்லை.

இவ்வாறு பிராமணர்களை உயர்த்தும் வேதங்களை மனித நேயம் கொண்ட பிராமணர்களும் பின்பற்றத் தேவையில்லை யல்லவா?

  • (தொடரும்)