121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லை. அப்படியானால் திமுகவிலேயே இதற்கு ஆதரவு இல்லைதானே!

(சனாதனம் பொய்யும் மெய்யும் 120 தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும் 121
- அப்படியெல்லாம் இல்லை. பிறரும் பேசி வருகின்றனர். சான்றாகத் திருநெல்வேலியில் சட்டமன்றத் தலைவர் அப்பாவு, நிகழ்ச்சி ஒன்றில், தமிழகத்தில் 96 விழுக்காடு இந்துக்களுக்குக் கல்வியை மறுத்ததுதான் சனாதனம் என்று பேசியுள்ளார். எடுத்துக்காட்டுகளையும் கூறியுள்ளார்.
“சனாதனம் என்றால் 4% மக்களுக்குக் கல்வி கற்க அனுமதி உண்டு. மற்றவர்கள் அடிமையாக வாழ வேண்டும். இதுதான் அதன் தத்துவம். 1835-இல் மெக்காலே பிரபு வரவில்லை என்றால், எல்லாரும் கல்வி கற்கலாம் என்ற சட்டம் வரவில்லை என்றால், நாம் கல்வி கற்றிருக்க மாட்டோம். என்று பேசியுள்ளார். மேலும்,
1912-இல் பட்டதாரிகள் 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 4% பேர் 94% பட்டம் பெற்றிருந்தார்கள். மீதி 96% பேர் 6% பட்டம் பெற்றிருந்தார்கள். இதுதான் அன்றைய கல்வி முறை; இதுதான் அன்றைய சமூக நிலை. 125 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தில் இருந்து படிப்பதற்காகச் சென்னை செல்வதாக இருந்தால், அங்கே இருந்த மைசூர் கபே என்ற விடுதியில் உணவருந்த, தங்க அனுமதி கிடையாது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்பவர்களுக்கு விடுதி தேவைப்பட்டது. அந்த 4 விழுக்காட்டைத் தவிர்த்துப் பார்த்தால் மீதமுள்ள 96 விழுக்காட்டினரும் இந்துக்கள்தான். அவர்களுக்குத்தான் கல்வி மறுக்கப்பட்டது; விடுதி மறுக்கப்பட்டது; விடுதியில் சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டது. ” என்று சனாதனக் கொடுமையை விவரித்துள்ளார்.
தமிழ் நாட்டளவிற்கோ தென்னாட்டளவிற்கோ முற்போக்குச் சிந்தனை இல்லா வட நாட்டில் உதயநிதியின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சங்(க) பரிவார் சக்திகள் உதயநிதியின் பேச்சுக்குக் கடும் எதிர்ப்பினைப் பரப்பினர். இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்துசா, “உதயநிதி 80 விழுக்காட்டு இந்துக்களை இனக்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்” என்று மக்களைத் தூண்டி விட்டார். மோடி முதலானோர் இதைத் தேர்தல் பரப்புரைக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
உதயநிதி சனாதனத்தை ஒழிக்கக் கோரினாரே தவிர, சனாதனிகளையல்ல என்பதை அறிந்தும் இவ்வாறு கூறி வருகின்றனர். மகந்த பரமஃகம்ச தாசு என்னும் ஆரியச் சாமியார் உதயநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு உரூ. 10 கோடிப் பரிசு என அறிவித்தார். ஆனால் பாசக ஆதரவு ஊடகங்கள் இந்து மத்தை அழிப்பேன் என்று சொன்னதால் வந்த எதிர்வினை எனக் கூறி இதைக் கண்டிக்கவில்லை.
சனாதனத்தை ஒழிக்கச் சொல்லும் உதயநிதியை உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டுமென முன்னாள் உயர், உச்ச நீதிமன்ற நீதியர்கள், உயர் பதவி வகித்த மேனாள் படைத்துறை அதிகாரிகள் என 262 பேர் எழுத்து மூலமாக முறையிட்டனர். ஆனால் இவர்களில் யாரும் உதயநிதி தலை கொய்யச் சொன்ன சாமியாரைக் கைது செய்யவும் சொல்லவில்லை, கண்டிக்கவுமில்லை.
காங்கிரசு, மார்க்சியக்கட்சி, சமாசுவாதி, பகுசன் சமாசு முதலான எந்த வட இந்தியக் கட்சித் தலைவர்களும் கொலைகாரச் சாமியாருக்கு எதிராகக் குரல் கொடுக்க வில்லை.
.அந்தச் சாமியாரோ உதயநிதி தலைக்கு மட்டும் விலை பேசினார். ஆனால் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கசேந்திர சிங்கு செகாவத்து, சனாதன தரும எதிர்ப்பாளர்களின் நாக்கை இழுத்து அறுக்க வேண்டும், கண்களைத் தோண்டி எடுக்க வேண்டும் என்று கொக்கரித்தார். அமைச்சர் ஒருவர் மற்றோர் அமைச்சர் முன்னிலையில் இப்படிப் பேசலாமா எனக் கேட்ட யாரும் ஒன்றிய அமைச்சரின் கொலைவெறிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை.
சனாதன ஒழிப்பு என்பது சமூகநீதியை எதிரொலிக்கும் அடிப்படைக் கருத்துரிமையாகும். ஆனால் சனாதனத்தை எதிர்ப்பாளர்களின் நாக்கை அறு, கண்ணைப் பிடுங்கு போன்ற எதிரான படுகொலைப் பேச்சுகள் எந்த உரிமையின்பாற்பட்டதும் இல்லை. மாறாக இந்துத்துவப் பயங்கரவாதம் எனலாம். இத்தகைய இனக்கொலைத் தூண்டுநர்களை எங்ஙனம் இந்துச் சமயப்பற்றாளர்கள் என்று கூற முடியும்?ஆனால் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களும் எதிர்பரப்புரையால் தடுமாறி உள்ளனர். வருணாசிரம எதிர்ப்பாளர்கள் இந்நூல் போன்று உண்மையைக் கூறும் படைப்புகளை பிற மாநில மொழிகளில் மொழி பெயர்த்துப் பரப்ப வேண்டும்.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 176-178
Leave a Reply