122./133 தி.மு.க. தோழமைத் தலைவர்கள் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே! ++ 123. நிறைவான செய்தி என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்

(121/133 திமுகவில் உதயநிதி தவிர வேறு யாரும் சனாதனம் குறித்துப் பேசவில்லையே – தொடர்ச்சி)
சனாதனம் பொய்யும் மெய்யும் 122-123
- தி.மு.க. இடம் பெறும் ‘இந்தியா’க் கூட்டணியும் தி.மு.க.வின் தோழமைத் தலைவர்களும் சனாதனத்திற்கு எதிராகப் பேசி வருகிறார்களே!
- உலக அறம் கூறும் திருக்குறள்போன்ற நூல்களும் அருள்நெறி போற்றும் வள்ளலார் போன்ற அருளாளர்களும் பெரியார் மண்ணில் தோன்றியுள்ளவர்கள்போன்ற பகுத்தறிவாளர்களும் பிறக்காத வடபுலத்தே இத்தகைய சூழல் உள்ளதாலும் தேர்தல் அச்சத்தாலும் சனாதனக் கட்சிகளின் தவறான பரப்பரையில் அச்சம் கொண்டதால் இத்தகைய நிலை உள்ளது. அவர்களிடம் இதிலுள்ளவாறான விளக்கங்களை எடுத்துக் கூறிச் சனாதனத்தின் தீமையை எடுத்துரைக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை. சனாதனத்தில் ஊறிய நீதியர் சிலர் இருக்கின்ற காரணத்தால், முதற்கண் நீதித்துறையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வடக்கேயும் பகுத்தறிவாளர்களும் சீர்திருத்தவாதிகளும் தோன்றியவண்ணம்தான் உள்ளனர். எனவே,அத்தகையோரின் கருத்துகளையும் தமிழ்நாட்டில் மலர்ந்துள்ள சீர்திருத்தக் கருத்துகளையும் எடுத்துக் கூறிச் சனாதன எதிர்ப்பை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.
123. நிறைவான செய்தி என்ன?
பக்தியின் பெயரால்
ஞானம் என்ற பெயரால்
யோகம் என்ற பெயரால்
தத்துவம் என்ற பெயரால்
ஆன்மீகம் என்ற பெயரால்
கீதை பன்னிப்பன்னித்
திரும்பத்திரும்பக் கூறுவதெல்லாம்
நான்கு வருணப்பாகுபாடுதான்
என்கிறார் நாரா நாச்சியப்பன்(கீதை காட்டும் பாதை, பக். 118).
சிறந்தன என்றும் நல்லன என்றும் கூறப்படும் நூல்களில் இருந்தாலும் பொய்யாகக் கூறப்படும் தகவல்களை நம்பக்கூடாது. உயர்ந்த பொறுப்புகளில் உள்ளவர்கள் அல்லது செல்வத்திலோ செல்வாக்கிலோ உயர்ந்த நிலையில் இருந்தாலும் சனாதனப் புகழுரைகள் கண்டு மயங்கிவிடக் கூடாது. சனாதனத் தீங்குகளில் இருந்து விடுபட வீரமணி வேண்டும். இறை நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும பகுத்தறிவுடன் செயற்பட வேண்டும்.
“உலகில் மிகப் பெரும்பாலான உயிர்க்கொலைகள்
மிகப் பெரும்பாலான ஏமாற்று வேலைகள்
மிகப் பெரும்பாலான பொருள் இழப்புகள்
கடவுள் அல்லது கடவுள்களின் பெயராலேயே நடந்து வருகின்றன.
இந்தப் பொல்லாங்குகளிலிருந்து மனிதன் விடுதலை பெற வேண்டும்.
அதற்கு இந்த மாயைகளிலிருந்து மனிதன் விடுபட வேண்டும்.
அதற்குப் பகுத்தறிவு ஒன்றே சிறந்த வழியாகும்”.
(-நாரா நாச்சியப்பன், கீதை காட்டும் பாதை)
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 178-179
Leave a Reply