(சனாதனம் பொய்யும் மெய்யும் – நிறைவான செய்தி தொடர்ச்சி)

சனாதனம் பொய்யும் மெய்யும் 124

சமற்கிருத நூல்கள் தமிழ் நூல்களுக்குப் பிற்பட்டவை, தமிழ் இலக்கியக் கருத்துகளைத் திருடித் தமதாகக் காட்டுவன, காலந்தோறும் தமிழ் இலக்கியச் சிறப்புகளைச் சிதைப்பதையும் பொய்யான புகழைச்சமற்கிருத நூல்களுக்கு ஏற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ள கூட்டம் இயங்கி வருவதையும் உணர்த்துவதற்கும்தான்.

அண்டப்புளுகு, ஆகாயப் புளுகு என்றெல்லாம் கூறுவோம். இற்றைக்காலத்தில் கோயபல்சு புளுகு என்றும் கூறுவோம். இவற்றையெல்லாம் விஞ்சியது சமற்கிருத நூலார் புளுகுகள். இனி நாம், சமற்கிருதப் புளுகு என்றோ சமற்கிருத நூலார் புளுகு என்றோ பொய் மூட்டைகளுக்கு உவமையாகக் கூற வேண்டும். எல்லா இடங்களிலும் பொய்மையைக் கலக்காமல் சமற்கிருத நூலாரும் ஆராய்ச்சியாளர் எனப் பொய்யாகக் கூறிக் கொள்வோரும்  எழுதியதோ பேசியதோ இல்லை. காலங்காலமாக நடைபெறும் இப்பொய்களின் அரங்கேற்றத்திற்கு அண்மைச் சான்று ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

இந்தியாவில் சமற்கிருதம் பேசும் மக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு கருநாடக மாநிலத்தில் மாத்தூர் என்னும் சிற்றூரில் உள்ளவர்கள சமற்கிருதத்தைப் பேசி வருவதாகக் குறிப்பிடுகின்றனர். இவர்கள் எண்ணிக்கை ஐயாயிரம் என்றும் கதை அளக்கின்றனர். காசுமீரில் வேதப்பிராமணர்கள் என்போர் வாழ்கின்றனர் அங்கே சமற்கிருதம் பேசுவதாகக் கூறுவது ஏற்கும்படி உள்ளது. ஆனால் பழந்தமிழ் நாட்டுப்பகுதியாக இருந்து இப்போது கருநாடகத்தில் இருக்கும் சிற்றூர் மக்கள் எங்ஙனம் சமற்கிருதம் பேசி வருவர் என்ற ஐயம் ஏற்பட்டது. இதுபோன்ற ஐயம் பிறருக்கும் வந்திருக்கும். எனினும் புள்ளிவிவரம் தருகின்றார்களே உண்மையாக இருக்கும் என நம்பினர். நான் மாத்தூர் சிற்றூரின் மக்கள் தொகை எவ்வளவு என்று பார்த்தேன்.

கருநாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியில் உள்ள மாத்தூர் என்னும் சிற்றூரில் அறுநூறு சங்கேந்தி பிராமணர்கள்தான் வசிப்பதாக அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால், அங்கே 246 குடும்பங்கள் வசிப்பதாகவும் மக்கள் தொகை 1102 என்றும் 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இருப்பதாகக் கூறுகின்றனர். மக்கள் தொகை எண்ணிக்கை சரியாக இருந்தால் சமற்கிருதம் பேசுவதாகக் கூறப்படும் சங்கேந்தி பிராமணர்கள் எண்ணிக்கை 600ஆக இருக்கும். இவ்வூரில் 40 விழுக்காட்டிற்கும் மேலாகப்பழங்குடி மக்கள் வாழ்வதாகக் குடிக்கணக்கு கூறுகிறது. அவ்வாறு இருக்க சமற்கிருதம் பேசினாலே நாக்கை அறுப்போம் என்று அச்சுறுத்தப்படும் இவர்கள் எங்ஙனம் சமற்கிருதம் பேசுநராக இருப்பர். இங்கே வசிக்கும் 5000 மக்கள் சமற்கிருதம் பேசுவதாகச் சொல்லி விட்டார்களே. மக்கள் தொகைப்படி அவ்வளவு பேர் வசிக்கவில்லையே என உணர்ந்த பொய்யர் ஒருவர் மாத்தூரின் அருகிலுள்ள ஊர் ஓசஃகள்ளி, இரண்டும் இரட்டைச்சிற்றூர். இரண்டு ஊர்களிலும் உள்ளோர் அன்றாடப் பயன்பாட்டில் சமற்கிருதம் பேசுகின்றனர் எனக் கதை கட்டி விட்டார்.

அதற்கேற்ப மற்றோர் இடத்தில்  ஓசப்பள்ளியின் மக்கள் தொகை 11,601 எனப்பதிவிட்டுக் கொண்டனர். ஆனால் இந்திய அரசின் 2011 ஆம் ஆண்டின் குடிக்கணப்பு எனக் கூறுகிறது?  மைசூர் வட்டத்திலுள்ள ஓசஃகள்ளியில்(Hosahalli) 228 குடும்பங்கள் வசிப்பதாகவும் மொத்தமக்கள் எண்ணிக்கை 937 என்றும் கூறுகிறது. எனவே, இரண்டு சிற்றூர் மக்களின் எண்ணிக்கையைச் சேர்த்தாலும் ஈராயிரத்தைத்தாண்டாத பொழுது ஐயாயிரம் எப்படி வரும்?

கோலார் மாவட்டம், பங்கார்பபேட்டை வட்டத்தில் ஓசஃகல்லி இருப்பதாகத் திணைப்படம் கூறுகிறது.

அப்படியாயின் ஓசஃகள்ளியும் மாத்தூரும் இரட்டைச் சிற்றூர் என்பது உண்மையல்ல என்றாகிறது.

ஓசஃகள்ளி எனத் தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டத்திலும் ஓர் ஊர் உள்ளது.

 ஒருவேளை அதே பெயரிலேயே மற்றோர் ஊரும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஓசஃகள்ளி என்றால் புதிய ஊர் எனப் பொருள். தமிழர்கள் புதிதாகக் குடியேறி அமைந்த ஊராக மாத்தூர் அருகே உள்ள ஓசஃகள்ளி இருக்கலாம்.

மாத்தூரில் ஏறத்தாழ சரிபாதி பெண்கள் வசிக்கின்றனர். பெண்களுக்குத்தான் சமற்கிருதம் பேச உரிமையில்லையே. அவ்வாறிருக்க மொத்த மக்கள்தொகையினரும் சமற்கிருதம் பேசுகின்றனர் என்பதும் தவறுதானே.

இணையத்தளம் ஒன்றில் ஒருவர் மாத்தூர் குறித்து ஆராய்ந்து எழுதியுள்ளார். வெளியிட்டவர் பெயர் குத்தூசி.

அவர்  தன்னுடன் பணியாற்றும் மாத்தூரைச்சேர்ந்த  பெண்மணி ஒருவரிடம் மாத்தூர் குறித்து வினவியுள்ளார். அவர் மாத்தூரில் பேசப்படும் மொழி சமற்கிருதம் அல்ல என்றும் சங்கேதி என்பது அதன் பெயர் எனக் கூறியதாகவும் தெரிவித்தாராம். இங்குள்ள பிராமணர்கள் சங்கேதி பிராமணர்கள் என அழைக்கப்படுவதால் இதுவே சரியாக இருக்கும்.தமிழ்நாட்டில் இருந்து தமிழர்கள் இங்கு வந்து குடியேறியதாகவும்முதலில் தமிழ் பேசியவர்கள், பின்னர் கன்னடத்தையும் கலந்து பேசியதாகவும் இவ்வாறு உருவான தமிழ்க்குடும்ப மொழியே சங்கேதி என்றும் அவர் தரும் விவரங்கள் மெய்ப்பிக்கின்றன. தமிழ் – கன்னடக் கலப்புடன் சமற்கிருதத்திணிப்பும் கலக்கப்பட்டுள்ளது.  எனவே, இதனைச் சமற்கிருதம் என்று சொல்வதே தவறு.

சங்கேதி மொழியில் சில சொற்களை பார்ப்போம். தயிரு என்றால் தயிர், அரசி என்றால் அரிசி, நெல் என்றால் நெல், சாம் என்றால் சாதம், தேனு (தேன்), நைய் (நெய்), வெல்லு (வெல்லம்), மஞ்ச (மஞ்சள்), பர்ப்பு (பருப்பு), வெண்ண (வெண்ணெய்), நா (நான்), நீ (நீ), இவு/அவு/இவ/அவ (இவன், அவன், இவள், அவள்), அடு/இடு (அது,இது, நாங்க, நீங்க, அவஹ, அவஹல என்று ஏறக்குறைய தமிழ் போலவே இந்த மொழியும் உள்ளது. எடுத்துக் காட்டாகச் சில வாக்கியங்களைப் பார்ப்போம். (வாக்கை இயம்பும் சொற்றொடர் வாக்கியம் எனப்பெற்றது.)

“நா குடுத்தே” (நான் கொடுத்தேன்)

“நா சிரிச்சே” (நான் சிரித்தேன்)

“நா சாப்படவே” (நான் சாப்பிடுவேன்)

“அடு பண்ணக்கூடாடு” (அது பண்ண(செய்ய)க்கூடாது)

தமிழ் பேசத்தெரிந்த யாருமே இதனைச் சமற்கிருதம் என்று சொல்ல மாட்டார்கள். பீகாரி, மைதிலி முதலான எண்பதுக்குமேற்பட்ட மொழிகளை இந்தி மொழியாகக் காட்டும் ஒன்றிய அரசு வழக்கொழிந்து வரும் தமிழ்க்குடும்ப மொழிகளைச் சமற்கிருதம் எனக் காட்டி  வருகிறது. அதற்காக அவற்றைக் கிரந்த எழுத்தில் எழுத வேண்டும் என்றும் கூறி வருகிறது. இத்தகைய மோசடிகளில் ஒன்றுதான் தமிழ்க் குடும்ப மொழியான சங்கேதி மொழியைச் சமற்கிருதமாகக் காட்டிச் சமற்கிருதம் பேசுவோர் வாழும் ஊர் கருநாடகாவில் உள்ளது என்பதும்.

இவை தொடர்பில் மற்றொன்றையும் தெரிவிக்க விரும்புகின்றேன். இங்குள்ள மக்கள் எங்கிருந்து வந்தனர் என்பதிலும் முரண்பாடுகள் உள்ளன.

சில ஆய்வாளர்களின் கருத்துப்படி இது ஒரு தனி மொழியாகும். மதுரை வட்டாரத் தமிழர்களான சங்கேதிகள் மைசூருக்கு இடம்பெயர்ந்த பின்னர் அவர்கள் பேசிய தமிழில் கன்னடத் தாக்கம், சமத்கிருதத் தாக்கமும் அதிகரித்தது.

இவர்கள் தமிழ்நாட்டின் மதுரைப் பகுதியிலிருந்து 15ஆம் நூற்றாண்டளவில் கருநாடகத்துக்குப் புலம் பெயர்ந்தவர்கள் எனக் கருதப்படுகின்றது.

இவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில், இந்த சமுதாயத்தினைர் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து (அன்றைய திருவிதாங்கூர் சமத்தானம்) கருநாடகாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள். ஆதலால் தான் இவர்கள் சங்கேதி பிராமணர்கள் (செங்கோட்டை என்பதன் திரிபு) என அழைக்கப்படுகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை , அது தமிழ் பேசும் மக்கள் வாழும் இடமாகும்.

இவர்கள் உண்மையில் விவசாயிகளாக இருந்து பிராமணர்களாக (வருணாசிரம நியதிப்படி) மாறியுள்ளனர் என்று இவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. இது மிகப் பெரும் பொய் என்று அனைவருக்குமே தெரியும். ஏனெனில், மதம் மாறலாம், ஆனால் சாதி மாறமுடியாது என்பது அனைவரும் அறிந்ததே. வருணாசிரம நூல்களிலேயே வருணம் மாறமுடியாது என்றும் அவ்வாறு பிற வருணத்திற்குரிய தொழில்களைச் செய்தாலே பாவம் என்றும் அவ்வாறு செய்ய நினைக்கவுமே கூடாது என்றும் கூறப்பட்டுள்ளதை அறிவோம்.

(சமற்கிருதம் செம்மொழியல்ல என்னும் தொடர் உரையரங்கத்தில் இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரையில் ஒரு பகுதி.10.10.2021)

000

  • (தொடரும்)