131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – இலக்குவனார்திருவள்ளுவன்

(130./133. வேற்றுமையின் வித்தே சனாதனம்! – தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும்
- 131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள்
“இராமாயணக்கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தசுயூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படை எடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.” இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய `திராவிடரும் ஆரியரும்’ என்னும் புத்தகத்தின் 24ஆவது பக்கத்தில் இருக்கிறது. “இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும், படை வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை -ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்.” இது (உ)ரோமேசு சந்திர டட்டு எழுதிய ‘பண்டைய இந்தியாவின் நாகரிகம்’ என்ற புத்தகத்தின் 139 – 141ஆவது பக்கங்களில் இருக்கிறது.
“தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப் பட்டிருக்கிறார்கள்” இது ‘சுவாமி விவேகானந்தா அவர்களது ‘சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்’ என்ற புத்தகத்தில் ‘இராமாயணம்’ என்னும் தலைப்பில் 587 – 589 பக்கங்களில் இருக்கிறது.“ ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதன குடிமக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக்கொண்ட பதம்” தசுயூக்கள் என்பது இந்தியப் புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும். இது 1922ஆம் வருடம் வெளியிடப்பட்ட கேம்ப்ரிட்சு ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
பகைமைக்குக் காரணம்
இராமாயணக் கதையின் உட் பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்துக்கும், திராவிட நாகரிகத்துக்கும் (அவற்றின் தலைவர்களான இராமன் – இராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும். இது இராதா குமுத்து முக்கர்சு எழுதிய ‘இந்து நாகரிகம்’ என்னும் புத்தகத்தின் 141ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென் கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் மொழி. இது சர் சேம்சு மர்ரே எழுதிய புதிய இங்கிலீசு அகராதியின் பக்கம் 67 டி -யில் இருக்கிறது.“ ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயன்று முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடய மொழிகளைக் கற்றுக்கொண்டு அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.” இது பண்டர்காரின் கட்டுரைகள் தொகுதி 3, பக்கம் 10-இல் இருக்கிறது.
“தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்”
இது கிருட்டிணசாமி (ஐயங்கார் எம்.ஏ., பிஎச்சு.டி., ) அவர்கள் எழுதிய ‘தென் இந்தியாவும் இந்தியக் கலையும்’ என்ற புத்தகத்தின் 3ஆவது பக்கத்தில் இருக்கிறது.
“இராமாயணத்தில் தென் இந்தியா (திராவிடதேசம்) தசுயூக்கள் என்ற இராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
“இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகமடைந்தவர்களாய் இருந்தார்கள்”. இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய ‘இந்திய சரித்திரம்’ முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10ஆவது பக்கத்தில் இருக்கிறது. “திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், இராட்சதர்கள் என்றும் எழுதிவைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர் களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்”. இது சோசி சந்தர் டட்டு எழுதிய ‘இந்தியா அன்றும் இன்றும்’ என்னும் புத்தகத்தில் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது. ஆரியக் கடவுள்களைப் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும், தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்துகொண்டே வந்தது” – இது எ.சி. தாசு, எம்.ஏ., பி.எல்., எழுதிய ‘(இ)ரிக்கு வேத காலத்து இந்தியா’ என்னும் புத்தகத்தில் 151ஆம் பக்கத்தில் இருக்கிறது.
ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில், திராவிடர்களைத் தசுயூக்கள் என்றும், தானவர்கள் என்றும், இராட்சசர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.“ ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த அல்லலினால் இப்படி எழுதினார்கள்.” – இது சி.எசு. சீனிவாசாச்சாரி எம்.ஏ., எம்.எல். , இராமசாமி (அய்யங்கார்) எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய “இந்திய சரித்திரம் முதல்பாகம்’ என்னும் புத்தகத்தில் ‘இந்து இந்தியா’ என்னும் தலைப்பில் 16, 17ஆவது பக்கங்களில் இருக்கிறது. “ஆரியர்களில் சமற்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவில் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிட மிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக்கொண்டார்கள்”
இது எச். சி.. வெல்சு எழுதிய ‘உலகத்தின் சிறு சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 105ஆம் பக்கத்தில் இருக்கிறது.“ சாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.” – இது New Age Encyclopedia.( 1925) பக்கம் 237-இல் இருக்கிறது. “இராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்” – இது அப்போது கல்வி மந்திரியாய் இருந்த சி.சே. வருக்கி, எம்.ஏ., எழுதிய ‘இந்திய சரித்திரப் பாகுபாடு’ என்னும் புத்தகத்தின் 15ஆவது பக்கத்தில் இருக்கிறது. “விட்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும் யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது”
இது இ.பி. ஆவெல் 1918இல் எழுதிய ‘இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்’ என்னும் புத்தகத்தின் 32ஆவது பக்கத்தில் இருக்கிறது. “பாரதத்தில் இடும்பி என்று ஆரியரல்லாத ஒரு பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள, சாதி துவேசத்தால் இராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதர் என்கின்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்” – இது நாகேந்தரநாத்து கோசு பி.ஏ.,பி.எல் எழுதிய ‘இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்’ என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கம். “இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.” – இது பண்டிதர் டி.பொன்னம்பலம் (பிள்ளை)யால் எழுதப்பட்ட ‘மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ’ என்னும் புத்தகத்தில் இருக்கிறது. “இந்திய ஐரோப்பியர்களால் (அஃதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்களை (திராவிடர்களை) தசுயூக்கள் என்றும், கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக்கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது” – இது பால்மாசின் அவர்செல் எழுதிய ‘புராதன இந்தியாவும், இந்தியாவின் நாகரிகமும்’ என்ற புத்தகத்தில் 19ஆவது பக்கத்தில் இருக்கிறது. இவையும், இவை போன்றனவுமாகிய பல விசயங்கள் பெயர் பெற்ற ஆராய்ச்சியினர்களுடைய ஆராய்ச்சியிலும், பல ஆரியப் பார்ப்பனர்களுடைய ஆராய்ச்சிலும், ஆரிய வேத புராண இதிகாசங்களிலும் இருந்தே கண்டு பிடிக்கப் பட்டிருப்பவையாகும். ஆனால், ஆரியர் வருவதற்குமுன் திராவிட நாடு எப்படி இருந்தது என்பதற்கு இராமாயணத்திலேயே ஆதாரங்கள் இருக்கின்றன.
அஃதாவது, இராமாயணம் கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேடுவதற்குத் தென்பாகத்திற்கு அனுப்பப் பட்ட அனுமானுக்கு சுக்(கு)ரீவனால் சொல்லி அனுப்பப்பட்ட வழிக்குறிப்புகளில், “காவேரி நதியைத் தாண்டிப் பொருநை நதியைக் கடந்து சென்றால் பாண்டியனுடைய பொற் கதவமிட்ட மதிலரணைக் காண்பாய்” என்று சொன்னதாக, வால்மீகியார் இராமாயணத்தில் கூறுகிறார். மற்றும் அவர் கூறுவது விந்தியமலைக்கு அப்பாலுள்ள திராவிட நாட்டில் தண்டகாருண்யம் கடந்தால் பிறகு, “ஆந்திரம், சோழம், கேரளத்தோடு கூடிய பாண்டிய நாடுகளைக் காண்பீர்கள்” “அதில் தேவரம்பையர் வந்து நீராடும்படியான தெளிந்த நீரையுடைய திவ்வியமான காவேரி நதியைக் காண்பீர்கள்.” “பிறகு முதலைகள் நிரம்பிய தாம்பிரபரணியைக் காண்பீர்கள். பிறகு பொன்னிறத்ததாயும், முத்து மயமனதாயும், பாண்டியர்க்கு யோக்கியமானதாயுமுள்ள கபாடபுரத்தைக் காண்பீர்கள்.” “அப்புறம் சமுத்திரத்தைக் காண்பீர்கள். அங்கு சென்று உங்கள் காரிய நிச்சயத்தைச் செய்யுங்கள்” என்று கூறியிருப்பதாக, வடமொழி இராமாயணத்தில் காண்கிறோம். ஆகையால், திராவிட நாடு ஆரியர் இந்நாட்டிற்கு வருவதற்கு முன் மேன்மையாயும், நாகரிகத்துடனும், செல்வத்துடனும் தனிப்பட்ட அரசாட்சி உடையதாயும் இருந்து வந்திருக்கிறது என்பது விளங்குவதோடு, இப்படிப்பட்ட திராவிடமும், திராவிட மக்களும் ஆரியர் ஆதிக்கமும் கொடுமையும் ஏற்பட்ட பிறகே திராவிடர்கள் குரங்குகளாகவும், இராட்சதர்களாகவும் கற்பிக்கப்பட்டதோடு – சூத்திரன் அடிமை, மிலேச்சன், சண்டாளன், என்பது போன்ற இழிமொழிகளுக்காளாகி சூத்திரர்களுக்கு (திராவிடர்களுக்கு) ஒரு நீதியும், ஆரியர்களுக்கு ஒரு நீதியும் கற்பிக்கப்பட்ட மனுதரும நீதி வழங்கப்பட்டிருக்கிறது.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 213-217
000
Leave a Reply