(131/133. இராமாயணக்கதை – சில குறிப்புகள் – தொடர்ச்சி)

பார்ப்பன ஆசிரியர்கள் தங்களின் கீழ் உள்ள பார்ப்பன மாணவர்களுக்குத் தனிச்சலுகைகள் காட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத மாணவர்களுக்கு என்னென்ன கெடுதல்கள் செய்யமுடியுமோ, அத்தனைக் கெடுதல்களையும் தங்களால் முடியாவிட்டாலும் அடுத்தவர்களிடம் சொல்லியாகிலும் செய்வதும், இயல்பான காட்சிகளாகிவிட்டன. பார்ப்பனத் தேர்வாளர்கள் சிலர் தங்களை எவ்வாறோ அறிந்து தேடிப்பிடித்துவரும் மாணவர்களிடமும் அவர்தம் உறவாளர்களிடமும் பெருத்த தொகைகளை வாங்கி கொண்டு தேர்வு செய்வதும், பிறகு அத்தகையவர்களே ‘கல்வித் துறையில் ஊழல் மலிந்துவிட்டது’ –என்று கூக்குரலிடுவதும் மெய்ப்பிக்க முடியாத உண்மைகளாக விளங்குகின்றன. நாட்டில் ஊழல்கள் என்று பேசப் பெறுகின்றவற்றுள் பெரும்பாலானவை ஆரியப் பார்ப்பனர்களால் செய்யப் பெறுவனவே! பிற இனத்தவரை அமைதியாக ஆளவிடக் கூடாது என்பதே அவர்களின் தலையாய நோக்கம். இவர்களுக்குப் பக்கத்துணையாக நிற்பவை அவர்களிடம் உள்ள ஆங்கில, தமிழ்ச் செய்தித்தாள்களே! அவை பொய்த்துத் தள்ளுவதற்கு ஓர் எல்லையே இல்லை.

பார்ப்பனர்களின் கையுள் வலிவான செய்தித்தாள்கள் இருப்பதாலேயே அவர்கள் பொதுமக்களிடம் தங்களுக்குச் சார்பான கருத்துகளை எளிதாக உருவாக்க முடிகின்றது. இந்து, எக்சுபிரசு, மெயில் போலும் ஆங்கில நாளிதழ்களிலும் சுதேசமித்திரன், தினமணி, தினமலர் போலும் தமிழ் நாளிதழ்களிலும், கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், தீபம், கலைமகள், துக்ளக் போலும் கிழமை, மாத இதழ்களிலும் அவர்கள் எழுதும் எழுத்துகளே இந்நாட்டை ஒரு நிலையான ஆட்சிக்குக் கொண்டு வரமுடியாமல் செய்கின்றன என்றால் அது மிகையாகச் சொல்லப்பெற்ற தாகாது.

இனி, அவர்களின் தந்திர முறைகளில் இரண்டாவது தமிழில் இதுவரை வெளிவராத பழைய நூல்களை ஓலைச் சுவடிகளினின்று சமசுகிருதத்தில் பெயர்த்தெழுதிக் கொண்டு தமிழ் மூலங்களை அழித்துவிட்டுப் பின்னர், அவற்றையே மூல நூல்களாகக் காட்டிக் கொள்வது.

தமிழரிடத்திருந்து பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்” (பக்கம் 33).தமிழ்மொழியின் வரலாறு

இனி. இவ்வாறு தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் முழுவதும் தெளித்து விட்டிருப்பது ஆரியர்தம் திருவிளையாடல்களில் ஒன்று. தமிழர்களுக்குச் சார்பாகவும் நடுநிலையாளர் போலும் சில வரலாற்றுக் கருத்துகளை ஒருபக்கம் எழுதுவது; மறுபக்கம் அவர்களுக்குக் கேடானவும் முற்றும் ஆரியர்களுக்கே ஏற்றந் தருவனவுமான பல கருத்துகளை அதே நூலில் சொல்லி விடுவது. இவ்வாறு அவர்கள் எழுதுவது ஏனெனில், படிப்பவர்கள் தங்களை நடுநிலையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் கருதிக் கொள்ளட்டும் என்பதே! மேலும் திரு. வி.கோ. சூ அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தருமாறு, வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ்மொழி பெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக் கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவர்க்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்! ஆனாலும் அவர் கொட்டிய பிற நச்சுக் கருத்துகளை நாம் நினைவுகூரும் பொழுது, அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத் தானோ அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார் என்றும் கருத வேண்டியுள்ளது. அவ்வாறு அவர் அவரினத்துக்குச் சார்பாகவும் ஏற்றம் தரும் வகையிலும் அதே நூலில் கூறிய கருத்துகளையும் தெரிந்துகொள்வது நலம். (அவற்றையும் கீழே காணுங்கள்)

  • – – – – – – – – – – – – – –  –

ஐந்தாவது ஆரியத் தந்திரம், ஏற்கனவே உள்ள பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கையில் அவற்றில் உள்ள சொற்களுக்கும், கருத்துகளுக்கும் எவ்வாறாகிலும் ஆரிய வடிவம் கற்பித்து, அவர்தம் மரபோடு உரைகள், விளக்கங்கள் அடிக்குறிப்புகள் முதலியவற்றை எழுதி வெளியிடுவது ஆகும்.

  • – – – – – – – – – – –

கழக நூல்களை அவர் வெளியிடும்பொழுதெல்லாம் ‘அந்தணர்’ என்று வரும் இடங்களிலெல்லாம் அவர் ஆரியப் பார்ப்பனர் என்றே சிறப்புரையெழுதி மக்களை மயங்கச் செய்து வந்ததுடன் அவர்களின் நடையுடை பழக்கங்களை மிகவுயர்ந்தனவாகக் காட்ட, எப்படியெப்படி இட்டுக்கட்டிச் சொல்ல முடியுமோ, அப்படியப்படி யெல்லாம் தவறாமல் சொல்லியிருக்கின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைப் பார்ப்போம்.

புறநானூற்றில் ‘ஆன்முலையறுத்த’ என்று தொடரும் 34-ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல், யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று

உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக் கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடாதெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும், அதில் உள்ள 305-ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு சொற்கு ‘அவரவர் சாதி இயல்பு’ என்று விளக்கம் எழுதியுள்ளார்.

இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67-ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும் பார்ப்பணியையும் தலைவராகக் கூறியது – எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர் மனையிற் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற் குரியது’ என்றும்.

‘அறிவுடையீரே’என்று வரும் குறுந்தொகை 206-ஆம் பாட்டின் அடியில், பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரயென்று தெரிகின்றது’ என்றும்,

ஆசில் தெருவில்’ என்று தொடங்கும் 277-ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடையென்றும் சிறப்பித்தமையால் இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோற்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள் – சிற்சில பகுதிகள்

(நடைநடையாய் நடந்து தமிழ்ச்சுவடிகளைத் தேடி அலைந்த அறிஞர் உ.வே.சாமிநாதனாரே ஆயரியப்பற்ற மேலோங்கத் தவறிழைத்துள்ளார் எனில் எளியவர்களைப்பற்றி என்ன சொல்வது?)

  • (தொடரும்)

பி.கு. இதற்கு மாறாகத் தங்களைத் தமிழராக எண்ணித் தமிழராக நடந்து கொண்ட/கொள்ளும்பிராமணர்களும் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். பிராமணரல்லாதவருக்கு உதவும் பிராமண ஆசிரியர்களும் உள்ளனர். வருணாசிரமத்திற்கு எதிராக அனைவரையும் சமமாகக் கருதும் பிராமணர்களும் உள்ளனர்.

000