99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா? 100. அருத்த சாத்திரம் பொதுவான நீதி நூலா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 97-98 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 99-100
- ? 99. சனாதன ஒழுக்கத்தை அருத்த சாத்திரம் கூறுகிறதல்லவா?
- அருத்த சாத்திரம் சனாதன தருமத்தைத்தான் கூறுகிறது. ஆனால் அது மக்களுக்குரிய நல்லொழுக்கமல்ல.
நீண்ட தொலைவு பயணம் மேற்கொண்ட ஒருவரின் மனைவி அவனுடைய உறவினர் அல்லது பணியாளரிடம் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என அருத்த சாத்திரம் கூறுகிறது. தமிழ் நெறியோ பிறன் மனை விழையாமையையும் கற்பொழுக்கத்தையும் வலியுறுத்துகிறது.
மரம் முதலியவற்றால் இரவில் இலிங்கங்களைச் செய்து வைத்து, இது பூமியைப் பிளந்து கொண்டு வெளித்தோன்றிய சுயம்புலிங்கம் என்று எல்லோருக்கும் அறிவித்து அதற்குத் திருவிழா முதலியவற்றைச் செய்யுமுகமாக மக்களிடமிருந்து பொருளை ஈட்டல் வேண்டும். கடவுள், மரம் முதலியவற்றில் தெய்வம் வீற்றிருக்கிறது என மக்களை நம்ப வைப்பதற்காக, மேற்கூறிய மரங்களில் பருவமல்லாத காலத்தில் மலர், கனி என்னும் இவற்றைத் தோற்றுவித்துத் தெய்வத்தின் அருளால் ஏற்பட்டதாகக் கூற வேண்டும். இரவில் சித்த உருவினர் சுடலை முதலியவற்றிலுள்ள மரங்களில் அரக்கர் வேடம் பூண்டு தங்கியிருந்து, நாள்தோறும் ஒவ்வொரு மனிதனை எனக்கு உணவாக அளித்தல் வேண்டும். இன்றேல் அனைவரையும் ஒரே நாளில் கொன்றுவிடுவேன் என்று எல்லாரும் அறியுமாறு கூறி அங்ஙனம் அரக்கன் கூறினதாகவும் விளம்பரப்படுத்தல் வேண்டும்.
இவ்வாறு கூறும் அருத்த சாத்திரத்தை நல்லொழுக்க நூலாக ஏற்க முடியுமா? இச்சனாதனத்தை நாம் புறக்கணிக்க வேண்டாவா?
- ? 100 அருத்த சாத்திரம் குல வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவான நீதி நூலா?
- அருத்தசாத்திரத்தைப் பொறுத்தவரை சனாதன நீதியான குல தருமமே நீதியாகும். பிராமணன் எந்த வகைக் குற்றத்திற்காகவும் தண்டிக்கத்தக்கவன் அல்லன் என்கிறது. அரச தருமம் நால்வகைப்பட்ட வருணாசிரம தருமத்தைப் போற்ற வேண்டும் என்கிறது. ஒருவன் பல மகளிரை மணந்து கொள்ளலாம் என்றும் தன் மனைவியிடத்து வேறு ஒருவன் மூலம் புதல்வனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறுகிறது. வேதம் ஓதுகிறவர்களைக் கடவுள் எனச் சொல்வதன் மூலம் வேதம் ஓதும் பிராமணர்களைக் கடவுளாகத் திரிக்கிறது. நெஞ்சு பொறுக்காத வஞ்சகச் செயல்களைச் செய்ய வழி கூறுவதே அருத்த சாத்திரம். பிற சனாதன நூலைப்போல் இச்சனாதன நூலும் வேரறுக்கப்பட வேண்டியதே! தமிழ் இலக்கியங்களிலிருந்து கடன் வாங்கி நல்ல கருத்துகளை இடம் பெறச்செய்ததால் மட்டுமே இதனைப் போற்றத்தக்கதாகக் கருதக் கூடாது.
- (தொடரும்)
- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 139-140
Leave a Reply