எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்

(௬. புலமையார்: அன்றும் இன்றும் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா?
இன்று தமிழரிடையே நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே; தூய தமிழ்ப்பண்பாடன்று! பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப் பண்பாடு அல்லது அயல் பண்பாடு இழையோடியுள்ளது! தமிழ்ப்பண்பாட்டின் சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆராய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும் – தமிழ்க் குமுகாயத்திற்கும் செய்யும் நன்றிக் கடனுமாகும்.
கணியம்
தமிழ்க்கணிய முறையில் எண்ணலளவை – எடுத்தலளவை – முகத்தலளவை – நீட்டலளவை – முதலியன மாற்றப்பட்டு வேற்று நாட்டளவைகள் புகுத்தப்பட்டன. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் வழக்காறாயினும், தமிழ் மரபு சிதைய உதவுபவையாகும்.
மணிப்பவள நடை
தமிழ் மொழியில் சமற்கிருத மொழிச் சொற்களைச் சரிக்குச் சரி கலந்து எழுதினர். பிறமொழிச் சொற்களையும் கலந்தனர். இதனால், மணியும் பவளமும் கோத்தாற் போன்று தமிழ்நடையும் மாற்றமுற்று, ‘மணிப்பவளம்’ என புதிய நடை உண்டாயிற்று.
நாகரிகம்
ஆரிய நகரியத்தையே வலியுறுத்தும் சமற்கிருத நூல்களையும், புராணங்களையும் தமிழில் பெயர்த்து வெளியிட்டனர். வேடிக்கையான கதைகளான அவற்றைத் தமிழர் விரும்பிப் படித்தனர். அன்றியும், இராமாயணம்-பாரதம் போன்ற நூல்களை உடுக்கடிப் பாட்டாகவும், கதை நிகழ்ச்சியாகவும், சொற்பொழிவாகவும் மக்களிடையே பரவச் செய்தனர். இன்று, இராமாயணம் – பாரதம் இல்லாத தமிழ் படித்தார் இல்லமே இல்லையென்னும்படி பரவிவிட்டன.
அவற்றைப் படித்து – கேட்டு வந்த தமிழ் மக்கள், அவற்றில் சொல்லப்பட்ட சடங்குமுறைகளைத் தமதாக்கிக் கொண்டனர். இங்ஙனம் வடமொழி நூல்களையே விரும்பிப் படித்தும் – பாராட்டியும் வந்தமையால், தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் பழக்கத்தைச் சிறுகச் சிறுகக் கைவிட்டனர்.
மேலும், இராமாயணம் – பாரதம் படித்தாலும், பிறர் படிக்கக் காதால் கேட்டாலும் – ‘புண்ணியம்’ என்றும், ‘பாவம்’ பறந்து போகுமென்றும், வீடுபேறு (மோட்சம்) எளிதில் கிட்டுமென்றும் அந்நூல்களை எழுதியவர் கூறியுள்ளவற்றை அப்படியே ஆராயாது ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஆய்வு செய்வது குற்றமாகும்; அவர்கட்கு நரகந்தான் கிடைக்குமாம். இவற்றை நம்பிய தமிழர், தமிழ் நாகரிகத்தை மறந்து, இறுதியில் கைவிட்டனர்.
தமிழ் நூல்கள்
ஆண்டுக்கொருமுறை, ‘ஆடி மாதம் பதினெட்டாம் நாள் பதினெட்டாம் பெருக்கு’ என்று ஒரு விழாவையுண்டாக்கி, அன்று வேண்டாத தமிழ்ச்சுவடி (நூல்)களை ஆற்றில் விட்டனர்.
இதனால் இன்று தமிழர் நாகரிகம் – பண்பாடு கூறும் நூல்கள் இல்லாமற் போயின.
தமிழர்தம் பெயர்களையும், ஊர்ப்பெயர்களையும் வடமொழியில் வைத்தனர். பேச்சிலும், எழுத்திலும் சமற்கிருதத்தைப் பயன்படுத்துவதே பெருமையென்று கருதினர். இன்று ஆங்கிலத்தில் பேசுவதும் – எழுதுவதுந்தாம் பெருமைக்குரியதென்று நினைப்பது போன்றதே.
“ஒரு நாட்டு நாகரிகம் – பண்பாட்டைக் குலைக்க வேண்டுமாயின், அந்நாட்டு மொழியை மாற்றல் வேண்டும்” என்கிறார் ஓரறிஞர். இதனைத் தமிழர் இன்னும் உணர்ந்தாரிலர்.
தமிழ் மொழியில் பிறமொழிகள் கலந்தமையால், தமிழின் தூய்மை கெட்டது; கொச்சை மொழி உருவாகியது. ஒரு தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர் கூட, ‘தமிழ் கொச்சை மொழியானால்தான், அயல் மொழிக்காரர் பலரும் படிக்க எளிதாகும்’ என்கிறார். மொழி இயல்பு பற்றி அவர் அறிந்தது அத்துணையே!
தேவர்கள்
வடமொழிப் புராணங்களில் புனையப்பட்ட கடவுள்களையும், தெய்வங்களையும் தமக்குரியனவென்று பிழைபடக் கருதிவிட்டனர், தமிழர். ஆரியச் சடங்கு முறைகளைப் பின்பற்றியே திருமணம் முதலியவற்றை நடத்தினர். தேவகங்களில் நடைபெறும் வழிபாட்டிலும் வாழ்க்கைச் சடங்குகளிலும் சமற்கிருத மந்திரங்களை அறிந்த சமயக் குரவர்களையே அமர்த்தி;க் கொண்டனர்.
ஐவர்க்கும் தேவி, அழியாத பத்தினி ‘பாஞ்சாலி’ என்று பாராட்டி – அவட்குக் கோவில் கட்டி வழிபாடு செய்து- விழாக் கொண்டாடினர். இன்றும் நடைபெறுகின்றமை நாமறிவோம். தமிழர் அயல்மொழியைப் படிப்பதுடன் நின்று விடுவதில்லை. அம்மொழிக்காரர் (நாகரிகத்தையும்), நடை-உடை-பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளும் இயல்பினர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அதனாற்றான் தமிழ்ப்பண்பாடு பெருமளவு சீர்கெட்டது – சீலம் அழிந்தது.
தமிழர் கடமை
இற்றைத் தமிழர்கட்குத் தம் பண்பாடு – நாகரிகம் மறந்து போயினதன்றி, மறைந்தும் போயின. எனவே, தமிழ் நாகரிகம்- பண்பாடு மறுமலர்ச்சியடையச் செய்வதென்பது மிகவரிது. இன்று நம்மிடையே நிலவும் பழக்க வழக்கங்கள் நமக்குரியனவல்ல. ‘இறக்குமதிச் சரக்கு’ என்று சொன்னால், நம்மையே வெறுக்கின்றனர் – நம்மிடம் காழ்ப்புக் கொள்கின்றனர்- அறியாத் தமிழர்.
இன்று தமிழ் இலக்கியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து நூல் வெளியிட்டு, (பண்டாரகர்) முனைவர் பட்டம் பெறுபவர்களும், தமிழ்ப் பண்பாட்டைத் தம் ஆய்வுக்குக் கருவாகக் கொள்வதில்லை. அங்ஙனம் ஆயின், ‘பட்டம் (Ph.d.) வழங்கமாட்டார்’ என்ற அச்சம் போலும். சிலர் தம் கோட்பாட்டை இட்டுக்கட்டி இயைத்து எழுதி விடுகின்றனர்.
தமிழ்ப் பண்பாட்டை உள்ளபடியே ஆராய வேண்டுமாயின், எஞ்சியுள்ள சில பண்டைத் தமிழ் இலக்கியங்களைக் காய்தல் – உவத்தல் அகற்றி, ஆழ்ந்து படித்து- நடுநின்று ஆய்தல் வேண்டும். உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைகளை வைத்துக் கொண்டு படிக்கக் கூடாது. தாமே படித்துப் பொருள் காணல் வேண்டும். ஐயம் எழுமிடங்களில் மட்டில், உரையாசிரியர் துணையை நாடவேண்டும். ஆராயுங்கால், இப்பொழுது நடைமுறையிலுள்ள பழக்க வழக்கங்களை உளங்கொள்ளாது ஆராய்பவர், தாம் ஆராய எடுத்துக்கொள்ளும் நூல் தோன்றிய காலம் – அதன் ஆசிரியர் வாழ்ந்த காலம் – மக்கள் வாழ்க்கை முறை முதலிய சூழ்நிலைகளை உளங்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தமிழர் பண்பாட்டை உள்ளபடியே உணரமுடியும்.
இடைக்கால – பிற்கால இலக்கியங்களையும், பிற மொழியினின்றும் பெயர்க்கப்பட்ட நூல்களையும் படித்துப் பண்டைத் தமிழர் பண்பாட்டை அறியவொல்லாது.
இன்று தமிழரிடை நிலவும் பண்பாடு, கலவைப் பண்பாடே-தூய தமிழ்ப் பண்பாடன்று. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவும் அழிந்தோ – அழிக்கப்பட்டோ விட்டன. இன்றைய இலக்கியங்களில் முழுக்க முழுக்க ஆரியப்பண்பாடு அல்லது அயல்பண்பாடு இழையோடியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின்
சாயை ஆங்காங்கு காணப்படுகின்றது. அதனை நுணுகி ஆய்ந்து – கண்டு வெளிப்படுத்துவதே அறிவு சான்ற தமிழ்ப் பேரறிஞர்தம் தலையாய கடனாம். அதுவே அவர், தமிழுக்கும் – தமிழ்க் குமுகாயத்திற்கும் செய்யும் நன்றிக் கடனுமாகும்.
மலர்க – உண்மைத் தமிழ்ப் பண்பாடு!
“தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு!”
-நாமக்கல் கவிஞர்.
(நன்றி : கழகக் குரல், 28.03.76)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
Leave a Reply