எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 : Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்-இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 8 : தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 9 :
Positive, Remark, Adverse, Negative, Lodged – தமிழில்
இக்கோப்பில்
Action should be taken on 30.9.92 positively என ஆங்கிலத்தில் உள்ளது.
தமிழில் எழுதும் பலர்கூட, இவ்வாறு கோப்பில் சுருக்க ஆணைகளை அல்லது கட்டளைகளை அல்லது குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதிவிடுகின்றனர்.
பொதுவாகக் குறிப்பிட்ட நாளில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்னும் பொழுது ‘Positively’ எனக் குறிக்கத் தேவை இல்லை. எனினும் குறிப்பிட்ட நாள் அல்லது அதற்கு முன்னர் (before) நடவடிக்கை எடுக்க வேண்டிய நேர்வுகளில் இவ்வாறு குறிப்பிடலாம்.
30.9.92 அன்று தவறாமல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும்.
…. ஆம் நாளுக்கு முன்னதாகத் தவறாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
? ‘Positive’ என்பதைத் தமிழில் எவ்வாறு குறிக்க வேண்டும்?
‘Positive’ என்பதற்குப் பல பொருள் உண்டு. இச்சொல் பயன்படுத்தப்படும் துறை மின்துறையாயின் நேர்மின் ஆற்றல், இசைத்துறையாயின் துணைமேளம், ஒளிப்படத்துறையாயின் நேர்படிவம் என்பன போன்று உரியதுறைகளில் இடத்திற்கேற்றாற்போல் 30 இற்கு மேற்பட்ட பொருள்படும்.
காந்தத்தில் வடமுனையைக் காட்டக் கூடியதை Positive Pole நேர்முனை என்பர். எனினும் உலகக்கோளின் தென்துருவத்தையும் இது குறிக்கும். கட்டாயமான, மாறாத, நெகிழ்ச்சி விரிவற்ற என மேலும் பலவகைப் பொருள்கள் உண்டு.
? ‘Positive Remark’ என்பதற்கு என்ன தமிழ்ச் சொல்?
‘Remark’ குறிப்புரை, கலந்துரை கூறு, குற்றங் குறை கூறு, குறை நிறை குறிப்புரை முதலிய பொருள்களில் வரும்.
ஒன்றைப்பற்றி, அல்லாத ஒருவரைப்பற்றி ‘Positive Remark’ குறிக்கும் பொழுது சார்பானக் குறிப்பு எனப் பொருள்வரும் வகையில் சார்மக் குறிப்பு எனலாம்.
Adverse Remark எதிர்மக்குறிப்பு எனலாம்.
? இவற்றை முறையே நிறை குறிப்பு. குறை குறிப்பு என்று சொல்லலாமா?
முழுமையடைந்த குறிப்பு, முழுமையடையாத குறிப்பு எனத் தவறாகப் பொருள் கொள்ளப்படும். நற்குறிப்பு, அற்குறிப்பு எனலாம். அஃதாவது நல்லனவற்றை வெளிப்படுத்தும் நல்லபடியில் அமைந்த குறிப்பு. நல்லன அல்லாத குறிப்பு என்னும் பொருளில் கூறலாம்.
‘Adverse’ என்பதற்கு எதிரான, கேடான, தீங்கு விளைவிக்கிறதெனச் சில பொருள்கள் உள்ளன. இருப்பினும் இந்த இடங்களில்
Positive சார்மம்
Adverse எதிர்மம் என்பன பொருத்தமாக அமையும்
- Oppositive, Negative என்பனவற்றிற்கு ‘எஎதிர்’ என்பது தானே பொருள்?
ஆமாம். இருப்பினும்
Oppositive எதிர்மறை
Negative எதிர்முகம், மறுதலை, எதிர்மாறு, மறுநிலை எனலாம்.
No Further actions is necessary, this may be lodged என உள்ளது.
Lodge என்பதற்குப் புறமனை சூதாட்டவீடு, சட்டமன்ற முகப்புக் கொட்டில், ஒப்படை, புதியவை வேட்டைக் களமனை, வாயிலோன்மனை, தங்கிடம், பாதுகாப்பாய் வை, … கூடு, பதிவு (தாக்கல்) செய்
எனச் சில பொருள்கள் இருப்பினும்
பொதுவாகத் தங்கும் இடத்தையே குறிக்கிறது.
கோப்பு ஓட்டத்தைத் தடுக்கும் வகையில் தங்கச் செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் முடிவிற்கு வழிவகுப்பதால் ‘முற்றாக்கலாம்’ என்பர். எனவே இவ்விடத்தில்
“மேல் நடவடிக்கை தேவையில்லை; முற்றாக்கலாம்’ எனக் கருத வேண்டும்.
இருப்பினும்
lodged disposal ஓராண்டு முடிவு / ஓ.மு. எனப்பட வேண்டும்.
? Not Necessary; Close the file என்பதற்கு என்ன சொல்வது?
இதற்கும் அதே பொருள்தான். எனினும் வேண்டற்பாலது; கோப்பினை முடித்திடுக’ எனலாம்.
கேள்வி: அப்படியானால் Lie Over என்பதற்கு என்ன சொல்லுவது?
Lodged என்பதற்கும் Lie Over என்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளது.
இனி நடவடிக்கையே தேவையில்லை என்னும் பொழுது lodged/ முற்றாக்குக என்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலம் வரை நடவடிக்கை தேவையில்லை. அதன்பின் நடவடிக்கை தொடர வேண்டும் என்னும் பொழுது
Lie Over all still… என்கிறோம்
அஃதாவது செயல்பாட்டைக் குறிப்பிட்ட காலம் மட்டும் நிறுத்தி வைப்பதால், காலவரம்பையும் இதில் குறிப்பிடுகிறோம். எனவே தள்ளிவைப்பது அல்லது ஒத்திவைப்பதைக் குறிப்பதால்,
…ஆம் நாள் வரை நிறுத்தி வைக்கவும் எனலாம்.
இங்கு,
1. ஆண்டு நிறுத்தி வைக்கவும என்பது போல் தேவைக்கேற்ப எழுத வேண்டும்.
? “lie’என்றால் “படு’ இல்லையா?
கோப்பைப் படுக்க வை என்றெல்லாம் சொல்லக் கூடாது. பொய் என்றும்தான் பொருள் உள்ளது. அவ்வாறா எண்ணத் தோன்றுகிறது? “let Sleeping dogs lie’என்றால் தூங்கும் நாய்களைப் படுக்கவை என்றா சொல்வது? அத்தொடருக்கு “இடர் விளைவிப்பனவற்றைக் கிளற வேண்டா” என்று பொருள்.
எனவே, இடத்திற்குத் தகுந்தாற்போல் பொருள் கொள்ள வேண்டும். மேலும் கிடத்துதல் என்றால் செயல்பாடில்லாமல் கீழே வைக்கும் பொருளைத் தருகின்றது அல்லவா? அது போல் செயல்பாடில்லாமல் வைத்திருப்பதற்காக இவ்வாறு கூறப்படுகிறது.
? அப்படியாயின் kept in Abeyence என்பதற்கு என்ன குறிக்க வேண்டும்.
குறிப்பு நிலையிலோ, கருத்துரு நிலையிலோ இடைக்காலமாக/தற்காலிகமாகச் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதை “abeyence’ என்கிறோம். செயலறு நிலையை இது குறிக்கிறது.
இதனைக்
“கிடப்பில் போடவும்’ எனலாம்.
Arrange for the Meeting என இக்கோப்பில் குறிக்கப்பட்டுள்ளது.
“கூட்டத்திற்கு ஏற்பாடு செய்க’ எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு ஆங்கிலத்தில் வரும்பொழுது “Please’ இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழில் வியங்கோள் வினைமுற்றாக, செய்க, ஆய்க, மேற்கொள்க, காண்க என்பன போல் குறிப்பதே சிறப்பாகும். தனியாக அருள்கூர்ந்து (“Please’/ தயைகூர்ந்து) எனக் குறிப்பிட வேண்டா. ஆனால் மேல் அலுவலர்களுக்கும் சமநிலை அலுவலர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும்பொழுது “அருள் கூர்ந்து” என்பதைச் சேர்த்து குறிப்பதே நல்ல மரபாகும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply