சனாதனத்தை எதிர்க்கும் கபிலர் – இலக்குவனார் திருவள்ளுவன்

சனாதனத்தை எதிர்க்கும் கபிலர்
சனாதனத்தை ஆரியம் காலந்தோறும் வேருன்ற எல்லா முயற்சியும் எடுத்துக் கொண்டுள்ளது. அதே நேரம், தமிழ் உலகம் எந்த அளவில் எல்லாம் எதிர்க்க வேணடுமோ அந்த அளவில் எல்லாம் சனானத்தை எதிர்த்துக் கொண்டே வருகிறது. அவற்றில் ஒன்றுதான் கபிலர், கபிலர் அகவல் மூலம் சனாதனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பியது.
கபிலரின் பாடற் கருத்து ஒன்று வாலியின் மூலமாகத் திரைப்பாடல் ஒன்றின் மூலம் நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலி 1958இல் தன்னுடைய முதல் திரைப்பாடலை எழுதினாலும் 1961,63,64ஆம் ஆண்டுகளில் 7 படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். அதன்பின் 1964 இல் ‘படகோட்டி’ படத்தில் வாலி பாடல்கள் எழுதினார். ஆனால், இதுதான் அவரின் முதல் திரைப்படம் என மக்கள் நம்பினர். அனைத்துப் பாடல்களாலும் அவர் மக்களைக் கவர்ந்தார். அவற்றில் ஒன்றுதான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் –
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
என்னும் பாடல்.
அப்பாடலில் இடம் பெற்ற இரு வரிகள் வருமாறு:
மண்குடிசை வாசலென்றால் தென்றல்வர வெறுத்திடுமா?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம்தர மறுத்திடுமா?
என்னும் திரைப்பாடல் வரிகள்.
உண்மையில் இக்கருத்து புலவர் கபிலரால் சனாதனத்திற்கு எதிராக எழுதப்பெற்ற பாடலில் இடம் பெற்ற வரிகளில் தெரிவிக்கப்பட்டதே. ஆனால் சனாதனத்தின் வித்தாகவும் பரப்பாளராகவும் உள்ள குமுகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவ்வாறே எடுத்தாளாமல் ஏழை-பணக்காரன் வேறுபாட்டை எதிரொலிக்கும் வண்ணம் வெளிப்படுத்தியுள்ளார்.
முத்தாய்ப்பாகப் பின் வரும் கருத்துகளைக் கூறிக் கபிலர் தம் அகவற்பாவை முடிக்கிறார்.
மாரிதான்சிலரை
வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை
நீக்கிவீசுமோ
மாநிலஞ்சுமக்க
மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக்
காயேனென்னுமோ
நீணான்குசாதிக்
குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக்
குணவுகாட்டிலுமோ
திருவும்வறுமையுஞ்
செய்தவப்பேறுஞ்
சாவதும்வேறிலை
தரணியோர்க்கே
குலமுமொன்றே
குடியுமொன்றே
இறப்புமொன்றே
பிறப்புமொன்றே
வழிபடுதெய்வமும்
ஒன்றேயாதலால்
முன்னோருரைத்த
மொழிதவறாமல்
எந்நாளாயினும்
இரப்பவர்க்கிட்டுப்
புலையுங்கொலையுங்
களவுந்தவிர்ந்து
நிலைபெறவறத்தில்
நிற்பதையறிந்து
ஆணும்பெண்ணும்
அல்லதையுணர்ந்து
பேணியுரைப்பது
பிழையெனப்படாது
சிறப்புஞ்சீலமுஞ்செய்தவமல்லது
பிறப்புநலந்தருமோ
பேதையந்தணரே.
இப்பாடலடிகள் மூலம், உயர்வு தாழ்வு கற்பிக்கும் மக்களைப் பார்த்து அவர் கேட்கிறார்:
மழை தாழ்ந்தவர் எனச் சிலரை விட்டு விட்டு உயர்ந்தவர் எனச் சிலருக்கு மட்டும் பெய்யுமா?
காற்றும் சிலரை இழி குலத்தோர் என விலக்கி விட்டு உயர் குலத்தோர் என்று சொல்லிக் கொள்ளும் சிலருக்கு மட்டும் வீசுமோ?
நிலமும் உயர்வு தாழ்வு வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு தாழ்த்தப்படுபவர்களைச் சுமக்க மாட்டேன் என்று சொல்லுமோ? இவ்வாறான வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு சூரியன் சிலருக்கு மட்டும் வீசுமோ?
உணவினை மேல்சாதியினர் எனச் சொல்லிக் கொள்வோருக்கு நாட்டிலும் கீழ்ச்சாதியினர் எனக் கற்பிக்கப் படுவோருக்குக் காட்டிலுமா விளைவிக்கிறார்கள்?
செல்வம் பெறுவதிலும் வறுமை அடைதலிலும் தவப் பேற்றிலும் சாதலிலும் மனிதர்கள் இடையே வேறுபாடில்லை. அனைவரும் சமமே.
குலம், குடி, இறப்பு, பிறப்பு ஆகியவை அனைவருக்கும் ஒன்றே.
வழிபடு தெய்வம் எல்லாருக்கும் ஒன்றுதான். அது அவரவர் மனத்தில் உள்ளது. ஆதலால் முன்னோர் உரைத்த மொழியைப் பின்பற்றி வாழ வேண்டும். நல்ல நாள், கெட்ட நாள் என்றெல்லாம் பார்க்காமல், எந்த நாளாக இருந்தாலும் இரப்பவர்க்குக் கொடுக்க வேண்டும். புலை, கொலை, களவு, ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அறத்தில் ஊன்றி நிற்க வேண்டும்.
ஆண், பெண் என்னும் பாகுபாட்டைத் தவிர பிற பாகுபாட்டைக் கொள்ளலாகாது. அனைவரையும் சமமாக எண்ணிப் பேணிக்காப்பதே பிழையற்ற நெறியாகும். சிறப்பும் ஒழுக்கமும் தவமும் நலம் தருமேயன்றி நீங்கள் உயர்வு தாழ்வாகக் கற்பிக்கும் பிறப்பு நலந்தருமா? அறியாமை மிக்க பிராமணரே சொல்லுங்கள் என்று முடிக்கிறார்.
நால்வருணப் பாகுபாட்டைத் தோற்றுவித்தது, அதனடிப்படையில் மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பிப்பது, பெண்ணடிமைத்தனத்தை பரப்புவது, வருண அடிப்படையில் நீதி கூறுவது, அதற்கிணங்கச் சட்டத்தில் பாகுபாட்டை உணடாக்குவ என்ற எண்ணற்ற சனாதனக் கொடுமைகள் குறித்து முன்னரே தெரிவித்துள் ளோம்.
எனவே, சனாதனத்தை வேரறுக்கவும் தமிழ்நெறிக்கிணங்க நன்னெறியைப பேணவும், அனைவரும் அனைத்து இடங்களிலும் அனைத்து நிலைகளிலும் சமமே என்பதை வலியுறுத்தவுமே கபிலர், கபிலர் அகவல் எழுதியுள்ளார். இயற்கைப் பயன்பாடும் இறை யருளும் அனைவருக்கும் இணையாகக் கிடைப்பதே என்பதை உணர வேண்டும். எனவே, எவ்வேறுபாடும் காட்டாமல் அனைவரும் ஓர் இணை என்பதை உணர்வோம்.
எல்லாரும் ஓர்குலம்! எல்லாரும் ஓரினம்! . . . எல்லாரும் ஓர் நிறை!
எனப் பாரதி வாக்கிற்கிணங்க வாழ்வோம்!
சனாதனத்தை எதிர்த்த கபிலரை என்றென்றும் போற்றுவோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply