நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- இலக்குவனார் திருவள்ளுவன்

(நாலடி நல்கும் நன்னெறி 16: பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!- தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 17
புற அழகு அழகல்ல கல்வியே உண்மையான அழகு
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(நாலடியார் 131)
பதவுரை:
குஞ்சி யழகும்= தலைமுடி அழகும்; கொடுந்தானைக் கோட்டழகும்= வேலைப்பாடுகளாலும் வடிவமைப்பாலும் சிறந்துள்ள ஆடை அழகும்; மஞ்சள் அழகும் = மஞ்சள் பூசுவதால் ஏற்படும் அழகும்; அழகல்ல = அழகு அல்ல; நெஞ்சத்து = மனத்தில்; நல்லம்யாம் = நல்லவர்கள் நாம்; என்னும் = என்ற; நடுவு நிலைமையால் = ஒழுக்கம் தவறாத நடு நிலைமையால்; கல்வி அழகே அழகு = கல்வியின் அழகே அழகு.
பொதுவாகத் தலைமுடி ஆண்களுக்காயின் குஞ்சி என்றும் பெண்களுக்காயின் கூந்தல் என்றும் சொல்லப்படும். தலைமுடி ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுவதால் ஐம்பால் எனப்படும். அவை குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை.
குழல் என்பது சுருட்டி முடிக்கப்படுவது. அளகம் என்பது நெற்றியைச் சார்ந்த முன்னுச்சிச் சுருள்(curl) முடி. கூந்தல் என்பது பின்னித் தொங்கவிடப்படுவது. கொண்டை – கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை. இது ஐந்து வகைப்படும். அவையாவன, 1. இடுமுடிக் கொண்டை, 2. முத்துமுடிக் கொண்டை, 3. வளையம்புக் கொண்டை, 4. புரிக்கொண்டை, 5. கூட்டுக்கொண்டை.
பனிச்சை என்பது சொருகி விடப்படும் முடியையும் பிரித்துக் கட்டப்படும் சடையையும் குறிக்கும் எனலாம். துஞ்சை என்பதன் மறு பெயர் துஞ்சுகுழல் என்பதாகும்.
இவை தவிர,தலைமுடியை அழகு செய்வதால் சடை, பின்னல் போன்ற வகைகளாலும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு தலைமுடியைக் குறைத்தும் கூட்டியும் சீர்படுத்தியும் அழகு பார்ப்பது இரு பாலருக்கும் பொதுவே. எனவே, குஞ்சி என்பதால் ஆடவர் முடி திருத்தம்பற்றி மட்டும் கூறுவதாகக் கருதக் கூடாது. ஆடவர்க்குக் கூறுவது பெண்டிர்க்கும் பெண்டிர்க்குக் கூறுவது ஆடவருக்கும் பொருந்தும். எனவே, இதனைப் பொதுவாகவே கருத வேண்டும். மேலும் மஞ்சள் அழகைச் சொல்வதன் மூலம் பெண்கல்வியை நாலடியார் வலியுறுத்துவதை உணரலாம்.
கொடுந்தானைக் கோட்டழகு என்பதற்கு=வளைந்து நெளிந்து இருக்கும் ஆடையின் வனப்பு என்றும் வேலைப்பாடுகள் கொண்ட நெளிந்து வளைந்து காணப்படும் அழகிய முகப்பைக் கொண்ட முந்தானையின் அழகிய வேலைப்பாடுகள் அல்லது மடிப்புகளின் அழகு என்றும் விளக்குகின்றனர். தானை என்பது ஆடையைத்தான் குறிக்கிறது. கொடுந்தானைக் கோட்டழகு என்பதால் வளைந்தும் நெளிந்தும் நேராகவும் உள்ள கோடுகளால் ஆன கோலம்(design) கொண்ட ஆடை எனக் கொள்ள வேண்டும். எனவே வடிவமைப்பு கொண்ட ஆடை அழகு உண்மையான அழகு அல்ல என்கிறது நாலடியார்.
மஞ்சள் அழகு என்பது மஞ்சள் தூளை முகத்தில்பூசிக் குளிப்பதால் பொலிவு பெறும் மகளிரின் மஞ்சள்முக அழகினைக் குறிக்கும்.
அழகல்ல என்பது இத்தகைய வெளித்தோற்றத்தாலும் ஆடை அணிகளாலும தோன்றும் புற அழகு உண்மையான அழகு ஆகாது என்கிறது.
செயலுக்குக் காரணமான மனத்தில், தன்னை நல்லவனாக/நல்லவளாக நடந்து கொள்ளும் அற வாழ்க்கையைக் கற்பிக்கும் கல்வி அழகுதான் உண்மையான அழக. நடுவுநிலைமை என்பது நயன்மை (நீதி)நெறியைக் குறிப்பிடுகிறது.
நாலடியார் கல்வி குறித்து ஓர் அதிகாரம் மூலம் பத்துப் பாடல்கள் வழி நமக்குக் கல்வியை வலியுறுத்துகிறது. திருக்குறள் முதலான பிற இலக்கியங்களும் கல்வியைச் சிறப்பித்து வலியுறுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக ஏலாதி(பாடல் 74).யில் புலவர் கணிமேதாவியார்
இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
எனக் கல்வியே அழகு என்கிறது. இப்பாடலும் பெண் கல்வியை வலியுறுத்துவைதக் காணலாம். இவற்றையெல்லாம் நாம் உணர்ந்து நடந்தால் நூற்றுக்கு நூறு பெண்கல்வியை நாம் அடையலாம். இதன் மூலம் நாட்டைச் சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்லலாம்.
எனவே நாலடியார் முதலிய தமிழ் இலக்கியங்கள் வலியுறுத்தும் கல்வியே உண்மையான அழகு என்பதை உணர்ந்து அஃதை அடைவோமாக!
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply