(சனாதனம் – பொய்யும் மெய்யும் 113-114 தொடர்ச்சி)

நால்வருணங்களுள் பிராமணரைத் தவிர ஏனையோரைக் கீழானவராக இறைவன் கருதுவதாகத் தெரிவிக்கும் பாடல்களும் கீதையில் உண்டு. எல்லாப் பெண்களையும் கீழ் வருணத்தார் எனவும் கீழானவர்களாகவும் இழிவாகக் கூறியுள்ள நூல் எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும்?
பகவத்து கீதையின் ஆணைகள் ஒரு சார்புடையவை என்பது வெளிப்படை. எல்லா உயிர்களும் ஒத்த உயர்வுடையவை என்ற உண்மை புறக்கணிக்கப்பட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் நான்கு பகுதிகளாகப் பிரித்து அவரவர்க்குரிய தொழில்களை முறையின்றி விதி்த்துப் பெண்ணினம் முழுவதையும் தரக்குறைவாகத் தாழ்த்தி வைக்கும் குமுகாய அமைப்பு எந்த விதத்திலும் எவ்வகையிலும் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று. அதனை அறமென்று சொல்வதைச் சான்றோர் ஏற்க மாட்டார். அத்தகைய அமைப்புடைய குமுகாயத்தைக் கண்டு நல்லறிவு உடையார் அறச்சினம் கொள்வர் என்பது திண்ணம். பகவத்துகீதை பேசும் தருமம் மனித ஒருமைப்பாட்டு உணர்வுக்கு முற்றிலும் மாறானது. வள்ளுவர் சுட்டும் அறவாழ்விற்குப் பொருந்தாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் எல்லாரையும் சமமாக மதிக்கும் அறத்திற்கு எதிரான ஒருதலைச் சார்புடைய கீதை எங்ஙனம் போற்றுதற்குரியதாகும்?

இராமானுசர் தம் கீதாபாசியத்தில் கண்ணனின் பண்புகளைக் குறிக்கப் பயன்படுத்தும் அடைமொழிகள் கீதையில் இல்லாதவை. பரிபாடல், புறநானூறு முதலிய சங்க இலக்கியச் செல்வாக்கால் குறிக்கப்பெற்றவை.

மேற்குறிப்பிட்டுள்ள மனு, கீதை முதலான பல நூல்களின் தரமற்ற நிலையையும் தமிழில் இருந்து கடன் வாங்கியுள்ள கருத்துகளையும் தமிழுக்கு மூலமாகக் காட்டப்பட்ட பொய்மையின் உண்மைத் தன்மையையும் தமிழின் தொன்மையையும்பற்றி விரிவாகவே தந்துள்ளார். எனினும் அவற்றைக் கோடிட்டுக்காட்டும் முகத்தான் சிலவே இங்கே குறிக்கப்பட்டுள்ளன. முழுமையாய் அறிய, இந்நூலைப் படித்து இன்பமும் அறிவும் அடைய வேண்டுகிறேன்.

“அகரம் எழுத்துகளுக்கு முதல் என்பது பகவத்துகீதையில் சொலலப்பட்டிருக்கிறதென்றும் அதிலிருந்தே வள்ளுவர் இக்கருத்தினைப் பெற்றார் என்றும் தமிழின் உட்பகைவர்கள் பிதற்றுவர். பகவத்து கீதை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பெற்று மகாபாரதத்தில் இடைச் செருகலாகப் புகுத்தப்பட்ட தென்பதை மேலைநாட்டு வடமொழி இலக்கிய வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே, திருக்குறளிலும் பகவத்துகீதையிலும் காணப்படும் ஒற்றுமைக் கருத்துகளெல்லாம் திருக்குறளிலிருந்து பகவத்துகீதைக்குச் சென்றுள்ளன வென்பது தெளிவு.”