(வெருளி நோய்கள் 266 – 270 தொடர்ச்சி)

271. ஆலந்து வெருளி-Dutchphobia

ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது.

ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர்.

இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல்.

00

272. ஆலன் வெருளி – Alanphobia

புனைவுரு ஆலன்(Alan) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆலன் வெருளி.

அசைவூட்டத் தொடர்களில் இடம் பெறும் ஆலன் பவர் 3ஆம்   வகுப்பு மாணவன். அறிவார்ந்தவன் என அழைக்கப்பெறுகிறான்.

00

273. ஆலிவுடு வெருளி – Hollywoodphobia

ஆலிவுடு (Hollywood)  குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆலிவுடு வெருளி.

ஆலிவுடு அமெரிக்காவின் இலாசு ஏஞ்சல்சு(Los Angeles) நகரின் ஒரு பகுதி. இவ்விடத்தில்  பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை ஆலிவுடு என்றழைக்கப்படுகிறது.

ஆலிவுடு பகுதியில் உருவாக்கும் / அவற்றில் பங்கேற்கும் திரைப்படம் தொடர்பான தோல்விகள், இழப்புகள் முதலியற்றால் ஆலிவுடு குறித்துப்பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

274. ஆவிகள் வெருளி-Pneumatiphobia

ஆவிகள் குறித்த சிந்தனை, ஆவிகள் குறித்துக் கேட்டல் அல்லது படித்தல் என ஆவிகள் மீது ஏற்படும் அச்சம் ஆவிவெருளி.

ஆவிகள் பற்றிய கதைகளைக் கேட்டல், படித்தல், நாடகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள், திரைப்படங்கள் முதலியவற்றில் பார்த்தல் முதலானவற்றால் ஆவிகள்பற்றிய பேரச்சத்திற்கு ஆளாவர்.

‘pneumat’ என்னும் கிரேக்கச்சொல்லிற்கு ஆவி எனப் பொருள்.

பேய் வெருளி(Phasmophobia/Spectrophobia), ஆடி உரு வெருளி(Spectrophobia / catoptrophobia), கழுது வெருளி(Demonophobia/Daemonophobia), பூத வெருளி(Bogyphobia), அலகை வெருளி(சாத்தான் வெருளி)(Satanophobia,), அளறு வெருளி/ பாழ்வினையர் உலகு வெருளி/ நரக வெருளி(Hadephobia/Stygiophobia/Stigiophobia), சூன்று வெருளி(Wiccaphobia) ஆகிய வெருளிகளுடன் தொடர்புடையது.

00

275. ஆவித்தோற்ற வெருளி –  Spectrophobia

ஆவித்தோற்றம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆவித்தோற்ற வெருளி.

spectrum / specio என்னும் இலத்தீன் சொற்களுக்குத் தோற்றம் / உருவம் என்பன பொருள்கள்.

ஆடி வெருளி-Eisoptrophobia, ஆடி உரு வெருளி – Catoptrophobia காண்க.
ஆடி உரு வெருளி – Catoptrophobia என்பதில் குறிப்பிடும் ஆடி உரு என்பது ஆவித்தோற்றம் தெரிவதாகக் கருதுவதைத்தான் குறிப்பிடுகிறது. எனவே, அதனுடன் இணைத்தே குறிப்பிடலாம்.

00

(தொடரும்)