(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி)

கோர உருவன் என்னும் அசைவூட்டப் படப்பாத்திரத்தின் மீதான காரணமற்ற பேரச்சமே கோரன் வெருளி.
சிறு கோர உரு என்னும் பொருளிலான Pocket Monsters என்பதன் சுருக்க வடிவமே போகெமன். அல்லது பாகெமன். கோர உருவுடையவன் என்ற பொருளில் கோரன் எனலாம்.
00

கோழைநாய் வீரன் என்னும் அசைவூட்டப் பாத்திரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கோழைநாய் வீரன் வெருளி.
கோழை நாய் வீரன்(Courage the Cowardly Dog) என்பது அமெரிக்கத் திகில் நகைச்சுவை தொலைக்காடசித் தொடர். தில்வொர்த்து(John R. Dilworth) என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்நாய் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். முரியெல் பாகி(Muriel Bagge) அவர் கணவர் இயூசுடாக்கு(Eustac) ஆகியோரின் வளர்ப்பு நாய்.இது, துணிவுடன் அடக்க உருவில் இருப்பவர்களையும் எதிர்க்கும். ஆனால் அஞ்சும் இயல்பும் உள்ளது. எனவேதான் வீரன் எனப் பெயர் சுட்டியும் கோழைநாய் என அடைமொழி குறிக்கப்பெறுகிறது.
இப்பெயரில் காணாட்டமும் உள்ளது. இதன் வீரச் செயல்களைப் பார்க்கும் சிறுவர்களுக்குப் பேரச்சம் வருகிறது.
00

கோளம் குறித்த வரம்பற்ற பேரச்சம் கோள வெருளி.
கோள வடிவிலான பொருள்களைக் கண்டால் ஏற்படும் காரணமற்ற பேரச்சம் சிலருக்கு வருவதால் இவ்வெருளி உண்டாகிறது. இத்தகையோர் கோளவடிவப் பொருள்களைப் பார்த்தாலோ பயன்படுத்த நேர்ந்தாலோ பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00

கோளுதிரி(asteroid) குறித்த வரம்பற்ற பேரச்சம் கோளுதிரி வெருளி.
கோளுதிரி குறித்து முன்னர் நான் எழுதியதை இங்கே குறிப்பிடுகிறேன். விண்ணியலிலும் கணக்கியலிலும் அசுட்டிராய்டு/asteroid என்பதற்குச் சிறுகோள் என்றும் பொறிநுட்ப வியலிலும் புவியியலிலும் குறுங்கோள் என்றும் குறிப்பிடுகின்றனர். இவற்றைச் சிறுகோள்கள் என்று சொல்வதை விட வேறு பொருத்தமான சொல்லால் அழைப்பதே பொருத்தமாகும்.
விண்ணில் கோள்களின் உதிரிகளாக இருப்பவற்றைக் கோள்உதிரி > கோளுதிரி எனலாம்.
00

கோள்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கோள்கள் வெருளி.
ஒவ்வொரு கோளுக்கும் சாதகப் பாதகப் பயன் இருப்பதாக எண்ணி அதன் அடிப்படையில் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். சனி ஆகாது, செவ்வாய் ஆகாது என்று சொல்லித் திருமண உறவுகளை மறுத்தல், சில கோள்களுக்குரிய நாள்களில் நல்ல செயல்களைத் தொடங்காமை, பயணம் மேற்கொள்ளாமை எனப் பல பேரச்சங்களின் விளைவுகளைக் காணலாம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் கோள்களைப்பற்றிய பேரச்சம் உள்ளது.
00