அயல்நாடுஈழம்கவிதை

இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்

தலைப்பு-இனமானப்புலி, காசிஆனந்தன் ; thalaippu_inamaanapuli-enge_kasiananthan

 

இனமானப் புலி எங்கே?

இன்றிருந்த பகல்தனிலே
ஞாயிறில்லை!
இரவினிலும் நிலவில்லை!
விண்மீன் இல்லை!
இன்றெரிந்த விளக்கினிலே
வெளிச்சம் இல்லை!
எண்டிசையும் செடிகொடியில்
பூக்கள் இல்லை!
இன்றிதழ்கள் ஒன்றிலுமே
முறுவல் இல்லை!
இன்றெமது நாட்டினிலே
பெரியார் இல்லை!
எவர்தருவார் ஆறுதல்? இங்
கெவரும் இல்லை!

கோல்தரித்து நேற்றுலகைத்
தமிழன் ஆண்டான்!
கொற்றவனை அவனை இழி
வாக்கி மார்பில்
நூல்தரித்து மேய்ப்போராய்
நுழைந்த கூட்டம்
நூறு கதை உருவாக்கி
“பிரம்ம தேவன்
கால்தரித்த கருவினிலே
தமிழன் வந்தான்
காணீர் என்றுரைத்தமொழி
கேட்டுக் கண்ணீர்
வேல்தரித்து நெஞ்சில் வெந்
தழல் தரித்து
வெகுண்டெழுந்த பெரியாரை
இழந்து விட்டோம்!

அஞ்சுதலும் கெஞ்சுதலும்
அறியா வீரர்
அறவலியும் மறவலியும்
நிறைந்த செம்மல்
நெஞ்சுரமும் நிமிர்நடையும்
படைத்த வல்லான்
நிறைமதியும் போர்க்குணமும்
இணைந்த ஆற்றல்
துஞ்சுதலும் உடற்சோர்வும்
இலாப் போராளி
தொடுபகையும் சூழ்ச்சிகளும்
உடைத்த சூறை
நஞ்சரையும் வஞ்சரையும்
மிதித்த வேழம்
நடுவழியில் எமைநிறுத்தி
நடந்ததெங்கே?

-காசி ஆனந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *