அறிக்கைஈழம்செய்திகள்

அமெரிக்கத் தீர்மானம் அமுது தடவிய நஞ்சு – வைகோ குற்றச்சாட்டு

   vaiko04

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் அமெரிக்கத் தீர்மானத்தை அமுது தடவிய நஞ்சு எனக் கடிந்துரைத்துள்ளார்.

அமெரிக்கா, பிரித்தானியம், மாண்டிநிரோ, மாசிடோனியா, மொரீசியசு ஆகிய ஐந்து நாடுகள் மனித உரிமைக் குழுவில் மார்ச்சு 3 அன்று ஒரு தீர்மானத்தை அளித்துள்ளன.

அமெரிக்க அரசு முன்நின்று தயாரித்துள்ள இத்தீர்மானம் மிகவும் வஞ்சகமானது. வரிக்கு வரி திரும்பத் திரும்பப் படித்து அதிர்ச்சியுற்றேன்.

சிங்கள அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்து விட்டதாகவும், ஆனாலும் அதை அலட்சியப்படுத்துகிறோம் என்று சிங்கள அரசு கூறுவது, தமிழர்களுக்கான நீதியை நிலையாகக் குழிதோண்டிப் புதைக்கும் திரைமறைவு சதி வேலையாகவே தெரிகிறது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ற சொற்களின் பின்னால் கொடூரமான சிங்கள அரச பயங்கரவாதத்தை மறைத்து விட்டு, தாயக விடுதலைக்காக உலகெங்கும் பல தேசிய இனங்கள் ஆயுதம் ஏந்திய வழியில் சமர்க்களத்தில் போராடிய விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தும் நோக்கம் நன்கு தெரிகிறது.

2020- ஆம் ஆண்டில் சிங்களத் தேசத்தில் வேறு இனம் என்ற அடையாளமோ, பேச்சோ இருக்கக்கூடாது என்று  இராசபக்சே  உடன்பிறப்புகள் கூறிய கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இத்தீர்மானத்தில் தொடக்கத்தில் இனம் என்ற சொல் ஒருமுறை இடம் பெற்றது தவிர தீர்மானம் நெடிகிலும் தமிழ்த் தேசிய இனம் என்பது முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்கள் என்றே கூறப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்ட உள்நோக்கம் தெரிகிறது.

  செனீவா மனித உரிமைக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு வஞ்சகம் செய்யாமல்,  தன்னுரிமையான பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஏற்பாடு செய்யவும்,  உரிமையுடைய தமிழ் ஈழக்கோரிக்கையை அங்கீகரிக்கவும் ஆன விதத்தில் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

  அமுதம் தடவிய நஞ்சாக  அளிக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தின் ஊடாகப் புதைந்துள்ள நச்சுத்தன்மையை நீக்கி நீதிக்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் மனித உரிமைக் குழுவின் உறுப்பினர் நாடுகள் முன்வரவேண்டும்.

   இவ்வாறு  வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
UN HRC01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *