குறட் கடலிற் சில துளிகள் 39 : உழவின் பின்னே உலகம் உணர்த்தும் அறிவியல் உண்மை! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறட் கடலிற் சில துளிகள் 38. நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்! – தொடர்ச்சி)
உழவின் பின்னே உலகம்!
அறிவியல் உண்மையை உணர்ந்து அறிவியலில் சிறப்போம்!
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௲௩௰௧ – 1031)
பொழிப்புரை: பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது (கலைஞர் மு. கருணாநிதி)
பதவுரை: சுழன்றும் – உலகம் சுழன்றாலும் / சுழலும் உலகிலுள்ள மக்கள் பல தொழில் புரிந்தாலும் ; ஏர்-ஏருடையார், ஏரை உடைய உழவர்; பின்னது-வழியது, வழிப்பட்டே உள்ளது; உலகம்-உலகமக்கள்; அதனால்-அதன் காரணமாக; உழன்றும்-துன்பத்தால் வருந்தினாலும் துய்த்தும்; உழவே-பயிர்த்தொழிலே; தலை-முதன்மை.
எல்லாத் தொழிலிலும் துன்பம் உள்ளது. ஆனால், உழவுத் தொழிலில் துன்பம் மிகுதி. உழுதொழிலை எளிமையாக்கப் புதுப்புதுக் கருவிகள் வந்தாலும் வெயில், மழை, பனி முதலிய இயற்கை இடர்களைத் தாங்கிக் கொண்டு மேற் கொள்ளும் உழுதொழில் துன்பம் மிகுந்ததாகவே உள்ளது. குறைவான துன்பம் தரக்கூடிய தொழில்களில் மிகுந்த ஆதாயம் இருக்கலாம். ஆனாால், உழவுத் தொழில் நாம் வாழ்வதற்கு அடிப்படையான உணவைத் தருகிறது; உணவுடன் உடலை மறைக்கும் ஆடையாக்கத்திற்கும் உழவே உதவுகிறது. எனவே, இத்தொழிலைத் திருவள்ளுவர் போற்றுகிறார்.
உரையாசிரியர் காலிங்கர் ‘ஏர் கொண்டு வாழ்வார் தமது வழிச்சேறலே பயனுள்ள வாழ்வாம்’ எனக் கூறி விளக்கமும் தருகிறார்.
உழவுத் தொழிலைச் சிறப்பித்துக் கூறும் திருவள்ளுவர் இக்குறளில் ஓர் அறிவியல் உண்மையையும் புலப்படுத்தி யுள்ளார். உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அந்த அறிவியல் உண்மை. புவியின் சுழற்சியை முதலில் உணர்ந்தவர்கள் தமிழர்கள் அல்லவா? அந்தஉண்மையை இதில் வெளிப்படுததியுள்ளார்.
போலந்து அறிவியலாளர் நிக்கோலசு கோபர்னிகசு (Copernicus, Nicolaus;1473-1543), செருமானிய அறிவியலாளர் இயோன்னசு கெப்ளர் (Kepler, Johannes; 1571-1630) உடன் இணைந்து பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். ஆனாலும் சமயவாதிகளின் தொல்லையால் இவ்வுண்மையை அவரால் வெளியிடஇயலவில்லை. அவர் மறைந்த 6 ஆண்டுகளுக்குப் பின்னரே இவ்வுண்மை அவரது நூல்கள் மூலம் வெளிவந்தன. ஆனால், பழந்தமிழ்நாடு முடைநாற்றம் வீசும் மூடநம்பிக்கைகளில் மூழ்காமல் இருந்தமையால் இவ்வுண்மைகள் இயல்பாக மக்கள் அறியும் உண்மைகளாக இருந்துள்ளன.
சுற்றுகிறது, உருண்டையானது என்னும் பொருள்கள் அடிப்படையில் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நாம் இருக்கும் கோளுக்கு உலகம் எனப் பெயரிட்டனர் நம் முன்னோர். உலவும் உருண்டையான பூமியை உலகம் என்று எவ்வளவு பொருத்தமாக அறிவியல் நோக்கில் பெயரிட்டுள்ளனர்! உழவர்கள் பின்னே இவ்வுலகம் சுற்றுகிறது என்னும் உண்மையைக் கூறவே திருவள்ளுவர் உலகம் என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.
உலகம் நகைக்கிறது, உலகம் அழுகிறது என்பனபோன்று உலகம் என்பது ஆகுபெயராக உலக மக்களைக் குறிக்கின்றது. இங்கும் உலகம் என்பது சுற்றிக் கொண்டிருக்கும் உலகில் வாழும் மக்களைக் குறிக்கிறது.
உலவிக் கொண்டிருக்கும் உலகில் மக்கள் தத்தம் தொழில்கள் பின்னே உலவிக் கொண்டிருந்தாலும் அனைத்துத் தொழிலும் உழவுத்தொழில் பின்னரே உழவின்பின்தான். எனவே உலக மக்களும் உழவின் பின்னரே உள்ளனர். ஆகவே, உழவே தலையாயது.
இக்குறட்பா மூலம் உழவின் சிறப்பை உணர்வோம்! பழந்தமிழின் அறிவியல் வளத்தை மீட்டெடுக்கவும் புத்தறிவியலில் சிறக்கவும் அன்னைத் தமிழ்வழி அனைத்தையும் கற்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply